ஓர் Icon ஓவியம்

kuralgal_compose

விவிலியத்தில் வரும் அன்னாவின் கதையைப் பின்னணியாகக் கொண்டு ஒரு சிறுகதை எழுதிப்பார்க்கலாம் எனத் தோன்றியதால் குரல்கள் என்ற கதையை எழுதினேன். எழுதி முடிக்கும் போது அன்னாவின் கதையைப் பின்னுக்குத் தள்ளி குருகுலப் பெண்ணை மையப்படுத்தி அக்கதை உருமாறியது. இப்பெண் பற்றி ஒரே ஒரு வரி மட்டுமே விவிலியத்தில் உண்டு. சில விவிலிய சம்பவங்களையும் மாந்தர்களையும் இணைத்து அதை கொஞ்சம் கற்பனையாக விரித்தேன்.

மேலுள்ள முடிக்கப்படாத படம் அக்கதைக்காக நான் வரைந்தது. ஒரு அமர்வில் முடிக்கமுடியாத ஓவியத்தை மீண்டும் அமர்ந்து வரைவது எனக்குக் கடினமான ஒன்று. அப்படி அரைகுறையாய் விட்ட இப்படத்தை வரைய Corel painter-ஐ உபயோகித்தேன். முடிக்காமல் விட்டதால் பல வடிவத் தவறுகள் களையப்படாமலேயே உள்ளன. கதையை மீறி இப்படம் வேறொரு அர்த்தத்தில் வந்ததால் கூட பாதியில் விட்டுவிட்டேன் என நினைக்கிறேன்.

பைசாந்திய icon ஓவிய மரபின் இலக்கணங்களோடு இதை வரைய முயன்றேன். இதில் உள்ள விவிலிய மாந்தர்களைப் பல icon ஓவியங்களை மாதிரியாகக் கொண்டு வரைந்தேன். இந்த ஓவியம் மூன்று பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதி ஈசாய் மரம்(The tree of Jesse) இரண்டாவது பகுதி குழந்தை சாமுவேலை ஏந்தி நிற்கும் அன்னா. மூன்றாவது பகுதி பிள்ளை பெற்று படுக்கையில் கிடக்கும் குரு குலப் பெண்-விவிலியத்தில் அவளுக்குப் பெயரில்லை.

இஸ்ரயேல் முடியாட்சியின் தொடக்கமாகவும் அந்த ராஜ வம்ச மரபை யேசுவோடு இணைத்துக் காட்டும் முக்கியக் குறியீடாகவும் விளங்குவது ஈசாய் மரம்.

kuralgal_jesse

மன்னர் தாவீதின் தந்தையான ஈசாய் வயிற்றிலிருந்து வேர் விட்டு வளர்ந்த மரமாக இது காட்டப்படும். இதன் சிற்ப வடிவம் ஒன்றை லண்டனில் உள்ள விக்டோரியா ஆல்பர்ட் மியூசியத்தில் நான் பார்த்திருக்கிறேன். ஈசாய் மரத்தைக் காட்டும் சில icon ஓவியங்களும் உண்டு. ஈசாய் மரத்தைக் காட்டும் இந்த ஓவிய மரபிற்கு அடிப்படை எசாயா நூலின் இந்த வாசகம்தான்:

“ஈசாய் என்னும் அடிமரத்திலிருந்து தளிர் ஒன்று துளிர்விடும்; அதன் வேர்களிலிருந்து கிளை ஒன்று வளர்ந்து கனி தரும். ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்; ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத் திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப் பற்றிய அச்ச உணர்வு – இவற்றை அந்த ஆவி அவருக்கு அருளும்” – எசாயா 11:1-2

மெசியா குறித்த எதிர்பார்ப்பை யேசுவின் காலத்திற்கு எழுநூறு ஆண்டுகளுக்கு முன் எசாயா முன்னுரைத்த பல வாசகங்களில் இதுவும் ஒன்று. ஆண் செல்வாக்கு மிகுந்த இஸ்ரயேல் மரபு சந்ததியின் வேராக ஆணைச் சொல்வது புரிந்து கொள்ளக் கூடியதே. ஆனால், ஈசாய் என்ற ஆணின் வயிற்றிலிருந்து சந்ததியின் ஊற்றைக் காண்பிக்கும் icon ஓவியங்கள் இன்றைய பார்வையாளர்களுக்கு வினோதமாகத் தெரியலாம். இந்த அடையாளத்தை பெண்ணோடுதான் நம் மனம் தொடர்பு படுத்த விரும்பும்.

ஆனால், ஈசாய் மர ஓவியங்கள் பலவும் மரியாளை மையமாகக் கொண்டு வரையப்பட்டிருப்பதை கருத்தில் கொள்ள வேண்டும். மரத்தின் கிளைகளில் இறைவாக்கினர்கள், அரசர்கள் போன்றோரின் உருவங்கள் வரையப்படும். மரத்தின் மையமாக யேசுவை ஏந்திய மரியாளின் உருவம் பிரதானமாக வரையப்பட்டிருக்கும். பழைய இறுக்கமான யூத மரபின் வேரில் கிளைத்தாலும் ஏசு யூத இறையியலை அன்பை ஆதாரமாய்க் கொண்டு முற்றிலும் புதிதாய் மறு ஆக்கம் செய்தார். யூத அடையாளங்கள் பலவற்றை புறந்தள்ளாமல் அவற்றிற்கு முற்றிலும் புதிய அர்த்தங்களைக் கற்பித்தார். கிறித்தவம் மரியாளை முக்கிய அடையாளமாய் வளர்த்தெடுத்ததன் மூலம் இன்னும் நெகிழ்வுத் தன்மை உடையதாய் ஆனது. முழுமையானது என்றும் சொல்லலாம்.

நான் வரைந்த இந்த படத்தில் கதையை மனதில் கொண்டு மரியாளை வரையவில்லை. ஆனால் கிட்டத்தட்ட மரியாளின் செயலுக்கு நிகரான ஒன்றை அடையாளப்படுத்தும் விதமாய் அன்னாவை வரைந்தேன்.நான் எழுதிய கதைக்கும் இது தொடர்புடையது. விவிலியத்தைப் படிப்பதில் உள்ள மிகப் பெரும் சுவையாக நான் கருதுவது, இது போன்ற counterpart-ஐ பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் கண்டறிந்து ஒப்புமைப் படுத்திப் பார்க்கலாம் என்பதே.

kuralgal_hanna

தன் மகன் சாமுவேலை கடவுளுக்கே முழுமையாக அர்ப்பணிக்கும் விதமாய் குழந்தை சாமுவேலை கடவுளை நோக்கி கையளிக்கும் வண்ணம் அன்னாவை வரைந்தேன். உடன்படிக்கைப் பேழையாக பிதாவையும்,  மரத்தின் உச்சியில் ஏசுவையும் என திரித்துவத்தின் இருவரை இங்கு கடவுளாய்க் காட்டியுள்ளேன். சாமுவேல் தன் கையிலிருக்கும் கொம்பின் வழியே தாவீதின் தலையில் எண்ணெய் வார்த்து திருப்பொழிவு செய்வதாகக் காட்டியுள்ளேன். மன்னர் தாவீது யாழ் மீட்டியபடி ஈசாய் மரத்தின் ஒரு கிளையில் இருப்பதாக வரைந்துள்ளேன்.

சாமுவேலால் முதன்முதலில் மன்னராய் திருப்பொழிவு செய்யப்பட்டவர் சவுல்தான். ஆனால் தாவீதையே யூதர்கள் தங்கள் மனதுக்கு நெருக்கமாய்க் கொண்டிருந்தார்கள் என்பதைத் தெளிவாக விவிலியத்தில் பார்க்க முடியும். அதற்கான காரணங்களும் இருந்தன. தாவீதின் பிழைகளையும் தாண்டி இஸ்ரயேலின் அன்பிற்குரிய மன்னராய் திகழ்ந்தவர் தாவீது. யூத மரபு அவரை ஓர் இசைப் பாடகனாகக் கருதுகின்றது. தாவீதின் யாழ் அரசியலையும் ஆன்மீகத்தையும் இணைக்கும் மிக அழகான குறியீடு. தாவீது பாடியதாய் நம்பப்படும் திருப்பாடல்களில் இந்த இரண்டு அம்சங்களும் பின்னிப் பிணைந்து வெளிப்படுவதைக் காணலாம். ஈர்ப்பு மிக்க தாவீதின் இந்த ஆளுமையினால்தான் யூத முடியாட்சியின் சகாப்தம் ஈசாயிலிருந்து தொடங்குகின்றது. ஆன்மீகத் தளத்தில் அது அன்னாவிடமிருந்து தொடங்குகின்றது.

கடைசிப் பகுதியாக, வருந்திய நிலையில் ‘இக்கபோது’ என்ற தனது மகனை ஈன்றெடுத்து படுக்கையில் கிடக்கும் குரு குலப் பெண்ணைக் காட்டியுள்ளேன். நான் எழுதிய கதையின் மையப் பாத்திரம் இவர். அன்னாவின் எதிர் நிலையாக வீழ்ச்சியின் அடையாளமாக இந்தப் பெண்ணைக் காட்டியுள்ளேன். இந்தப் பெண்ணின் மனவோட்டம் என்னவாக இருக்கும் என்ற ஆர்வத்தினாலேயே இக்கதையை எழுதினேன். ஒற்றை ஆண் தெய்வம் என்ற ஒரு கலாச்சாரச் சூழலில் பெண் சாதாரண மனுஷியாகவும், பெண் தெய்வம் என்ற நிலையிலும் எதை எதிர்கொள்ள முடியும் என யோசிப்பதே இக்கதையின் நோக்கம். இந்தப் பின்னணியிலிருந்து பார்க்கும் போது கிறித்தவத்தில் மரியாளின் இன்றைய பிரதான இடம் மிக ஆரோக்கியமான விஷயம் என்பதைத் தெளிவுபடுத்தியது.

இப்படத்தின் பின்புலமாக இரு கட்டடங்கள் ஒரு துணியால் இணைக்கப்பட்டு வரைந்துள்ளதைக் காணலாம். சில புத்தகங்களில் இது மனித-தெய்வ சம்பந்தம் என்பதை குறிக்கப் பயன்படுத்தப்படுவதாகச் சொல்லப்பட்டிருந்தது. ஆனால் பல icon ஓவியங்களில் இந்த வகையான ஓவிய முறை, வரையப்பட்ட சம்பவம் உள் அறையில் நிகழ்வதாகக் காட்டவே பயன்படுத்தப்படுவதாகத் தெரிந்தது. எனவே, நான் வரைந்த இந்த படத்தில் இதை தவறாகப் பயன்படுத்தியுள்ளேன் எனத் தெரிந்தது.

மேலும், icon ஓவியங்களில் கட்டடங்கள் சாய் வீழ்வு(oblique projection) முறையில் வரையப்படும். இம்முறையில் வரையப்படும் வடிவம் சற்று குலைந்த முறையில் தோற்றமளிக்கும். இது பொறியியல் துறையில் பயன்படுத்தப்படும் முறைதான். அசலான நிஜ வீழ்வு(perspective projection) பொறியியல் துறைக்குத் தேவையற்றது. சரியான அளவுகளோடு தகவல்களைக் காண்பிக்க ஏற்றதும் அல்ல. அனேகமாக கட்டடத் துறையில் பயன்படுத்தப்படும் அதே முறை icon ஓவியங்களிலும் தொடர்ந்திருக்கும் என நினைக்கிறேன்.   இத்தகைய சாய் வீழ்வு முறையின் அம்சங்களை வான்காவின் நாற்காலி ஓவியத்திலும் இன்னும் சில ஓவியங்களிலும் மிகத் தெளிவாகக் காணமுடியும். வலுக்கட்டாயமாக அவர் இம்முறையை தேர்ந்தெடுக்கவில்லை. அவரது கொந்தளிப்பான மன அமைப்பு மிக இயல்பாகவே இம்முறையைத் தேர்ந்தெடுத்தது எனலாம்.

மேலுள்ள படத்தில் அன்னாவின் பின்புறம் உள்ள கட்டடத்தை கிட்டத்தட்ட சாய்வீழ்வு முறையில் வரைந்தேன். இருவகையான வீழல்களுக்கும்(projection) முன்பொருமுறை நிரல் எழுதி வடிவங்களை இரு முறையிலும் காட்டும் ஒரு சின்ன prototype கணினியில் செய்து பார்த்திருக்கின்றேன். ஆனால் இப்படத்தை கணித முறைப்படிச் செய்யவில்லை. தோராயமாக மட்டுமே வரைந்தேன். ஆனால், பழக்கதோஷத்தில் வழக்கமான வடிவில் அன்னா நின்று கொண்டிருக்கும் தளத்தை வரைந்துவிட்டேன். மொத்ததில் பைசாந்திய முறையில் பின்புலத்தை வரையவில்லை. இது போன்ற சின்னச்சின்ன விஷயங்கள் ஏற்படுத்திய சோர்வினால் இப்படத்தைத் தொடர்வதற்கான மனநிலை கைகூடவேயில்லை. icon ஓவியம் சம்பந்தமான வரையும் நுட்பங்களையும், இறையியல் நுட்பங்களையும் பற்றி நிறைய கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. இன்னும் நிறைய பைசாந்திய ஓவியங்களைப் படிக்க/பார்க்க வேண்டும்.