Kingdom in your midst

img-1_ed

Acrylic on canvas 36 X 24 inches

தானியேல் 7ஆம் அதிகாரத்தை மையமாகக்கொண்டு வரைந்த ஓவியம். ஆளும் வேட்கையில் எழுந்தும் வீழ்ந்தும் தொடரும்  உலகப் பெரும் பேரரசுகளின் நடுவில் அழியாமல் என்றும் நிலைத்திருக்கும் எளிய அரியணை. என்றோ மண் பிளந்த எளிய கடுகு விதை பரப்பிய கிளைகளுள் ஒன்றில் பறவையாய் நானும்.

சீசராவின் தாய்

motherofsisera

Acrylic on canvas 36 X 36 inches

விவிலியத்தின் மிகப் பழைய பாடல்களுள் ஒன்று தெபோராவின் பாடல். முடியாட்சிக்கு முந்தைய நீதித்ததலைவர்களின் யுகத்தில் மகத்தான நீதித்தலைவியாகவும் இறைவாக்கினராகவும் விளங்கியவள் தெபோரா. இனங்களுக்கிடையேயான கொடிய போர்வன்முறை என்பது அன்றைய யதார்த்தம். வன்முறைக்கு இலக்காகும் இடத்தில் மட்டுமே இருந்ததாக பொதுவாக நம்பப்படும் பெண்கள் எவ்வாறு வன்முறையை செலுத்தும் இடத்திலும் அன்றைய சூழலோடு இயைந்து இருந்தார்கள் என்பதை தெபோரா குறித்த அத்தியாயங்கள் தெளிவாகக் காட்டும்.

போரின் வெற்றிக்காய் கடவுளைப் புகழ்ந்து பாடுவதாக தெபோராவின் பாடல் அமைந்துள்ளது. நீதித்ததலைவியாக எதிரிகளுக்கெதிரான போரை முன்னெடுத்துச் செல்லும் தெபோரா, போரில் தோற்று ஓடும் சீசரா என்ற படைத்தலைவனைத் தன் கூடாரத்தில் அடைக்கலம் கொடுத்து அவனது நெற்றியில் கம்பியை ஏற்றிக் கொல்லும் யாவேல் என்ற பெண், பலியாகும் சீசராவை எதிர் நோக்கிக் காத்திருக்கும் அவனது தாய் என மூன்று பெண்களைப் பற்றிய குறிப்புகள் இப்பாடலில் உள்ளன. ஒரு பெண் பாடும் போர்-வெற்றிப் பாடலில் எதிரியினுடைய தாயின் மன நிலையை கற்பனை செய்து பார்க்கும் பகுதி இடம்பெறுவது பெண்ணின் ஆன்மாவை இப்பாடலுக்கு அளிக்கின்றது. அவ்வாறு கற்பனை செய்து பார்க்கப்படும் தாயின் மன நிலையும் மிக யதார்த்தமாக அன்றைய சூழலை ஒத்து பதிவாகியுள்ளது.

விவிலியத்தின் அப்பகுதி:

சீசராவின் தாய் சாளரம் வழியாக எட்டிப்பார்த்தாள். சாளரத்தில் சாய்ந்துகொண்டு அவள் கத்தினாள்; “அவன் தேர் வர ஏன் இந்தத் தாமதம்? அவன் தேர்க்குகுதிரைகளின் குளம்பொலி ஏன் இன்னும் கேட்கவில்லை?.. அவளது கேள்விக்கு அவளே விடை கூறுகின்றாள்; அவர்கள் கொள்ளைப் பொருளைக் கண்டுபிடித்துப் பங்கிடுகிறார்களோ? ஆளுக்கு ஓரிரண்டு பெண்கள்; சீசராவுக்குக் கொள்ளைப் பொருளில் வண்ண ஆடைகள்; என் தோளுக்குக் கொள்ளையடித்த வண்ண ஆடைகள்; இரண்டு பின்னல் ஆடைகள்.

-நீதித்தலைவர்கள் 5:28-30 

போரின் கொள்ளைப் பொருளாகச் சொல்லப்படும் ‘ஆளுக்கு ஓரிரண்டு பெண்கள்’ என்ற பகுதி மூல மொழியில் ‘ஒரிரண்டு கர்ப்பப்பை’ என்ற பதமாகவும் கையாளப்பட்டுள்ளது*

தாயன்பு மட்டுமல்ல, வன்முறையும், பெண்ணை ஒரு கர்ப்பப்பை என்ற அளவில் மட்டுமே சுருக்கி மதிப்பிடும் மற்றொரு பெண்ணின் மனநிலையும் இங்கு பதிவாகியுள்ளது. நல்லதை மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என்ற பாசாங்குத்தனம் இங்கு இல்லை. தொன்மையான இலக்கியத்திற்கே உரித்தான இயல்பு இது. கால ஓட்டத்தில் மாறிக் கொண்டே இருக்கும்  நன்மை தீமை என்ற அடுக்குகளைப் பற்றி அவை கவலை கொள்வதில்லை.

*Handbook on the historical books, Victor P Hamilton.

Holy Tabernacle

FullSizeRender copy

Gouache and Soft pastel on paper

அரூப ஆதி ஞானம், வார்த்தை உருக் கொண்டு தூய உடன்படிக்கைப் பேழையில் கருவாய்த் தங்கியது. கெருபுகளின் இறக்கைக் காவலில், ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் வார்த்தையைச் சுமந்து அலைந்து உழன்றது தூய பேழை.அவ்வார்த்தை, இறுதியில் தனக்கான தலைசாய்க்கும் இடத்தைக் கண்டடைந்தது. எல்லாம் வல்ல விண்ணகவாசி மண்ணில் காலூன்றும் முன் இவ்வளவு வதையை எதிர்கொள்ளும் போது,  எதுவுமற்ற மண்ணகவாசி விண்ணகம் புகும் முன் பட வேண்டிய பாடுகள் எத்தனையோ?

பெரும் பெட்டகம்

solomon

soft pastel on paper

“கடவுள் உண்மையில் இந்த மண்ணுலகில் தங்கியிருப்பாரா? வானமும் வான மண்டலங்களும் உம்மைக் கொள்ள இயலாதிருக்க நான் கட்டியுள்ள இக்கோவில் எப்படி உம்மைக் கொள்ளும்?”

-1 அரசர்கள் 8:27

கழுகும் வெண் புறாவும்

david_jesus

soft pastel on paper

“உம் கைகளை நோக்கினேன். அவை வெட்டி வீழ்த்துவோனுடையதல்ல. கருணையும், மென்மையும் குடிகொண்டவை.
உம் கண்களை நோக்கினேன். அவை கனல் நிரம்பிய மெசியாவினுடையதல்ல. இரக்கம் நிரம்பியவை.
ஆண்டவரே, உமது வழி வினோதமானது. சிறு வெண் புறாவை அனுப்பி இவ்வுலகைச் சாம்பலாக்க உம்மால் முடியும்.
விண்ணகம் நோக்கி நாங்கள் இடிமுழக்கத்தையும், கழுகையும், காகத்தையும் எதிர் நோக்கி இருக்கும் போது, நீர் எளிய வெண் புறாவை அனுப்புகின்றீர்.
இயேசுவே, நான் முன்னறிவிக்கும் மெசியா நீர்தான் எனில், நான் எதிர்பார்த்த வடிவில் நீர் வரவில்லை. ‘கனி கொடா மரங்களின் கீழ் கோடரி வைத்தாகிவிட்டது’ என நான் எச்சரித்ததெல்லாம் வீண்தானா? ஒரு வேளை, அன்பும் கோடரி தாங்க வல்லதோ?”
– திருமுழுக்கு யோவானின் கூற்றாக ‘கிறிஸ்துவின் இறுதிச் சோதனை’ நாவலில் வரும் பகுதி.

எம்மாவு விருந்து

DSC_4587_reduced

Léon Augustin Lhermitte என்ற பிரெஞ்சு ஓவியரின் ‘எம்மாவு விருந்து’ ஓவியத்தின் ஒரு பகுதியான ஏசுவின் உருவத்தைப் பார்த்து அக்ரிலிக் வண்ணம் கொண்டு இந்த ஓவியத்தை வரைந்தேன்.

விவிலியத்தில் லூக்கா நற்செய்தியில் வரும் எம்மாவு விருந்து பகுதியின் பின்னணி இதுதான்: உயிர்த்த இயேசு இரு வழிப்போக்கர்களை எம்மாவுக்குச் செல்லும் வழியில் தன்னை மறைத்துக் கொண்டு சந்திக்கின்றார், உரையாடுகின்றார். இறுதியில் அவர்களோடு தங்குவதற்கு ஒப்புக்கொண்டு உணவருந்த அமர்கின்றார். இயேசு அப்பத்தை எடுத்து பகிரும் போது,  அச்செய்கையின் அடையாளமாய் அவர்களுக்குத் தெரிந்த ஒரே நபரை அறிந்து கண்கள் திறக்கப்படுகின்றனர்.

நான் மிக விரும்பிப் படிக்கும் விவிலிய அறிஞர் John Dominic Crossan. நம்பிக்கைகளுக்கு வெளியே வந்து இலக்கியங்கள் பலவற்றை இலக்கிய நுட்பங்கள் பலவற்றை உள்வாங்கிப் பேசுபவர். அவர் எழுதிய The power of parable என்ற நூல் மிக மிக முக்கியமான நூல் என நான் கருதுகின்றேன். உவமைகள் பற்றிய வழக்கமான நூல் அல்ல அது.

வரலாறு, தொன்மம், பல நிலக் கலாச்சாரங்களின் கூறுகள் எனப் பல்வேறு அம்சங்கள் பிரிக்கமுடியாதபடி ஒன்றோடொன்று முயங்கிக் கிடக்கும் விவிலியத்தின் உள்ளே நுழைய பல நூறு வாசல்கள் உள்ளன. மேற்சொன்ன நூலில் crossan தேர்ந்தெடுக்கும் ஒரு வாசல் உவமைகள். விவிலியத்தில் எவ்வாறு உவமைகள் கையாளப்பட்டுள்ளன என்பதைத் தாண்டி, விவிலியத்தின் சில பகுதிகள், சில நூல்கள் எவ்வாறு தன்னளவில் பெரும் உவமையாய் உள்ளன என விளக்குகின்றார்.

இயேசுவின் சில உவமைகள் அதைக் கேட்பவர் மத்தியில் ஒரு கோபத்தை/எதிர்ப்புணர்வை கிளப்பும். வயல் வேலைக்கு வெவ்வேறு நேரத்தில் ஆள் எடுத்து அனைவருக்கும் ஒரே விதமான கூலியைக் கொடுக்கும் முதலாளியின் உவமை, ஊதாரி மைந்தனைக் கொண்டாடும் தந்தையின் உவமை, வழி தவறிய ஒரு ஆட்டிற்காய் தொண்ணூற்றொன்பது ஆடுகளை விட்டு விட்டுச் செல்லும் ஆயனின் உவமை எனச் சிலவற்றைச் சொல்லலாம். பழைய ஏற்பாட்டில் எவ்வாறு சில நூல்களே இத்தகைய அதிர்வைத் தரும் உவமைகளாக உள்ளன என விளக்குகின்றார் crossan.

நுட்பமாகப் பார்த்தால், இந்த உவமைகளின் மேல் யாருக்கு எதிர்ப்புணர்வு வருகின்றதோ அவர்களை நோக்கியே இந்த உவமைகள் பேசுகின்றன. இந்த உவமைகள் அவர்களுக்கானதே.

“நாங்கள் சட்டங்களை முறை தவறாது கடைபிடிப்பவர்கள். எங்களைப் போல் அல்லாதவர் அனைவரும் பாவிகள். சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்கள்” என இறுமாந்திருந்த சில யூதர்களின் காரணமாய், யூத சமுதாயத்தில் நிகழ்ந்த ஒடுக்கு முறைகளுக்கு அளவே இல்லை. இந்தப் பின்னணியில் இயேசு கூறிய ஊதாரி மைந்தன் உவமையைப் பார்க்கும் போது அது ஏன் இளைய மகனை அந்த அளவிற்குக் கொண்டாடுகின்றது என்பது புரியும்.

தன் அகங்காரம் அத்தனையையும் துடைத்தெரிந்து விட்டு தந்தையின் காலில் விழுந்து கிடக்கின்றான் இளையவன். தனக்கான உத்தமன் பட்டத்தை எதிர்பார்த்து நிற்கும் மூத்தவன் மறு புறம். தந்தைக்கு இரண்டு வழியைத் தேர்ந்து கொள்ளலாம். எல்லோரும் இணைந்து குடும்பத்தின் சுப நிகழ்வொன்றைக் கொண்டாடும் அன்பின் தருணம் ஒன்று அல்லது யார் உத்தமன் எனக் கணக்குப் போடும் தீர்ப்பின் தருணம் மற்றொன்று. இயேசுவின் தேர்வு எப்போதும் முதல் தருணமாகவே இருக்க முடியும்.

உவமைகள் வழியாகவே இயேசு பேசியிருக்கும் போது, அவரைப் பின்பற்றி நற்செய்தியை எழுதியவர்கள் ஏன் உவமை வாயிலாக நிகழ்வுகளை அடுக்கியிருக்கக்கூடாது? என்ற வாததின் அடிப்படையில் சில விவிலியச் சம்பவங்களை உவமைகள் என crossan வரலாற்றிலிருந்து பிரிக்கின்றார். அதில் ஒன்றாக எம்மாவு நிகழ்வை அழகிய உவமையாகக் குறிப்பிடுகின்றார்.

உயிர்ப்புக்குச் சாட்சி சொல்லும் ஒரு சாதாரண சந்திப்பாக அல்லாமல், அறிந்திராத வழிப்போக்கன் ஒருவனை வீட்டிற்கு அழைத்து உணவைப் பகிர்ந்துண்ணும் இயேசுவின் மையச் செய்தியைப் புலப்படுத்த எத்தனிக்கிறார் லூக்கா.

crossan மிக அற்புதமாக இப்படிச் சொல்கின்றார்: “எம்மாவு நிகழ்வு முன்பு எப்போதும் நிகழ்ந்த ஒன்றல்ல. மாறாக, என்றைக்கும் நிகழும் ஒன்று”

இயேசுவின் உயிர்ப்பை இந்த மன நிலையில்தான் நான் பார்க்கின்றேன். ஒரு அற்புதமாக அல்ல. அவரின் இருப்பை உணர்த்தும் அவரது வார்த்தைகளே அவரின் உயிர்ப்புக்குச் சாட்சி.

எம்மாவு வழியில் சந்தித்த சீடர் இவ்வாறு சொல்கின்றார்: “வழியிலே அவர் நம்மோடு பேசி, மறைநூலை விளக்கும்போது நம் உள்ளம் பற்றி எரியவில்லையா?”

நம்முள் இருக்கும் உள்ளம் பற்றி எரியச் செய்யும் மகத்தான இயேசுவின் சொற்களே அவரின் இருப்பிற்கு ஒரே சாட்சியம்.