பொம்மை

DSC_2330

கருப்புத் தாளில் அக்ரிலிக் வண்ணம் கொண்டு வரைந்த ஓவியம்.

பெங்களூர் M.G ரோட்டில் அமைந்துள்ள மெட்ரோ ஸ்டேஷனுக்கு அடுத்துள்ள Rangoli- Metro Art Center(R-Mac) என்ற இடம் முக்கியமான கலை மையமாக உருவெடுத்து வருகின்றது. பெங்களூரின் முக்கிய வணிக மையமான இந்த இடத்தை வணிக வளாகத்திற்கு தாரை வார்த்து விடாமல் கலை மையத்தை உருவாக்கத் திட்டமிட்ட அரசாங்கம் உண்மையிலேயே பாராட்டுதற்குரியது.

இங்கு தற்போது பொம்மலாட்டம் மற்றும் தோல்பாவை சம்பந்தமான நிகழ்வுகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பல்வேறு பாணி பொம்மலாட்ட பொம்மைகளின் கண்காட்சியும் இங்கு நடக்கின்றது. கைகளால்/விரல்களால் இயக்குவது, நூல் கொண்டு இயக்குவது, கம்புகள் மூலம் இயக்குவது என பல பொம்மைகள். இந்தியாவின் பல்வேறு பாணி பொம்மைகள், தாய்லாந்து, பர்மா, இந்தோனேஷியா மற்றும் ஐரோப்பிய பாணி பொம்மைகள் சில என இங்கு காட்சிப்படுத்தியுள்ளனர். அவற்றுள் எனக்குப் பிடித்த ஒரு ஜோடி பொம்மையே மேலுள்ளது. இது ராஜஸ்தான் பாணி பொம்மை. ஒரு வித கொண்டாட்ட மனநிலையை உருவாக்கும் வண்ணக் கலவையில் பல ராஜஸ்தான் பொம்மைகள் இருந்தன.

மாலையில் தோல்பாவைக் கூத்தும் அரங்கேறியது. ஒரு பஞ்ச தந்திரக் கதை அது. ஒரு யானை மரத்தை சாய்த்து விடுவதால் ஒரு பறவைக் கூடு சிதைந்து குஞ்சுகள் இறக்கின்றன. தவளை, குயில், மரங்கொத்தி என சின்னஞ்சிறு உயிர்கள் சேர்ந்து அந்தப் பெரிய யானையை பழி தீர்க்கின்றன. பல குழந்தைகள் தங்கள் பெற்றோர்களை பின் வரிசையில் விட்டு ஒன்றாய் முன் வரிசையில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர். ஒரு குழந்தையின் ஒட்டு மொத்த கவனத்தையும் தன் பக்கம் திருப்ப வேண்டுமென்றால் தனது அத்தனை சக்தியையும் ஒரு கலை  பயன்படுத்தியாக வேண்டும். இன்று அது நடந்தது.

அரை மணி நேர நிகழ்ச்சி முடிந்ததும் எல்லோரும் எழுந்தனர். குழந்தைகள் அனைவரும் இன்னும் தொடரும் என்ற ஏக்கத்தில் திரையைப் பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தனர். நாங்கள் பார்த்தது வெறும் யானை பொம்மையை, குயில் பொம்மையை, தவளை பொம்மையை. ஆனால் அந்தக் குழந்தைகள் பார்த்தது யானையை, குயிலை, தவளையை.