திரௌபதி குறவஞ்சி

DSC_5621_reduced Acrylic on paper

பெங்களூர் ரங்கா ஷங்கராவில் நேற்று ‘திரௌபதி குறவஞ்சி’ என்ற தெருக்கூத்தைப் பார்த்தேன். காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கட்டைக் கூத்து குருகுலத்தினர் நிகழ்த்திய  கூத்து. ஏற்கனவே இவர்கள் நிகழ்த்திய வேறொரு கூத்தை இரண்டு வருடத்திற்கு முன் பார்த்திருக்கின்றேன். அப்போதைய கூத்தை நிகழ்த்தியவர்களில் இளைஞர்கள் அதிகம். நேற்றையதில் சிறுவர்கள் அதிகம்.

பாண்டவர்கள் இறந்து விட்டார்கள் என அறிவித்து ஈமச் சடங்குகளைச் செய்கிறான் துரியோதனன். இதை அறிந்து, திரௌபதியை குறத்தி வேடத்தில் செல்லும்படி கிருஷ்ணன் சொல்கின்றான். அவளும் துரியோதனனின் மனைவியிடம் சென்று வரவிருக்கும் கெட்ட காலம் குறித்து குறி சொல்கின்றாள். அமங்கலக் குறிக்கு கூலி கொடுக்க மறுக்கிறாள் பானுமதி. கூலிக்காக அரசன் துரியோதனனிடம் செல்கிறாள். குறத்தி வேடத்தில் வந்திருப்பது திரௌபதி எனச் சந்தேகம் கொள்ளும் துரியோதனன், அவளைச் சிறை செய்கின்றான். இதனை அறிந்து அர்ஜுனன் குறவன் வேடம் பூண்டு அரசனிடம் விடுதலைக்கு முறையிடுகின்றான். அவன் மறுக்கவே, பானுமதியை கடத்தி திரௌபதியை மீட்கின்றான் அர்ஜுனன்.

கூத்து என்பது மேற்சொன்ன மாதிரியான கதைச்சுருக்கம் மட்டுமேயல்ல. வெறும் தரையில் கூடும் துரியோதனனும் அவன் பரிவாரங்களும் பிரம்மாண்டமான அரசவையைக் கண்முன் கட்டியெழுப்ப வேண்டும். தெருக் கூத்தின் பல அம்சங்கள் இதைச் சாத்தியமாக்குகின்றன. உக்கிரத் தோற்றம் தரும் நடிகர்களின் ஒப்பனை, உச்சஸ்தாதி குரல், வட்டமாக நடமிடும் பாங்கு என அத்தனையும் சேர்ந்து அந்தப் பிரம்மாண்டத்தை உருவாக்கி விடுகின்றன.

ஒவ்வொரு பாத்திரமும் நேரம் எடுத்துக் கொண்டு அறிமுகப்படுத்தப்படுகின்றது. கதையின் ஒவ்வொரு உணர்ச்சியும் பாடல்கள் வசனங்கள் மூலம் உச்ச அளவிற்குப் பெருக்கப்படுகின்றது. உணர்ச்சிகள் ஆழமாக வெகுநேரம் விளக்கப்பட்டு கதை மெதுவாக நகர்த்தப்படுகின்றது. இவ்வாறு செறிவு மிகுந்து தொடர்ந்து கதை சொல்லப்படும் போது மனதில் தோன்றும் சின்ன சோர்வை மட்டுப்படுத்த சில வேடிக்கைகள் கட்டியங்காரர்கள் மூலம் புகுத்தப்படுகின்றது. கூத்தின் செறிவை முறிக்கும் அபாயமும் இதற்கு உண்டு.

‘திரௌபதி குறவஞ்சி’ கூத்தில் குறத்தியும், துரியோதனனும் என்னை மிகக் கவர்ந்தார்கள். குறவஞ்சி இலக்கியம் எதையாவது இனி படித்தால், இந்தக் கூத்தில் நடித்த குறத்தியின் மொழியையும் தோரணையையும் தொடர்புபடுத்தி மட்டுமே படிக்க முடியும்.

முழு இரவுக்கான கூத்து 90 நிமிடங்களுக்குள் அடங்கும்படி குறைக்கப்பட்ட வடிவமே ‘திரௌபதி குறவஞ்சி’. இன்றைய சபாக்களிலும், நவீன நாடக அரங்குகளிலும் நிகழ்த்துவதற்கு இதுவே தோதான வடிவம் என்கிறார்கள். இதில் சாதகமும் உண்டு, பாதகமும் உண்டு. இக்கலையை அழியாமல் தொடர வைப்பது சாதகம். காலங்காலமாக நிகழ்த்தப்படும் வடிவத்தில் பெரும்பகுதியை இழப்பது பாதகம்.

தற்சமயம் ஓவியக் கத்தி கொண்டு சில படங்களை வரைந்து வருவதால் மேலுள்ள ஓவியத்தையும் அதே பாணியில் வரைந்தேன். ஓவியக் கத்தி கொடுக்கும் texture நம்மால் கணிக்க முடியாதது. அதுவே அதன் சிறப்பம்சம்.