அசோகமித்திரன்

Charcoal on paper 

ஐந்நூறு கோப்பைத் தட்டுகள் தொகுப்பில் அவர் எனக்கு எழுதித் தந்தது. இன்று இத்தொகுப்பிலிருந்து எனக்குப் பிடித்த பிரயாணம் கதையை மீண்டும் படித்தேன்.

சீசராவின் தாய்

motherofsisera

Acrylic on canvas 36 X 36 inches

விவிலியத்தின் மிகப் பழைய பாடல்களுள் ஒன்று தெபோராவின் பாடல். முடியாட்சிக்கு முந்தைய நீதித்ததலைவர்களின் யுகத்தில் மகத்தான நீதித்தலைவியாகவும் இறைவாக்கினராகவும் விளங்கியவள் தெபோரா. இனங்களுக்கிடையேயான கொடிய போர்வன்முறை என்பது அன்றைய யதார்த்தம். வன்முறைக்கு இலக்காகும் இடத்தில் மட்டுமே இருந்ததாக பொதுவாக நம்பப்படும் பெண்கள் எவ்வாறு வன்முறையை செலுத்தும் இடத்திலும் அன்றைய சூழலோடு இயைந்து இருந்தார்கள் என்பதை தெபோரா குறித்த அத்தியாயங்கள் தெளிவாகக் காட்டும்.

போரின் வெற்றிக்காய் கடவுளைப் புகழ்ந்து பாடுவதாக தெபோராவின் பாடல் அமைந்துள்ளது. நீதித்ததலைவியாக எதிரிகளுக்கெதிரான போரை முன்னெடுத்துச் செல்லும் தெபோரா, போரில் தோற்று ஓடும் சீசரா என்ற படைத்தலைவனைத் தன் கூடாரத்தில் அடைக்கலம் கொடுத்து அவனது நெற்றியில் கம்பியை ஏற்றிக் கொல்லும் யாவேல் என்ற பெண், பலியாகும் சீசராவை எதிர் நோக்கிக் காத்திருக்கும் அவனது தாய் என மூன்று பெண்களைப் பற்றிய குறிப்புகள் இப்பாடலில் உள்ளன. ஒரு பெண் பாடும் போர்-வெற்றிப் பாடலில் எதிரியினுடைய தாயின் மன நிலையை கற்பனை செய்து பார்க்கும் பகுதி இடம்பெறுவது பெண்ணின் ஆன்மாவை இப்பாடலுக்கு அளிக்கின்றது. அவ்வாறு கற்பனை செய்து பார்க்கப்படும் தாயின் மன நிலையும் மிக யதார்த்தமாக அன்றைய சூழலை ஒத்து பதிவாகியுள்ளது.

விவிலியத்தின் அப்பகுதி:

சீசராவின் தாய் சாளரம் வழியாக எட்டிப்பார்த்தாள். சாளரத்தில் சாய்ந்துகொண்டு அவள் கத்தினாள்; “அவன் தேர் வர ஏன் இந்தத் தாமதம்? அவன் தேர்க்குகுதிரைகளின் குளம்பொலி ஏன் இன்னும் கேட்கவில்லை?.. அவளது கேள்விக்கு அவளே விடை கூறுகின்றாள்; அவர்கள் கொள்ளைப் பொருளைக் கண்டுபிடித்துப் பங்கிடுகிறார்களோ? ஆளுக்கு ஓரிரண்டு பெண்கள்; சீசராவுக்குக் கொள்ளைப் பொருளில் வண்ண ஆடைகள்; என் தோளுக்குக் கொள்ளையடித்த வண்ண ஆடைகள்; இரண்டு பின்னல் ஆடைகள்.

-நீதித்தலைவர்கள் 5:28-30 

போரின் கொள்ளைப் பொருளாகச் சொல்லப்படும் ‘ஆளுக்கு ஓரிரண்டு பெண்கள்’ என்ற பகுதி மூல மொழியில் ‘ஒரிரண்டு கர்ப்பப்பை’ என்ற பதமாகவும் கையாளப்பட்டுள்ளது*

தாயன்பு மட்டுமல்ல, வன்முறையும், பெண்ணை ஒரு கர்ப்பப்பை என்ற அளவில் மட்டுமே சுருக்கி மதிப்பிடும் மற்றொரு பெண்ணின் மனநிலையும் இங்கு பதிவாகியுள்ளது. நல்லதை மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என்ற பாசாங்குத்தனம் இங்கு இல்லை. தொன்மையான இலக்கியத்திற்கே உரித்தான இயல்பு இது. கால ஓட்டத்தில் மாறிக் கொண்டே இருக்கும்  நன்மை தீமை என்ற அடுக்குகளைப் பற்றி அவை கவலை கொள்வதில்லை.

*Handbook on the historical books, Victor P Hamilton.

சம்ஸ்காரா

samskaraயு. ஆர். அனந்தமூர்த்தியின் சம்ஸ்காரா நாவலில் வரும் ஒரு நிகழ்வு. wacom tablet மூலம் வரைந்தது.

துர்வாசபுரத்து அக்ரஹாரத்தில் பிளேக் நோயினால் மரணமடையும் நாரணப்பாவிற்கு முறைப்படி இறுதிச் சடங்கு செய்வதில் எழும் சிக்கல்தான் நாவலின் தொடக்கம். அத்தனை ஆச்சாரங்களையும் தூக்கி எறிந்து தன் செயல்களால் அக்ரஹாரத்தை ஆட்டிப்படைக்கும் நாரணப்பா தன் மரணத்திற்குப் பிறகும் அவர்களை நிம்மதி இழக்கச் செய்கிறான். வாரிசு அற்ற நாரணப்பாவின் இறுதிக் கடன்களை செய்யக் கடமையுள்ள உறவினர்கள் இருவர் – கருடாச்சாரியார் மற்றும் லட்சுமணாச்சாரியார். இருவருக்கும் நாரணப்பாவோடு குடும்பத் தகராறு உண்டு. இறுதிச் சடங்கு முடியும் முன் யாராலும் உணவு கொள்ள முடியாது. அக்ரஹாரத்தில் யார் இறுதிச் சடங்கு செய்தாலும் அவர்களது ஜாதிச் சலுகைகளுக்கு பங்கம் விளையும். பக்கத்து ஊரான பாரிஜாதபுரத்து அக்ரஹாரத்தில் வசிக்கும் ஸ்மார்த்த பிராமணர்களுக்கு துர்வாசபுரத்து மாத்வா பிராமணர்களை எள்ளி நகையாட இது ஒரு வாய்ப்பாகவும் அமையும்.

துர்வாசபுரத்துக்கே ஞான குருவாக விளங்கும் பிரானேஷ் ஆச்சாரியாவிடம் எல்லோரும் முறையிட அவரது வீட்டில் கூடுகின்றனர். நாரணப்பா மனைவியை விரட்டி விட்டு பிராமண ஜாதியைச் சேராத சந்திரி என்ற பெண்ணை தன்னோடு சேர்த்துக் கொண்டவன். சந்திரியும் பிரானேஷ் ஆச்சாரியாவின் வீட்டில் பிராமணக் கூட்டதிற்கு மத்தியில் நிற்கிறாள். அத்தனை பேருக்கும் அவள் மீது அடங்கா வெறுப்பு. கருடாச்சாரியாரும் லட்சுமணாச்சாரியாரும் அவரவர் பங்குக்கான தர்க்கங்களைச் சொல்லி நாரணப்பாவின் இறுதிக் காரியத்தை செய்ய மறுக்கின்றனர்.

இந்தத் தருணத்தில் சந்திரி தன் நகைகளை கழற்றி பிரானேஷாச்சாரியார் முன் வைத்து, அழுகிக் கொண்டிருக்கும் நாரணப்பாவின் பிணத்தை எரியூட்ட மன்றாடுகிறாள்.

ஒழுக்க நெறிகளையும், ஆச்சாரங்களையும் மேல் பூச்சாகக் கொண்டு உள்ளுக்குள் அழுகிப் போனவர்களாய் உலவும் துர்வாசபுரத்து பிராமணர்களை எதிர்த்துதான் அத்தனை கலகங்களையும் செய்தான் நாரணப்பா. எதைப் பாவமென்றும் தீட்டென்றும் நினைத்தார்களோ அவை அத்தனையும் செய்தான். பிளேக் நோய் பிடித்து இப்போது நாரணப்பா அழுகிக் கொண்டிருக்கின்றான். பிண வாடை அக்ரஹாரம் முழுதும் காற்றோடு கலந்திருக்கிறது. துர்வாடை ரூபத்தில் ஒவ்வொரு வீட்டிலும் நாரணப்பாவின் பிணம் கிடக்கின்றது.

பரவிக் கொண்டிருக்கும் பிளேக் நோயால் ஊருக்குள் இருக்கும் எலிகள் அத்தனையும் குவியலாக வெளிக் கிளம்பி மடிந்து விழுந்தவண்ணம் இருந்தது . சந்திரி நகைகளை பிரானேஷாச்சாரியார் முன் வைத்த அந்த நிகழ்ச்சியும் மனக் கீழ்மையின் பல்வேறு குவியல்களை வெளிக் கொணர்ந்து தரையில் மிதி பட வீழ்த்தத் தொடங்கியது.

நாரணப்பாவை கோபத்தால் பொசுக்கிய கருடாச்சாரியாரின் மனைவியும், லட்சுமணாச்சாரியார் மனைவியும் இப்போது சந்திரி ஒப்படைத்த நகையை அடைய வேண்டி தத்தம் கணவர்களை நாரணப்பாவின் இறுதிச் சடங்கை நிறைவேற்ற தூண்டுகின்றனர். இருவரும் குழைந்து கொண்டு பிரானேஷாச்சாரியாரை அணுக, சந்திரியின் பெருந்தன்மையும் அன்பும் கிளரிவிட்ட கீழ்மைக் குணங்களை கண்ணுற்று மனம் கசந்து போகிறார் பிரானேஷாச்சாரியார்.

பிக்காஸோவின் பல தொடர் ஓவியங்கள்தான் எனக்கு நியாபகத்திற்கு வருகின்றது. ஒரு குறிப்பிட்ட பேசுபொருளை எடுத்துக் கொண்டு அதன் அத்தனை ஓவியச் சாத்தியங்களையும் செய்து பார்த்திருப்பார் பிக்காஸோ. கித்தார், காளை, ஆடு என பல தொடர் படைப்புகள் உண்டு. ஒரே விஷயத்தை பல வடிவங்களில், பல ஊடகங்கள் வழியாக வரைய/சிற்பமாக்க முயன்றிருப்பார். சம்ஸ்காராவில் யூ.ஆர்.அனந்தமூர்த்தியும் இதைத்தான் செய்தாரோ எனத் தோன்றுகின்றது. ஒரு கட்டுக்கோப்பான அமைப்பை/ஒழுங்கை ஏதோ ஒன்றைக் கொண்டு சிதைத்தால் எஞ்சுவது என்னவாக இருக்கும். என்னென்ன கேள்விகளை அது உருவாக்கும். என்னென்ன பதில்களை அது அளிக்கும். நாவலின் அத்தனை பக்கங்களிலும் இதைக் காணலாம்.

அக்ரஹார ஒழுங்கு – அதைச் சிதைக்கும் நாரணப்பா. நாரணப்பாவிற்கு இறுதிச் சடங்கை செய்ய மறுப்போர் சொல்லும் பிழையில்லா தர்க்க நியாயங்கள் – அவற்றை கேலிக் கூத்தாக்கிச் சிதைக்கும் சந்திரியின் செயல்(நகையை அளிப்பது). ஊரே புகழும் பிரானேஷாச்சாரியாரின் பிரம்மச்சரியமும், ஞானமும்- அவரோடு உறவு கொள்வதன் மூலம் அவற்றைச் சிதைக்கும் சந்திரி. இந்த இணைகள் பல்வேறு வடிவங்களில் திரும்பத் திரும்ப தோன்றிக் கொண்டே இருக்கின்றது.

பிரானேஷாச்சாரியாவுக்கு பிரம்மச்சரியம். நாரணப்பாவிற்கு காமம். தசாச்சாரியாவுக்கு பசி. லட்சுமி தேவம்மாளுக்கு சாபமாய் உருக்கொண்ட மனித வெறுப்பு. இப்படி ஒவ்வொரு மாந்தருக்கும் ஒவ்வொரு பிடிப்பு. நாவலின் மாந்தர்கள் பல்வேறு குணநலன்களை உடைய பல்வேறு சூழல்களில் வாழக்கூடியவர்கள். ஆனால்  பல திசைகளில் பயணிக்கும் அவர்கள் குறுக்கே சந்தித்துக் கொள்ளும் புள்ளிகள் உண்டு. பிராமணீயத்தை தான் விட்டாலும், பிராமணீயம் தன்னை விடாத நாரணப்பா. ஆசையைத் தான் துறந்தாலும் ஆசை தன்னை துறக்காமல் துரத்தும் பிரானேஷாச்சாரியார். அக்ரஹாரத்தின் துர்சகுனமாய் விளங்கும் லட்சுமிதேவம்மா என்ற விதவை நாரணப்பாவின் மற்றொரு வடிவமே. நாவலின் இறுதிப் பகுதியில் பிரானேஷாச்சாரியார் அடையும் தரிசனம் இந்த ஒற்றைத் தன்மையைத்தான். புட்டா என்பவனொடு சேர்ந்து கொண்டு தான் இதுவரை பழகாத உலகத்தை தரிசிக்கும் போது பிரானேஷாச்சாரியார் அடையும் உணர்வு இந்த உபநிடதத் ததுவம்தான் ‘நீயே அது'(தத் த்வம் அசி).

சிக்கலான ஒற்றைப் பேசுபோருளை பல்வேறு மாந்தர்களின் மேல் ஏற்றி பல வண்ணங்களில் பண்பாடு எனும் மாபெரும் கித்தானின் மீது அனந்தமூர்த்தி வரைந்த மிக அழகான ஓவியம் இந்த சம்ஸ்காரா.

தாங்கும் கரங்கள்

station_07

Wacom Tablet மூலம் சமீபத்தில் வரைந்த ஓவியமிது. என்னுடைய தமிழாசிரியர் எழுதிய சிலுவைப் பாதை பதிவுக்காக, பதினான்கு ஸ்தலங்களுக்கும் ஓவியங்களை வரைந்து கொடுத்தேன். அப்பதிவை இங்கு காணலாம்.

பால் சக்காரியாவின் ஒரு சிறுகதை. “அன்னம்மா டீச்சர் – சில நினைவுக்குறிப்புகள்” என்ற அந்த கதை “யேசு கதைகள்” என்ற வம்சி பதிப்பகத்தின் தமிழ் தொகுப்பில் உள்ளது. மதக் கட்டுக்களிலிருந்து விலக்கிப் பார்க்கப் பட வேண்டிய உண்மையான யேசுவை புரிந்து கொள்ள உதவும் முக்கியமான கதையிது.

தன் செயல்கள் மூலம் தனது செய்தியை நேரடியாகச் சொன்னவர் யேசு. எல்லோரும் புறக்கணித்தவையே அவரது தேர்வாக இருந்தது. அன்பின் ஒளி புகாத இருண்ட பகுதிகளே அவருக்கான உறைவிடம்.

பால் சக்காரியாவின் மேற்சொன்ன கதையில் வரும் அன்னம்மா தனது குடும்பத்தின் சுயநலத்துக்காய் தனது சொந்த வாழ்வு மொத்தத்தையும் இழக்கும் பெண். அத்தனை உறவுகள் இருந்தும் யாருமற்ற நிலை. அவளது மரணம் குடும்ப வருமானத்தின் மீதான அடியாகவே எதிர்கொள்ளப் படுகின்றது. மரணச் சடங்குகளில் சிறு தொகை கூட அப்பாவால் சேமிக்கப்படுகின்றது. காதல் விவகாரமோ, பாலியல் சம்பந்தமாகவோ மரணம் நிகழவில்லை என்ற மரண அறிக்கையின் முடிவுக்காய் திருப்திப்பட்டுக் கொள்கிறது குடும்பம். அவளது சொற்பமான வாழ்வின் சொற்பமான சம்பவங்கள் கதையில் சொல்லப்படுகின்றது. 33 வயதை தாண்டிய போது தனது தம்பியாக யேசுவை நினைத்துக் கொள்கிறாள் அன்னம்மா. உறவுகள் இருந்தும் கற்பனையில் ஒரு புது உறவை உருவாக்கிக் கொள்வதென்பது  அன்பின் தீவிரமான போதாமையே. தனக்குள்ளேயே அத்தம்பியிடம் பேசிக்கொள்கிறாள். புனித வெள்ளிகளில் யாருக்கும் தெரியாமல் அவனுக்காய் அழுவாள். அப்படி அழும் போது ஒரு நாள் அவனை இப்படிக் கேட்பாள்: “பாவம், என்ன வேதனையுடன் நீ இறந்தாய். இன்றைய உன் மகிமையைக் கனவு காணக் கூட உன்னால் முடிந்ததா? சிலுவையின் மேல் உன் அலறல் பெரிய அலறலாகத்தான் இருந்ததோ?யேசுவே நீ எவ்வளவு அப்பாவியாக இருந்தாய்”.

தேவாலய வழிபாட்டுக் கூச்சலுக்கு நடுவே ஒரு முறை இப்படிச் சொல்வாள்: “இந்த இரைச்சலுக்கிடையில் இந்த மக்கள் உன்னிடம் சொல்வதென்ன? இதற்காகத்தானா நீ வெயிலிலும் மழையிலும் இருட்டிலும் அலைந்து அடியும் உதையுமேற்று அழுது இறந்தது? பாவம் தம்பி!”

ஒரு புனித வெள்ளி நாளன்று அன்னம்மாவின் மரணம் குளத்தங்கரையில் நிகழ்கின்றது. ஆம் மரணம் தன் கோர முகத்துடன் அல்லாமல் மிக இயல்பாய் அவளை மென்மையாய் ஆட்கொள்கின்றது. அவளை தம்பியான யேசு அப்போது தாங்கிக் கொள்கிறான். அப்போது அவன் ‘தூங்கு அக்கா, ஓய்வெடுத்துக் கொள். எனக்கு இன்றும் சக்தியொன்றும் இல்லை. நீ தளர்வுற்று விழும்போது தாங்குவதற்காக மட்டுமே நான் வந்திருக்கிறேன்’ என்கிறான். அன்னம்மாவை புற்களின் மேல் படுக்க வைத்து விட்டு கார்மேகங்களில் ஒரு புள்ளியாய் மறைந்து போகிறான். அந்த மேகங்கள் மழை பொழிந்து அவளைக் கழுவுகின்றது.

அன்பின், கருணையின் போதாமை உலகில் இருக்கும் வரை யேசுவின் தேவை இருந்து கொண்டேதான் இருக்கும். தளர்வுற்று விழுகின்றவர்களைத் தாங்கும் அருமை சுமந்து விழுந்தவனுக்கே தெரியும்.

முராகமியின் புத்தன்

DSC_2471_1

சென்ற மாதம் படிக்கத் துவங்கிய நாவல் kafka on the shore. ஜப்பானிய எழுத்தாளர் ‘ஹருக்கி முராகமி'(Haruki murakami) எழுதிய நாவலின் ஆங்கில மொழியாக்கம். இன்றுதான் படித்து முடித்தேன். வாஸந்தியின் ‘விட்டு விடுதலையாகி’ என்ற நாவல் மூலமாகத்தான் இந்த நாவலைப் பற்றி அறிந்தேன். நான் படிக்கும் முதல் மீவியற்பியல்(metaphysical) நாவலிது. அடுக்கடுக்காக பல கனவுகள் வழியே சென்று திரும்பியது போன்றதொரு அனுபவம். மேலுள்ள ஓவியம் நாவல் படித்துக் கொண்டிருந்த போது வரைந்தது. சார்க்கோல் மற்றும் பேஸ்டலில் ஆரம்பித்து இறுதியில் அக்ரிலிக் வன்ணம் கொண்டு வரைந்து முடித்த படம்.

நாவலில் வரும் ‘நகாடா’ என்ற பாத்திரத்தை மையமாக வைத்து இந்த ஓவியத்தை வரைந்தேன். நாவலின் முதன்மைப் பாத்திரம் காஃப்கா என்ற 15 வயது சிறுவன். வயதான நகாடா முக்கியமான மற்றொரு மையப் பாத்திரம்.

சிறு வயதில் ஒரு வினோத விபத்தில் தனது அறிவுத் திறன் மொத்தத்தையும் இழக்கிறான் நகாடா. எழுதும் திறன், வாசிக்கும் திறன், அரூபச் சிந்தனை என அத்தனை அறிவு நுட்பத்தையும் இழந்து விடுகிறான். ஒரு மனிதனுக்குரிய எந்தவொரு திறனும் அற்று அரசாங்கத்தின் உதவித் தொகையுடன் வாழ்கிறான்.

நேரம், கிழமை போன்றவற்றின் கணக்குகள் தெரிவதில்லை. குறிப்பிட்ட அளவுக்கு மேலான பணத்தின் மதிப்பை புரிந்து கொள்ள முடிவதில்லை. சில நேரங்களில், தூங்க ஆரம்பித்தால் நாள் கணக்கில் தூங்குபவன். தனக்கு நிதியுதவி தரும் கவர்னர்தான் நாட்டின் மொத்த அரசாங்கம் என நினைப்பவன். தனது வசிப்பிடம் தாண்டி வெளியே எந்த ஊர்களுக்கும் செல்வதில்லை. அவனது பல வருட உழைப்பில் கிடைக்கும் பணத்தை அவனது உறவினன் ஒருவன் ஏமாற்றும் போதும் அதை நினைத்து துளியும் கவலை கொள்ளாதவன். காமத்தை அறியாதவன். தேர்வு செய்ய பல இருப்பினும் குறிப்பிட்ட ஒன்றை மட்டும் திரும்பத் திரும்பப் பற்றிக் கொள்பவன். இப்படி தனக்குள்ளேயே தனியாளாக முடங்கிக் கொள்ளும் நகாடா தன் சிறு வயது விபத்தில் சந்திப்பது இழப்பை மட்டுமல்ல. தனது இழப்புகளுக்கு ஈடாக ஒரு விசித்திரத் திறனை தனக்குள் கண்டடைகிறான். அதுதான் பூனைகளுடன் பேசும் திறன்.

பூனைகளின் மொழியைப் புரிந்து கொள்ளவும் அவற்றோடு உரையாடவும் அவனால் முடிகின்றது. இத்திறனைக் கொண்டு காணாமல் போகும் பூனைகளைக் கண்டுபிடித்து உரியவர்களிடம் கொடுத்து பணம் பெற்றுக் கொள்கிறான். அப்படிக் காணாமல் போன கோமா என்ற பூனையொன்றை தேடிச் செல்லும் போதுதான் ‘கவமுரா’ என்ற பூனையைச் சந்திக்கிறான். எல்லாப் பூனைகளுடனும் எளிதாய்ப் பேச முடியும் அவனால் கவமுராவுடன் பேச முடிவதில்லை. அவனால் அப்பூனை பேசுவதை விளங்கிக் கொள்ள முடியவில்லை. கிட்டத்தட்ட மனிதரில் நகாடா எப்படி தன் இயலாமைகளினால் தனிப் பிறவியாய் இருக்கிறானோ, அது போலவே கவமுராவும் இருக்கின்றது. கவமுரா அப்படி இருப்பதற்கும் ஒரு விபத்துதான் காரணம். தன்னை அப்பூனையோடு அடையாளப்படுத்திக் கொள்கிறான். நகாடா மிகத் தேர்ந்த தச்சனும் கூட. வருடக் கணக்காக மர வேலைப்பாடுகளை செய்நேர்த்தியுடன் செய்து வந்தவன். காலப்போக்கில் அத்தொழில் நலிவடைந்தபின்னர் கவர்னரின் நிதியுதவியுடன் வாழத் தொடங்கியவன்.

நாவலெங்கும் அதிகமாக கலந்திருக்கும் இசை, காமம், அறிவுஜீவித் தனம் ஆகியவை நகாடா என்ற பாத்திரத்திடம் சுத்தமாக இருப்பதில்லை. அலுப்பைத் தரக் கூடிய இந்த தட்டையான குணாதிசயமுடைய நகாடா பல பரிமாணங்களில் நம்மை வியக்க வைக்கும் பாத்திரம். முக்கியமாக ஒரு கொலைச் சம்பவத்தினால் தன் வசிப்பிடம் தாண்டி வெளியே பயணம் செய்ய நேரிடும் போது நகாடாவின் பாத்திரம் இன்னும் பல நுட்பங்களோடு பிரமாண்டமாகின்றது. தனக்குள் ஒழிந்திருக்கும் தச்சுத் திறமையை பயன்படுத்தி தனது பயணத்தில் சந்திக்கும் ஹோஷினோ என்பவனின் முதுகுவலியை குணப்படுத்துகிறான்.

ஹோஷினோ உள் நுழைந்த பிறகு இசையின் பங்கு நாவலில் அதிகமாக வெளிப்படுகிறது. நகாடாவின் சித்தரிப்பும்  சம்பவங்களும் இன்னும் சிக்கல் மிகுந்ததாக மாறுகின்றது. இந்தப் பகுதிகளில்தான் நகாடாவை புத்தனாக நாவல் அடையாளம் காண்கின்றது. சலனமற்ற நகாடா ஹோஷினோ மீது ஏற்படுத்தும் சலனம் மிகப் பெரியது. நகாடாவின் பிணத்தை அறையில் வைத்துக் கொண்டு ஹோஷினோ பேசும் விஷயங்கள் நாவலின் முக்கியமான பகுதி. நாவல் முடிவை நெருங்கும் போது காட்டிற்குள் இருக்கும் மர்ம நகரத்திற்குள் காஃப்கா செல்கிறான். அந்த வினோத நகரில் நேரம் என்பதே கிடையாது. நினைவுகள் கிடையாது. எழுத்துக்களோ, புத்தகங்களோ, ஓவியங்களோ கிடையாது. அந்த நகரம் கூட நகாடாவின் குணாதிசயத்தின் நீட்சி போலவே உள்ளது.

நாவலின் ஒரு துளிதான் இந்த நகாடா. இதைப் போன்ற எண்ணற்ற அதிசயங்கள் நிரம்பிச் சிந்தும் ஒரு கனவு வெள்ளம் இந்நாவல். ஜானி வாக்கர், KFC-ன் முதலாளி கல்னல் சாண்டர்ஸ் என இன்னும் சில விசித்திரமான கதைமாந்தர்கள், காஃப்காவையும் ஷேய்கியையும் வைத்து ஒடிபஸ் தொன்மத்தின் அடிப்படையில் பின்னப்பட்டுள்ள கதை, ஒரு அத்தியாயத்தில் ஒரு பாத்திரம் மூலம் சொல்லப்படும் தத்துவத்தை அடுத்த அத்தியாயத்தில் வேறொரு பாத்திரம் மூலம் பினைத்தல், இதையெல்லாம் தாண்டி மிக முக்கியமாக முராகமியின் எழுத்தில் வெளிப்படும் கட்டுக்கடங்காத கற்பனை எல்லாம் சேர்ந்து நம்மை ஒரு கனவு மனநிலைக்குக் கொண்டு செல்கின்றது இந்த நாவல்.

கவிதைகள்

colorஅக்ரிலிக் வண்ணம் கொண்டு பேப்பரில் வரைந்த ஓவியமிது.

இதுதான் முடிவான அர்த்தம் என்று ஒரு எல்லையை வகுத்துக் கொள்ளாமல் ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் புது அர்த்தங்களையும் புது அனுபவங்களையும் வாரி வழங்கிக் கொண்டே இருக்கிறது – கவிதை என்ற இந்த விநோதம்.

மற்றுமொரு முறை மனுஷ்ய புத்திரனின் கவிதைத் தொகுப்புகளை(பசித்த பொழுது, நீராலானது) வாசிக்கும் போது இரண்டு விஷயங்கள் திரும்பத் திரும்ப தென்பட்டன:

1. சின்னஞ் சிறியவைகளின் உலகம்.
2. நினைவுகள் சார்ந்து தனித்தன்மை கொள்ளும் நிகழ்வு, இடம், பொருள், மனிதர்கள்.

பயமற்ற வாழ்வு, கடைசியாக, ஒரு நிமிடம் பெய்த மழை என பல கவிதைகளை முதல் வகைக்கு உதாரணமாகச் சொல்லலாம்.

கவிதை வரிகளை தனியே எடுத்து மேற்கோள் காண்பிப்பது, கவிதையின் உறுப்புகளை தனியே அறுத்தெடுப்பது போன்றது. ஆனால் சில நேரங்களில் இந்தக் குற்றத்தை செய்வதைத் தவிர வேறு வழியில்லை.

‘கைகளில் நில்லாதது’ என்ற கவிதையில் வரும் வரிகள் இவை:

‘இன்று
ஓர் இலை உதிர்ந்தபோது
ஒரு மரம் அதிர்ந்ததைப் பார்த்தேன்’

இந்த வரிகள் ஒரு கணத்தில் கண்கள் கலங்கச் செய்தன. இந்த வரிகளை தனியே எடுத்ததால் அந்தக் கவிதையும் ஒரு பெரும் அதிர்வைச் சந்தித்திருக்கலாம்.

இரண்டாம் வகை கவிதைகள் எக்கச்சக்கம். அவற்றுள் சில – ஒரு மரத்தைப் பற்றிய குறிப்பு, கடலிலிருந்து வந்தவை, கொலை நடந்த இடம், தடயம், வேறொரு நாள்

‘வேறொரு நாள்’ என்ற கவிதை நீராலானது தொகுப்பில் எனக்கு மிகப் பிடித்த ஒன்று.

மேலுள்ள ஓவியத்தை வரையத் தூண்டிய ‘அந்த இடம்’ என்ற கவிதை:

‘போகும்போது
உன்னுடன் கொண்டுவந்த
எல்லாவற்றையும்
எடுத்துக் கொள்கிறாய்

ஆனால்
அந்த இடம் மட்டும்
அப்படியே எஞ்சிவிடுகிறது

நீயும் கொண்டுவராத
ஏற்கனவே இருந்துமிராத
அந்த இடம்’