முழு நிலா நாள்

அன்று முழு நிலா நாள்.

அந்த நாளில் முழு நிலவைச் சந்திப்பது ரூஃபியின் வழக்கம். அன்று அவளது பிறந்த தினமும் என்பதால் தன்னிடம் இருந்த மகிழ்ச்சி முழுவதையும் ஒரு பையில் கட்டிக் கொண்டு நிலவைச் சந்திக்க நடந்தாள்.

அந்த மரம் அங்கிருந்தவற்றுள் மிக உயரமானது. முழு நிலவை மிக அருகில் சந்திக்க அந்த மரத்தின் உச்சிக்கு ஏறினால் போதும். அந்த மரத்தை ரூஃபி இன்னும் கொஞ்ச நேரத்தில் அடைந்து விடுவாள்.

Image

தன்னோடு தொடர்ந்து வந்த முழு நிலவை வழியெங்கும் அண்ணார்ந்து பார்த்து சிரித்துக் கொண்டே நடந்தாள். ரூஃபியின் முகம், அவள் நடந்த பாதையின் வளைவுகள், வழியில் கடந்து சென்ற வண்ணத்துப்பூச்சி , மரங்கள், செடிகள் அத்தனையும் முழு நிலவின் வெள்ளொளியால் நிரம்பியிருந்தன. தன் பையிலிருந்த மகிழ்ச்சியை கை நிறைய அள்ளி வழி முழுவதும் தூவிக் கொண்டே துள்ளி ஓடினாள் ரூஃபி. அவை விழுந்த இடமெல்லாம் தளிர் விட்டுப் பெருகின.

அந்த உயர்ந்த மரத்தை அடைந்த ரூஃபியை மரத்திலிருந்த அணிலொன்று தன் முதுகில் ஏற்றிக் கொண்டு உச்சிக்குக் கொண்டு போய்ச் சேர்த்தது. நன்றி எதையும் எதிர்பார்க்காமல் ஒரு புன்னகையை மட்டும் கொடுத்து விட்டு மரத்தை வேகமாய்ச் சுற்றி இறங்கியது அணில்.

Image

உச்சிக் கிளையில், காற்றில் அசைந்தபடி அமர்ந்திருந்த ரூஃபியை மேகங்கள் விலக்கிப் பார்த்து வெள்ளொளியைப் பாய்ச்சியது முழு நிலவு. அது நிலவின் பேரானந்தப் புன்னகை.

ரூஃபிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைச் சொன்னது முழு நிலவு. ‘என்ன பரிசு வேண்டுமானலும் கொடுக்கத் தயார்’ எனக் கூறி பிறந்த நாள் பரிசாக என்ன வேண்டும் எனக் கேட்டது முழு நிலவு.

எப்போதும் வெள்ளையாகவே இருக்கும் முழு நிலவை அன்று ஒரு நாள் மட்டும் தனக்குப் பிடித்த ஊதா நிறத்தில் பார்க்க வேண்டும் என்ற தனது ஆசையை முழு நிலவிடம் சொன்னாள் ரூஃபி.

தாமதமின்றி மறு கணமே தன்னை ஊதா நிறத்தில் மாற்றிக் கொண்டது முழு நிலவு. தன் பையிலிருந்த மிச்ச மகிழ்ச்சியை அள்ளி எடுத்து முழு நிலவுக்குக் கொடுத்தாள் ரூஃபி. பதிலுக்கு, காலியான அந்தப் பையை நிறைய அன்பைக் கொட்டி நிரப்பியது முழு நிலவு.

அந்தப் பையை சுமந்து கொண்டு வீடு திரும்பினாள் ரூஃபி.

தன்னோடு தொடர்ந்து வந்த முழு நிலவை வழியெங்கும் அண்ணார்ந்து பார்த்து சிரித்துக் கொண்டே நடந்தாள். ரூஃபியின் முகம், அவள் நடந்த பாதையின் வளைவுகள், வழியில் கடந்து சென்ற வண்ணத்துப்பூச்சி , மரங்கள், செடிகள் அத்தனையும் முழு நிலவின் ஊதா ஒளியில் நிரம்பியிருந்தன. தன் பையிலிருந்த அன்பைக் கை நிறைய அள்ளி வழி முழுவதும் தூவிக் கொண்டே துள்ளி ஓடினாள் ரூஃபி. அவை விழுந்த இடமெல்லாம் தளிர் விட்டுப் பெருகின.