சில சுடுமண் பொம்மைகள்

526793_460132214057244_472157321_n 1507161_10201301701649429_1012527403_n

சில சுப காரியங்கள், அலைச்சல்கள், அதிகாலை ஃபிரெஞ்சு வகுப்புகள், அலுவலக வேலைப் பளு, இடையில் கொஞ்சமாய் வாசிப்பு என வெளி வர முடியா  ஒரு சக்கரத்திற்குள் இருப்பதால் கழுகுமலை தொடர் ஓவியங்களை இப்போதைக்கு செய்ய நேரம் வாய்க்கவில்லை. விரைவில் மீண்டும் தொடர வேண்டும்.

இதற்கிடையில் சென்ற வருடம் செய்த சில சுடுமண் உருவங்களை பகிர எண்ணியதால் இந்தப் பதிவு.

சிறு வயதிலிருந்தே ஐயனார் குதிரை செய்ய வேண்டும் என்ற ஆசை உண்டு. முதல் படத்தில் உள்ளது அதற்கான முதல் முயற்சி. உடல் ஒடுங்கிய – கழுத்து நீண்ட – வட இந்திய பாணி குதிரையே நான் செய்ய நினைத்தது. ஆனால் செய்யும் போது எப்படியெல்லாமோ உருமாறி கடைசியில் இந்த வடிவத்தை வந்தடைந்தது அந்த மண். கால்களை தனியே செய்து இணைப்பதற்கான பதத்தை அந்த மண் இழந்திருந்தது. சுடுமண் உருவம் செய்வதற்கான மண்ணை வேகமாக கையாள வேண்டும். அல்லது மெதுவாக செய்வதென்றால் அதற்கான சில முறைகளை கடைபிடிக்க வேண்டும். இரண்டும் எனக்கு இன்னும் பிடிபடவில்லை. அதனால் இந்த வடிவிலேயே முடித்து சுடுவதற்கு கொடுத்துவிட்டேன்.

சுடுமண் உருவங்களை உள்ளீடற்ற கூடாகச் செய்வதே ஏற்றது. சிறு சிறு மண் வளையங்களை உருட்டி ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கி, கடைசியில் எல்லா வளையங்களையும் தேய்த்து சேர்த்து விட்டால் கூடு போன்ற வடிவம் கிடைத்து விடும். இந்த முறையைத்தான் நானும் பயன்படுத்தினேன். சுடுமண் முறைகளில் இது மிகப் பழைய உத்தி. காலங்காலமாய் இன்றும் கிராமத்தில் இப்படித்தான் சாமிக் குதிரைகள் செய்யப்படுகின்றன. 12 அடி உயரக் குதிரையைக் கூட இப்படிச் செய்து விடுவார்கள்.

இரண்டாவது படத்தில் உள்ளது சென்ற வருட கிறிஸ்துமஸ் குடிலுக்காக செய்தவை. மொத்தம் 13 உருவங்கள் செய்தேன். அவற்றுள் படத்தில் உள்ளது திருக்குடும்பம் மட்டுமே. வரைவதில் எனக்குப் பிடித்த வண்ண ஊடகமான அக்ரிலிக்கை முதல் முறையாக சுடுமண் உருவங்களில் பயன்படுத்திப் பார்த்தேன். கச்சிதமாகவே சுடுமண்ணோடு பொருந்திக் கொண்டது.

இந்த வருடமும் நிறைய ஓவியங்கள் வரையவும் கொஞ்சம் சுடுமண் உருவங்கள் செய்யவும் நேரம் அமைய வேண்டும். இதைச் செய்ய வாசிப்பே எனக்கு உந்துதல். அதுவும் சீராக நடக்க வேண்டும்.