மீன்கள் நீந்தும் வானம்

DSC_3153_1

ரூஃபியின் அழுகையை என்ன செய்தும் நிறுத்த முடியவில்லை. அது தூக்கத்திற்கான அழுகை. அவளது கையில் எதையாவது விளையாடக் கொடுத்தால் அவள் அழுகை நின்று தூங்கி விடுவாள்.

விளையாட்டுப் பொருட்கள் அத்தனையும் அவள் முன் கொட்டப்பட்டது. உலகின் விதி எனும் பொம்மை அவற்றிலிருந்து உருண்டு வந்து ரூஃபியின் காலை தொட்டுக் கொண்டு நின்றது. அதை தன் இடது கையால் எடுத்தாள். அது அவள் கையிலிருந்து உருண்டு கீழே விழுந்து சிதறியது. உலகின் விதிகள் அத்தனையும் ரூஃபியின் காலடியில் பரந்து சிதறிக் கிடந்தன. அவற்றின் மீது தன் கையை வைத்துத் தரையோடு சேர்த்து வேகமாக அசைத்தாள். அவை தாறுமாறாக எல்லாத் திசைகளிலும் பறந்து விழுந்தன.

அடுத்த கணமே, மீன்கள் என்பது வானில் நீந்தி உயிர் வாழும் உயிரினமாய் மாறிப் போனது.

பறவைகளுக்குச் சொந்தமான வானை மீன்கள் எடுத்துக் கொண்டதால், கடலை பறவைகள் எடுத்துக் கொண்டன. அவை கடலுக்குள் பறந்து உயிர் வாழும் உயிரினமாய் மாறிப் போனது.

ஒரு மீனவன் தன் படகில் வலையை எடுத்துக் கொண்டு மீன் பிடிக்கக் கிளம்பினான். படகு எழும்பி ஆகாயம் நோக்கிப் பறந்தது. வலையை ஆகாயத்தைப் பார்த்து மேல் நோக்கி வீசினான். அது மேகங்களுக்கிடையில் உள்ள ஆழத்தில் விழுந்து பரவியது. மீன்கள் சிக்குவதற்காய் விரிந்திருந்த தன் வலை மீது கண்களைப் பதிய வைத்துக் காத்திருந்தான். மேகங்கள் தொடர்ந்து வந்து படகை மோதிக் கொண்டிருந்தன. ஆகாயத்தில் அப்படகு அழகாய் மிதந்து ஆடிக் கொண்டிருந்தது.

ரூஃபி அயர்ந்து தூங்கியிருந்தாள். அவள் உதட்டு விளிம்பில் வேகமாய் ஒரு புன்னகை தோன்றி மறைந்தது.