எம்மாவு விருந்து

DSC_4587_reduced

Léon Augustin Lhermitte என்ற பிரெஞ்சு ஓவியரின் ‘எம்மாவு விருந்து’ ஓவியத்தின் ஒரு பகுதியான ஏசுவின் உருவத்தைப் பார்த்து அக்ரிலிக் வண்ணம் கொண்டு இந்த ஓவியத்தை வரைந்தேன்.

விவிலியத்தில் லூக்கா நற்செய்தியில் வரும் எம்மாவு விருந்து பகுதியின் பின்னணி இதுதான்: உயிர்த்த இயேசு இரு வழிப்போக்கர்களை எம்மாவுக்குச் செல்லும் வழியில் தன்னை மறைத்துக் கொண்டு சந்திக்கின்றார், உரையாடுகின்றார். இறுதியில் அவர்களோடு தங்குவதற்கு ஒப்புக்கொண்டு உணவருந்த அமர்கின்றார். இயேசு அப்பத்தை எடுத்து பகிரும் போது,  அச்செய்கையின் அடையாளமாய் அவர்களுக்குத் தெரிந்த ஒரே நபரை அறிந்து கண்கள் திறக்கப்படுகின்றனர்.

நான் மிக விரும்பிப் படிக்கும் விவிலிய அறிஞர் John Dominic Crossan. நம்பிக்கைகளுக்கு வெளியே வந்து இலக்கியங்கள் பலவற்றை இலக்கிய நுட்பங்கள் பலவற்றை உள்வாங்கிப் பேசுபவர். அவர் எழுதிய The power of parable என்ற நூல் மிக மிக முக்கியமான நூல் என நான் கருதுகின்றேன். உவமைகள் பற்றிய வழக்கமான நூல் அல்ல அது.

வரலாறு, தொன்மம், பல நிலக் கலாச்சாரங்களின் கூறுகள் எனப் பல்வேறு அம்சங்கள் பிரிக்கமுடியாதபடி ஒன்றோடொன்று முயங்கிக் கிடக்கும் விவிலியத்தின் உள்ளே நுழைய பல நூறு வாசல்கள் உள்ளன. மேற்சொன்ன நூலில் crossan தேர்ந்தெடுக்கும் ஒரு வாசல் உவமைகள். விவிலியத்தில் எவ்வாறு உவமைகள் கையாளப்பட்டுள்ளன என்பதைத் தாண்டி, விவிலியத்தின் சில பகுதிகள், சில நூல்கள் எவ்வாறு தன்னளவில் பெரும் உவமையாய் உள்ளன என விளக்குகின்றார்.

இயேசுவின் சில உவமைகள் அதைக் கேட்பவர் மத்தியில் ஒரு கோபத்தை/எதிர்ப்புணர்வை கிளப்பும். வயல் வேலைக்கு வெவ்வேறு நேரத்தில் ஆள் எடுத்து அனைவருக்கும் ஒரே விதமான கூலியைக் கொடுக்கும் முதலாளியின் உவமை, ஊதாரி மைந்தனைக் கொண்டாடும் தந்தையின் உவமை, வழி தவறிய ஒரு ஆட்டிற்காய் தொண்ணூற்றொன்பது ஆடுகளை விட்டு விட்டுச் செல்லும் ஆயனின் உவமை எனச் சிலவற்றைச் சொல்லலாம். பழைய ஏற்பாட்டில் எவ்வாறு சில நூல்களே இத்தகைய அதிர்வைத் தரும் உவமைகளாக உள்ளன என விளக்குகின்றார் crossan.

நுட்பமாகப் பார்த்தால், இந்த உவமைகளின் மேல் யாருக்கு எதிர்ப்புணர்வு வருகின்றதோ அவர்களை நோக்கியே இந்த உவமைகள் பேசுகின்றன. இந்த உவமைகள் அவர்களுக்கானதே.

“நாங்கள் சட்டங்களை முறை தவறாது கடைபிடிப்பவர்கள். எங்களைப் போல் அல்லாதவர் அனைவரும் பாவிகள். சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்கள்” என இறுமாந்திருந்த சில யூதர்களின் காரணமாய், யூத சமுதாயத்தில் நிகழ்ந்த ஒடுக்கு முறைகளுக்கு அளவே இல்லை. இந்தப் பின்னணியில் இயேசு கூறிய ஊதாரி மைந்தன் உவமையைப் பார்க்கும் போது அது ஏன் இளைய மகனை அந்த அளவிற்குக் கொண்டாடுகின்றது என்பது புரியும்.

தன் அகங்காரம் அத்தனையையும் துடைத்தெரிந்து விட்டு தந்தையின் காலில் விழுந்து கிடக்கின்றான் இளையவன். தனக்கான உத்தமன் பட்டத்தை எதிர்பார்த்து நிற்கும் மூத்தவன் மறு புறம். தந்தைக்கு இரண்டு வழியைத் தேர்ந்து கொள்ளலாம். எல்லோரும் இணைந்து குடும்பத்தின் சுப நிகழ்வொன்றைக் கொண்டாடும் அன்பின் தருணம் ஒன்று அல்லது யார் உத்தமன் எனக் கணக்குப் போடும் தீர்ப்பின் தருணம் மற்றொன்று. இயேசுவின் தேர்வு எப்போதும் முதல் தருணமாகவே இருக்க முடியும்.

உவமைகள் வழியாகவே இயேசு பேசியிருக்கும் போது, அவரைப் பின்பற்றி நற்செய்தியை எழுதியவர்கள் ஏன் உவமை வாயிலாக நிகழ்வுகளை அடுக்கியிருக்கக்கூடாது? என்ற வாததின் அடிப்படையில் சில விவிலியச் சம்பவங்களை உவமைகள் என crossan வரலாற்றிலிருந்து பிரிக்கின்றார். அதில் ஒன்றாக எம்மாவு நிகழ்வை அழகிய உவமையாகக் குறிப்பிடுகின்றார்.

உயிர்ப்புக்குச் சாட்சி சொல்லும் ஒரு சாதாரண சந்திப்பாக அல்லாமல், அறிந்திராத வழிப்போக்கன் ஒருவனை வீட்டிற்கு அழைத்து உணவைப் பகிர்ந்துண்ணும் இயேசுவின் மையச் செய்தியைப் புலப்படுத்த எத்தனிக்கிறார் லூக்கா.

crossan மிக அற்புதமாக இப்படிச் சொல்கின்றார்: “எம்மாவு நிகழ்வு முன்பு எப்போதும் நிகழ்ந்த ஒன்றல்ல. மாறாக, என்றைக்கும் நிகழும் ஒன்று”

இயேசுவின் உயிர்ப்பை இந்த மன நிலையில்தான் நான் பார்க்கின்றேன். ஒரு அற்புதமாக அல்ல. அவரின் இருப்பை உணர்த்தும் அவரது வார்த்தைகளே அவரின் உயிர்ப்புக்குச் சாட்சி.

எம்மாவு வழியில் சந்தித்த சீடர் இவ்வாறு சொல்கின்றார்: “வழியிலே அவர் நம்மோடு பேசி, மறைநூலை விளக்கும்போது நம் உள்ளம் பற்றி எரியவில்லையா?”

நம்முள் இருக்கும் உள்ளம் பற்றி எரியச் செய்யும் மகத்தான இயேசுவின் சொற்களே அவரின் இருப்பிற்கு ஒரே சாட்சியம்.

அணிசெய் இறை

IMG_0343

Linocut with intaglio ink on paper

“காட்டு மலர்ச் செடிகள் எப்படி வளருகின்றன? எனக் கவனியுங்கள்; அவை உழைப்பதுமில்லை, நூற்பதுமில்லை.

ஆனால் சாலமோன் கூடத் தம் மேன்மையில் எல்லாம் அவற்றில் ஒன்றைப்போலவும் அணிந்திருந்ததில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன்”

– மத்தேயு 6: 28-29

பேரன்பு

IMG_0328

lino cut with intaglio ink on paper.

“உமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு. உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது.

தடுக்கி விழும் யாவரையும் ஆண்டவர் தாங்குகின்றார். தாழ்த்தப்பட்ட யாவரையும் தூக்கி விடுகின்றார்.

எல்லா உயிரினங்களின் கண்களும் உம்மையே நோக்குகின்றன. தக்க வேளையில் நீரே அவற்றிற்கு உணவளிக்கின்றீர்.

நீர் உமது கையைத் திறந்து எல்லா உயிரினங்களின் விருப்பத்தையும் நிறைவேற்றுகின்றீர்.

ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர். அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே”

— திருப்பாடல்கள் 145: 13-17

ஏற்கனவே இரண்டாம் ஆதாம் என்ற பெயரில் egg tempera-வில் செய்த ஓவியம்தான். அதன் வேறொரு வடிவமே மேற்கண்ட ஓவியம். lino cut முறையில் செய்த அச்சு.