சம்ஸ்காரா

samskaraயு. ஆர். அனந்தமூர்த்தியின் சம்ஸ்காரா நாவலில் வரும் ஒரு நிகழ்வு. wacom tablet மூலம் வரைந்தது.

துர்வாசபுரத்து அக்ரஹாரத்தில் பிளேக் நோயினால் மரணமடையும் நாரணப்பாவிற்கு முறைப்படி இறுதிச் சடங்கு செய்வதில் எழும் சிக்கல்தான் நாவலின் தொடக்கம். அத்தனை ஆச்சாரங்களையும் தூக்கி எறிந்து தன் செயல்களால் அக்ரஹாரத்தை ஆட்டிப்படைக்கும் நாரணப்பா தன் மரணத்திற்குப் பிறகும் அவர்களை நிம்மதி இழக்கச் செய்கிறான். வாரிசு அற்ற நாரணப்பாவின் இறுதிக் கடன்களை செய்யக் கடமையுள்ள உறவினர்கள் இருவர் – கருடாச்சாரியார் மற்றும் லட்சுமணாச்சாரியார். இருவருக்கும் நாரணப்பாவோடு குடும்பத் தகராறு உண்டு. இறுதிச் சடங்கு முடியும் முன் யாராலும் உணவு கொள்ள முடியாது. அக்ரஹாரத்தில் யார் இறுதிச் சடங்கு செய்தாலும் அவர்களது ஜாதிச் சலுகைகளுக்கு பங்கம் விளையும். பக்கத்து ஊரான பாரிஜாதபுரத்து அக்ரஹாரத்தில் வசிக்கும் ஸ்மார்த்த பிராமணர்களுக்கு துர்வாசபுரத்து மாத்வா பிராமணர்களை எள்ளி நகையாட இது ஒரு வாய்ப்பாகவும் அமையும்.

துர்வாசபுரத்துக்கே ஞான குருவாக விளங்கும் பிரானேஷ் ஆச்சாரியாவிடம் எல்லோரும் முறையிட அவரது வீட்டில் கூடுகின்றனர். நாரணப்பா மனைவியை விரட்டி விட்டு பிராமண ஜாதியைச் சேராத சந்திரி என்ற பெண்ணை தன்னோடு சேர்த்துக் கொண்டவன். சந்திரியும் பிரானேஷ் ஆச்சாரியாவின் வீட்டில் பிராமணக் கூட்டதிற்கு மத்தியில் நிற்கிறாள். அத்தனை பேருக்கும் அவள் மீது அடங்கா வெறுப்பு. கருடாச்சாரியாரும் லட்சுமணாச்சாரியாரும் அவரவர் பங்குக்கான தர்க்கங்களைச் சொல்லி நாரணப்பாவின் இறுதிக் காரியத்தை செய்ய மறுக்கின்றனர்.

இந்தத் தருணத்தில் சந்திரி தன் நகைகளை கழற்றி பிரானேஷாச்சாரியார் முன் வைத்து, அழுகிக் கொண்டிருக்கும் நாரணப்பாவின் பிணத்தை எரியூட்ட மன்றாடுகிறாள்.

ஒழுக்க நெறிகளையும், ஆச்சாரங்களையும் மேல் பூச்சாகக் கொண்டு உள்ளுக்குள் அழுகிப் போனவர்களாய் உலவும் துர்வாசபுரத்து பிராமணர்களை எதிர்த்துதான் அத்தனை கலகங்களையும் செய்தான் நாரணப்பா. எதைப் பாவமென்றும் தீட்டென்றும் நினைத்தார்களோ அவை அத்தனையும் செய்தான். பிளேக் நோய் பிடித்து இப்போது நாரணப்பா அழுகிக் கொண்டிருக்கின்றான். பிண வாடை அக்ரஹாரம் முழுதும் காற்றோடு கலந்திருக்கிறது. துர்வாடை ரூபத்தில் ஒவ்வொரு வீட்டிலும் நாரணப்பாவின் பிணம் கிடக்கின்றது.

பரவிக் கொண்டிருக்கும் பிளேக் நோயால் ஊருக்குள் இருக்கும் எலிகள் அத்தனையும் குவியலாக வெளிக் கிளம்பி மடிந்து விழுந்தவண்ணம் இருந்தது . சந்திரி நகைகளை பிரானேஷாச்சாரியார் முன் வைத்த அந்த நிகழ்ச்சியும் மனக் கீழ்மையின் பல்வேறு குவியல்களை வெளிக் கொணர்ந்து தரையில் மிதி பட வீழ்த்தத் தொடங்கியது.

நாரணப்பாவை கோபத்தால் பொசுக்கிய கருடாச்சாரியாரின் மனைவியும், லட்சுமணாச்சாரியார் மனைவியும் இப்போது சந்திரி ஒப்படைத்த நகையை அடைய வேண்டி தத்தம் கணவர்களை நாரணப்பாவின் இறுதிச் சடங்கை நிறைவேற்ற தூண்டுகின்றனர். இருவரும் குழைந்து கொண்டு பிரானேஷாச்சாரியாரை அணுக, சந்திரியின் பெருந்தன்மையும் அன்பும் கிளரிவிட்ட கீழ்மைக் குணங்களை கண்ணுற்று மனம் கசந்து போகிறார் பிரானேஷாச்சாரியார்.

பிக்காஸோவின் பல தொடர் ஓவியங்கள்தான் எனக்கு நியாபகத்திற்கு வருகின்றது. ஒரு குறிப்பிட்ட பேசுபொருளை எடுத்துக் கொண்டு அதன் அத்தனை ஓவியச் சாத்தியங்களையும் செய்து பார்த்திருப்பார் பிக்காஸோ. கித்தார், காளை, ஆடு என பல தொடர் படைப்புகள் உண்டு. ஒரே விஷயத்தை பல வடிவங்களில், பல ஊடகங்கள் வழியாக வரைய/சிற்பமாக்க முயன்றிருப்பார். சம்ஸ்காராவில் யூ.ஆர்.அனந்தமூர்த்தியும் இதைத்தான் செய்தாரோ எனத் தோன்றுகின்றது. ஒரு கட்டுக்கோப்பான அமைப்பை/ஒழுங்கை ஏதோ ஒன்றைக் கொண்டு சிதைத்தால் எஞ்சுவது என்னவாக இருக்கும். என்னென்ன கேள்விகளை அது உருவாக்கும். என்னென்ன பதில்களை அது அளிக்கும். நாவலின் அத்தனை பக்கங்களிலும் இதைக் காணலாம்.

அக்ரஹார ஒழுங்கு – அதைச் சிதைக்கும் நாரணப்பா. நாரணப்பாவிற்கு இறுதிச் சடங்கை செய்ய மறுப்போர் சொல்லும் பிழையில்லா தர்க்க நியாயங்கள் – அவற்றை கேலிக் கூத்தாக்கிச் சிதைக்கும் சந்திரியின் செயல்(நகையை அளிப்பது). ஊரே புகழும் பிரானேஷாச்சாரியாரின் பிரம்மச்சரியமும், ஞானமும்- அவரோடு உறவு கொள்வதன் மூலம் அவற்றைச் சிதைக்கும் சந்திரி. இந்த இணைகள் பல்வேறு வடிவங்களில் திரும்பத் திரும்ப தோன்றிக் கொண்டே இருக்கின்றது.

பிரானேஷாச்சாரியாவுக்கு பிரம்மச்சரியம். நாரணப்பாவிற்கு காமம். தசாச்சாரியாவுக்கு பசி. லட்சுமி தேவம்மாளுக்கு சாபமாய் உருக்கொண்ட மனித வெறுப்பு. இப்படி ஒவ்வொரு மாந்தருக்கும் ஒவ்வொரு பிடிப்பு. நாவலின் மாந்தர்கள் பல்வேறு குணநலன்களை உடைய பல்வேறு சூழல்களில் வாழக்கூடியவர்கள். ஆனால்  பல திசைகளில் பயணிக்கும் அவர்கள் குறுக்கே சந்தித்துக் கொள்ளும் புள்ளிகள் உண்டு. பிராமணீயத்தை தான் விட்டாலும், பிராமணீயம் தன்னை விடாத நாரணப்பா. ஆசையைத் தான் துறந்தாலும் ஆசை தன்னை துறக்காமல் துரத்தும் பிரானேஷாச்சாரியார். அக்ரஹாரத்தின் துர்சகுனமாய் விளங்கும் லட்சுமிதேவம்மா என்ற விதவை நாரணப்பாவின் மற்றொரு வடிவமே. நாவலின் இறுதிப் பகுதியில் பிரானேஷாச்சாரியார் அடையும் தரிசனம் இந்த ஒற்றைத் தன்மையைத்தான். புட்டா என்பவனொடு சேர்ந்து கொண்டு தான் இதுவரை பழகாத உலகத்தை தரிசிக்கும் போது பிரானேஷாச்சாரியார் அடையும் உணர்வு இந்த உபநிடதத் ததுவம்தான் ‘நீயே அது'(தத் த்வம் அசி).

சிக்கலான ஒற்றைப் பேசுபோருளை பல்வேறு மாந்தர்களின் மேல் ஏற்றி பல வண்ணங்களில் பண்பாடு எனும் மாபெரும் கித்தானின் மீது அனந்தமூர்த்தி வரைந்த மிக அழகான ஓவியம் இந்த சம்ஸ்காரா.