ஹளெபீடு யாளி

20140515_200052

சமீபத்தில் பேலூர் மற்றும் ஹளெபீடு சென்று வந்த பின் ஒரு நாள் அலுவலக மேஜையில் வரைந்த யாளியின் உருவம் இது.

நடக்கும், ஓடும், பாயும், சிங்கத்தை கவ்வும் நிலையில் நூற்றுக்கணக்கில் யாளிகளின் வரிசை ஹளெபீடுவில் உண்டு. அவற்றுள் இந்த யாளி என்னை மிகக் கவர்ந்தது.

எதிரெதிர் திசைகளில் உடலின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் வளைவுகள் ஒன்றை ஒன்று சமன் செய்து ஒட்டுமொத்த வடிவமும் ஒன்றிசைந்து யாளியின் இயக்கத்தில் ஒரு அபாரமான அழகை கூட்டுகின்றது.

மிக மிகப் பெரிய கட்டுமானம் எவ்வளவு பிரமாண்டமாக இருக்குமோ அதை விடப் பிரமாண்டமாகத் தோன்றுகின்றது சின்னஞ்சிறு நுட்பங்கள் நிறைந்த சிறிய கட்டுமானம். பேலூர் மற்றும் ஹளெபீடு கோவில்கள் இந்தச் சின்னஞ்சிறு நுட்பங்களின் பிரமாண்டம்.

கோயில் அமைப்பில் பேலூருக்கும் ஹளெபீடுவுக்கும் ஒற்றுமை இருப்பது போலத் தோன்றினாலும் சிற்பங்களின் நுட்பத்தில் நிறைய வித்தியாசங்கள் உண்டு. கல்லை மிக நுட்பமாய் கையாண்ட விதத்தில் பேலூர் கோவில் சிறந்தது எனச் சொல்லலாம். ஹளெபீடு சிற்பங்களின் நுட்பம் பேலூரை விட ஒரு படி குறைவுதான். ஆனாலும் பேலூரை விட ஹளெபீடுதான் என்னை மிகக் கவர்ந்தது.

அதற்கு முக்கியக் காரணம்:

1. அங்குள்ள கணக்கற்ற சிற்பங்கள் ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று சமன் செய்து கொண்டு ஒட்டு மொத்த ஒழுங்கை எட்டும் நோக்கில் உருவாக்கப்பட்டதாய் எனக்குத் தோன்றியது.

2. கற்பனையும், ஒரே விஷயத்தை பல விதங்களில் வடிக்கும் தன்மையும்  அதிகம்

3. கதை சொல்லும் சிற்பத்தொகுதியும், போர்க் காட்சிகளை வடிப்பதில் பல்வேறு சாத்தியங்களைக் கொண்ட சிற்பத் தொகுதியும் அதிகம்.

இந்த மூன்று அம்சங்கள் பேலூரிலும் உண்டு. ஆனால் ஹளெபீடுவில் ஒரு படி அதிகம்.

பிடித்தமான வடிவங்களை கொஞ்ச நாளுக்கு கிடைக்கும் பேப்பரில் எல்லாம் வரைந்து கொண்டே இருப்பது வழக்கம். சில நாட்களுக்கு முன்பு கழுகுமலையின் பூத கணம். இப்போது இந்த ஹளெபீடு யாளி.