தாங்கும் கரங்கள்

station_07

Wacom Tablet மூலம் சமீபத்தில் வரைந்த ஓவியமிது. என்னுடைய தமிழாசிரியர் எழுதிய சிலுவைப் பாதை பதிவுக்காக, பதினான்கு ஸ்தலங்களுக்கும் ஓவியங்களை வரைந்து கொடுத்தேன். அப்பதிவை இங்கு காணலாம்.

பால் சக்காரியாவின் ஒரு சிறுகதை. “அன்னம்மா டீச்சர் – சில நினைவுக்குறிப்புகள்” என்ற அந்த கதை “யேசு கதைகள்” என்ற வம்சி பதிப்பகத்தின் தமிழ் தொகுப்பில் உள்ளது. மதக் கட்டுக்களிலிருந்து விலக்கிப் பார்க்கப் பட வேண்டிய உண்மையான யேசுவை புரிந்து கொள்ள உதவும் முக்கியமான கதையிது.

தன் செயல்கள் மூலம் தனது செய்தியை நேரடியாகச் சொன்னவர் யேசு. எல்லோரும் புறக்கணித்தவையே அவரது தேர்வாக இருந்தது. அன்பின் ஒளி புகாத இருண்ட பகுதிகளே அவருக்கான உறைவிடம்.

பால் சக்காரியாவின் மேற்சொன்ன கதையில் வரும் அன்னம்மா தனது குடும்பத்தின் சுயநலத்துக்காய் தனது சொந்த வாழ்வு மொத்தத்தையும் இழக்கும் பெண். அத்தனை உறவுகள் இருந்தும் யாருமற்ற நிலை. அவளது மரணம் குடும்ப வருமானத்தின் மீதான அடியாகவே எதிர்கொள்ளப் படுகின்றது. மரணச் சடங்குகளில் சிறு தொகை கூட அப்பாவால் சேமிக்கப்படுகின்றது. காதல் விவகாரமோ, பாலியல் சம்பந்தமாகவோ மரணம் நிகழவில்லை என்ற மரண அறிக்கையின் முடிவுக்காய் திருப்திப்பட்டுக் கொள்கிறது குடும்பம். அவளது சொற்பமான வாழ்வின் சொற்பமான சம்பவங்கள் கதையில் சொல்லப்படுகின்றது. 33 வயதை தாண்டிய போது தனது தம்பியாக யேசுவை நினைத்துக் கொள்கிறாள் அன்னம்மா. உறவுகள் இருந்தும் கற்பனையில் ஒரு புது உறவை உருவாக்கிக் கொள்வதென்பது  அன்பின் தீவிரமான போதாமையே. தனக்குள்ளேயே அத்தம்பியிடம் பேசிக்கொள்கிறாள். புனித வெள்ளிகளில் யாருக்கும் தெரியாமல் அவனுக்காய் அழுவாள். அப்படி அழும் போது ஒரு நாள் அவனை இப்படிக் கேட்பாள்: “பாவம், என்ன வேதனையுடன் நீ இறந்தாய். இன்றைய உன் மகிமையைக் கனவு காணக் கூட உன்னால் முடிந்ததா? சிலுவையின் மேல் உன் அலறல் பெரிய அலறலாகத்தான் இருந்ததோ?யேசுவே நீ எவ்வளவு அப்பாவியாக இருந்தாய்”.

தேவாலய வழிபாட்டுக் கூச்சலுக்கு நடுவே ஒரு முறை இப்படிச் சொல்வாள்: “இந்த இரைச்சலுக்கிடையில் இந்த மக்கள் உன்னிடம் சொல்வதென்ன? இதற்காகத்தானா நீ வெயிலிலும் மழையிலும் இருட்டிலும் அலைந்து அடியும் உதையுமேற்று அழுது இறந்தது? பாவம் தம்பி!”

ஒரு புனித வெள்ளி நாளன்று அன்னம்மாவின் மரணம் குளத்தங்கரையில் நிகழ்கின்றது. ஆம் மரணம் தன் கோர முகத்துடன் அல்லாமல் மிக இயல்பாய் அவளை மென்மையாய் ஆட்கொள்கின்றது. அவளை தம்பியான யேசு அப்போது தாங்கிக் கொள்கிறான். அப்போது அவன் ‘தூங்கு அக்கா, ஓய்வெடுத்துக் கொள். எனக்கு இன்றும் சக்தியொன்றும் இல்லை. நீ தளர்வுற்று விழும்போது தாங்குவதற்காக மட்டுமே நான் வந்திருக்கிறேன்’ என்கிறான். அன்னம்மாவை புற்களின் மேல் படுக்க வைத்து விட்டு கார்மேகங்களில் ஒரு புள்ளியாய் மறைந்து போகிறான். அந்த மேகங்கள் மழை பொழிந்து அவளைக் கழுவுகின்றது.

அன்பின், கருணையின் போதாமை உலகில் இருக்கும் வரை யேசுவின் தேவை இருந்து கொண்டேதான் இருக்கும். தளர்வுற்று விழுகின்றவர்களைத் தாங்கும் அருமை சுமந்து விழுந்தவனுக்கே தெரியும்.