முராகமியின் புத்தன்

DSC_2471_1

சென்ற மாதம் படிக்கத் துவங்கிய நாவல் kafka on the shore. ஜப்பானிய எழுத்தாளர் ‘ஹருக்கி முராகமி'(Haruki murakami) எழுதிய நாவலின் ஆங்கில மொழியாக்கம். இன்றுதான் படித்து முடித்தேன். வாஸந்தியின் ‘விட்டு விடுதலையாகி’ என்ற நாவல் மூலமாகத்தான் இந்த நாவலைப் பற்றி அறிந்தேன். நான் படிக்கும் முதல் மீவியற்பியல்(metaphysical) நாவலிது. அடுக்கடுக்காக பல கனவுகள் வழியே சென்று திரும்பியது போன்றதொரு அனுபவம். மேலுள்ள ஓவியம் நாவல் படித்துக் கொண்டிருந்த போது வரைந்தது. சார்க்கோல் மற்றும் பேஸ்டலில் ஆரம்பித்து இறுதியில் அக்ரிலிக் வன்ணம் கொண்டு வரைந்து முடித்த படம்.

நாவலில் வரும் ‘நகாடா’ என்ற பாத்திரத்தை மையமாக வைத்து இந்த ஓவியத்தை வரைந்தேன். நாவலின் முதன்மைப் பாத்திரம் காஃப்கா என்ற 15 வயது சிறுவன். வயதான நகாடா முக்கியமான மற்றொரு மையப் பாத்திரம்.

சிறு வயதில் ஒரு வினோத விபத்தில் தனது அறிவுத் திறன் மொத்தத்தையும் இழக்கிறான் நகாடா. எழுதும் திறன், வாசிக்கும் திறன், அரூபச் சிந்தனை என அத்தனை அறிவு நுட்பத்தையும் இழந்து விடுகிறான். ஒரு மனிதனுக்குரிய எந்தவொரு திறனும் அற்று அரசாங்கத்தின் உதவித் தொகையுடன் வாழ்கிறான்.

நேரம், கிழமை போன்றவற்றின் கணக்குகள் தெரிவதில்லை. குறிப்பிட்ட அளவுக்கு மேலான பணத்தின் மதிப்பை புரிந்து கொள்ள முடிவதில்லை. சில நேரங்களில், தூங்க ஆரம்பித்தால் நாள் கணக்கில் தூங்குபவன். தனக்கு நிதியுதவி தரும் கவர்னர்தான் நாட்டின் மொத்த அரசாங்கம் என நினைப்பவன். தனது வசிப்பிடம் தாண்டி வெளியே எந்த ஊர்களுக்கும் செல்வதில்லை. அவனது பல வருட உழைப்பில் கிடைக்கும் பணத்தை அவனது உறவினன் ஒருவன் ஏமாற்றும் போதும் அதை நினைத்து துளியும் கவலை கொள்ளாதவன். காமத்தை அறியாதவன். தேர்வு செய்ய பல இருப்பினும் குறிப்பிட்ட ஒன்றை மட்டும் திரும்பத் திரும்பப் பற்றிக் கொள்பவன். இப்படி தனக்குள்ளேயே தனியாளாக முடங்கிக் கொள்ளும் நகாடா தன் சிறு வயது விபத்தில் சந்திப்பது இழப்பை மட்டுமல்ல. தனது இழப்புகளுக்கு ஈடாக ஒரு விசித்திரத் திறனை தனக்குள் கண்டடைகிறான். அதுதான் பூனைகளுடன் பேசும் திறன்.

பூனைகளின் மொழியைப் புரிந்து கொள்ளவும் அவற்றோடு உரையாடவும் அவனால் முடிகின்றது. இத்திறனைக் கொண்டு காணாமல் போகும் பூனைகளைக் கண்டுபிடித்து உரியவர்களிடம் கொடுத்து பணம் பெற்றுக் கொள்கிறான். அப்படிக் காணாமல் போன கோமா என்ற பூனையொன்றை தேடிச் செல்லும் போதுதான் ‘கவமுரா’ என்ற பூனையைச் சந்திக்கிறான். எல்லாப் பூனைகளுடனும் எளிதாய்ப் பேச முடியும் அவனால் கவமுராவுடன் பேச முடிவதில்லை. அவனால் அப்பூனை பேசுவதை விளங்கிக் கொள்ள முடியவில்லை. கிட்டத்தட்ட மனிதரில் நகாடா எப்படி தன் இயலாமைகளினால் தனிப் பிறவியாய் இருக்கிறானோ, அது போலவே கவமுராவும் இருக்கின்றது. கவமுரா அப்படி இருப்பதற்கும் ஒரு விபத்துதான் காரணம். தன்னை அப்பூனையோடு அடையாளப்படுத்திக் கொள்கிறான். நகாடா மிகத் தேர்ந்த தச்சனும் கூட. வருடக் கணக்காக மர வேலைப்பாடுகளை செய்நேர்த்தியுடன் செய்து வந்தவன். காலப்போக்கில் அத்தொழில் நலிவடைந்தபின்னர் கவர்னரின் நிதியுதவியுடன் வாழத் தொடங்கியவன்.

நாவலெங்கும் அதிகமாக கலந்திருக்கும் இசை, காமம், அறிவுஜீவித் தனம் ஆகியவை நகாடா என்ற பாத்திரத்திடம் சுத்தமாக இருப்பதில்லை. அலுப்பைத் தரக் கூடிய இந்த தட்டையான குணாதிசயமுடைய நகாடா பல பரிமாணங்களில் நம்மை வியக்க வைக்கும் பாத்திரம். முக்கியமாக ஒரு கொலைச் சம்பவத்தினால் தன் வசிப்பிடம் தாண்டி வெளியே பயணம் செய்ய நேரிடும் போது நகாடாவின் பாத்திரம் இன்னும் பல நுட்பங்களோடு பிரமாண்டமாகின்றது. தனக்குள் ஒழிந்திருக்கும் தச்சுத் திறமையை பயன்படுத்தி தனது பயணத்தில் சந்திக்கும் ஹோஷினோ என்பவனின் முதுகுவலியை குணப்படுத்துகிறான்.

ஹோஷினோ உள் நுழைந்த பிறகு இசையின் பங்கு நாவலில் அதிகமாக வெளிப்படுகிறது. நகாடாவின் சித்தரிப்பும்  சம்பவங்களும் இன்னும் சிக்கல் மிகுந்ததாக மாறுகின்றது. இந்தப் பகுதிகளில்தான் நகாடாவை புத்தனாக நாவல் அடையாளம் காண்கின்றது. சலனமற்ற நகாடா ஹோஷினோ மீது ஏற்படுத்தும் சலனம் மிகப் பெரியது. நகாடாவின் பிணத்தை அறையில் வைத்துக் கொண்டு ஹோஷினோ பேசும் விஷயங்கள் நாவலின் முக்கியமான பகுதி. நாவல் முடிவை நெருங்கும் போது காட்டிற்குள் இருக்கும் மர்ம நகரத்திற்குள் காஃப்கா செல்கிறான். அந்த வினோத நகரில் நேரம் என்பதே கிடையாது. நினைவுகள் கிடையாது. எழுத்துக்களோ, புத்தகங்களோ, ஓவியங்களோ கிடையாது. அந்த நகரம் கூட நகாடாவின் குணாதிசயத்தின் நீட்சி போலவே உள்ளது.

நாவலின் ஒரு துளிதான் இந்த நகாடா. இதைப் போன்ற எண்ணற்ற அதிசயங்கள் நிரம்பிச் சிந்தும் ஒரு கனவு வெள்ளம் இந்நாவல். ஜானி வாக்கர், KFC-ன் முதலாளி கல்னல் சாண்டர்ஸ் என இன்னும் சில விசித்திரமான கதைமாந்தர்கள், காஃப்காவையும் ஷேய்கியையும் வைத்து ஒடிபஸ் தொன்மத்தின் அடிப்படையில் பின்னப்பட்டுள்ள கதை, ஒரு அத்தியாயத்தில் ஒரு பாத்திரம் மூலம் சொல்லப்படும் தத்துவத்தை அடுத்த அத்தியாயத்தில் வேறொரு பாத்திரம் மூலம் பினைத்தல், இதையெல்லாம் தாண்டி மிக முக்கியமாக முராகமியின் எழுத்தில் வெளிப்படும் கட்டுக்கடங்காத கற்பனை எல்லாம் சேர்ந்து நம்மை ஒரு கனவு மனநிலைக்குக் கொண்டு செல்கின்றது இந்த நாவல்.