சில ஓவியங்கள்

DSC02565 5

இடங்களுக்குச் சென்று அங்கு அமர்ந்து வரைவது என்பது பள்ளி நாட்கள் முதற்கொண்டு நான் அதிகமாகச் செய்த விஷயம். கழுகுமலையில் பல படங்களை அவ்வாறு வரைந்துள்ளேன். மலையுச்சி, வெட்டுவான் கோவில், நீர் நிரம்பிய கண்மாய், வற்றிய கண்மாய், ஊர்த் தேவாலயம், கருவேல மரக் கூட்டம், குட்டைப் பனைமரம், ஆலமரம் என அந்தப் பட்டியல் நீளமானது.

தொலைந்தது போக எஞ்சிய ஒரே படம் மேலுள்ளது. கழுகுமலையின் மலையுச்சியில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோவில் இது. வரைந்து கிட்டத்தட்ட 14 வருடங்கள் ஆகின்றன. உச்சியில் பலத்த காற்றிற்கு நடுவே அமர்ந்து மிகச் சிரமப்பட்டு வரைந்த படமிது. காற்றின் வேகத்தில், இந்தியன் இங்க் பல இடங்களில் திட்டுத் திட்டாக கொட்டியது. கணினியில் அவற்றையெல்லாம் துடைத்திருக்கிறேன்.

இன்று வரை தொடரும் – நேரில் கண்டு வரையும் இந்தப் பழக்கத்திற்கு முதல் காரணம் எனது தமிழாசிரியர்தான். புகைப்படத்தையோ, அச்சிட்ட படத்தையோ பார்த்து வரைவது உண்மையான கலையல்ல என்ற எண்ணத்தை மிக வலுவாக மனதில் பதியச் செய்தவர் அவர்தான். நினைவிலிருந்து வரைவதையும், நேரில் கண்டு வரைவதையும் ஊக்கப்படுத்தியவர். அவசியம் ஏற்பட்டாலொழிய படத்தைப் பார்த்து வரைவதைச் செய்வதில்லை. அப்படியே வரைந்தாலும் எனக்கு வசதியான வடிவத்தில் மாற்றி வரைந்து கொள்வது வழக்கம்.

நேரில் கண்டு வரையும் அனுபவம் வாழ்நாள் முழுதும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். நேரில் வரையும் போது அந்த இடத்தை மிகத் துல்லியமாக புரிந்து கொண்டு வரைய முடியும். அந்தப் படத்தை பார்க்கும் போதெல்லாம் அதை வரைந்த மொத்த சூழலும் கண்முன் விரியும்.

ஆளுயரப் பனைமர நிழலடியில் அமர்ந்து கருவேலக் கூட்டத்தை வரையும் போது பல சப்தங்களுக்கு நடுவில் மனம் ஒரு புள்ளியில் வந்து நின்றதை இப்போது உணர முடிகிறது. அந்த சப்தங்கள் முறையே.. காற்றில் படபடக்கும் பனையோலை, பனைமரத்தில் வந்தடையும் கிளிகள், அவ்வப்போது கடந்து செல்லும் டிராக்டர், புற்களை தரையில் தேய்த்தபடி செல்லும் TVS 50, ஆடுகளின் சப்தம், அவற்றை மேய்க்கும் பெரிசுகள் வாயால் எழுப்பும் ஒலி என பல சப்தங்களும், சூழலும் சேர்ந்து ஒரு ஓவியத்தை வரைந்த உணர்வு ஏற்பட்டது.

வெட்டுவான் கோவிலின் முழு வடிவத்தையும் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு வரைந்த நாளில், படத்தை முடிக்கும் நேரத்தில் மழை பிடித்துக் கொண்டது. வண்ணத்தில் கொஞ்சத்தை ஒரு துளி கலைத்திருந்தது. அதுவும் ஓவியத்தின் ஒரு பகுதியாகவே மாறியிருந்தது. மழை விடும் வரை வெட்டுவான் கோவிலின் உள்ளே சென்று அமர்ந்து கொண்டேன். வெளியே கொட்டும் மழை. வெளவாலின் நெடியுடன் உள்ளே இருளும் பேரமைதியும். கொஞ்சம் மிச்சம் இருந்த படத்தை வரைந்தேன். அன்று உணர்ந்த மன அமைதிக்கு நிகரான அனுபவம் அதற்குப் பின் இன்று வரை எப்போதும் கிடைத்ததில்லை.

இந்தப் பழக்கத்தால் கிடைத்த முக்கியமான ஒரு விஷயம் தனிமைக்கு என்னைப் பழக்கப்படுத்திக் கொண்டது. சிறு வயதில் நேர்மறையாக தனிமைக்குப் பழக்கப்படுவதை மிகப் பெரிய பொக்கிஷமாகவே கருதுகிறேன்.

கீழுள்ள ஓவியங்கள் சமீபத்தில் பாரீஸ் சென்ற போது அங்கு நேரில் கண்டு வரைந்தவை

DSC_1601 - Version 5

விக்டர் யூகோவின் சிலை: ஓகிஸ்ட் ஹோடான்(Auguste Rodin) வெள்ளை மார்பிளில் வடிவமைத்த சிலை. பாரீஸின் ஹோடான் மியூசியத்தில் அச்சிலை முன் அமர்ந்து வரைந்த கோட்டோவியம். ஹோடானின் சிற்ப உடல்களில் கல்லின் கடினத்தன்மை மறைந்து தசையின் குழைவுத் தன்மை வெளிப்படும்படிச் செய்யப்பட்டிருக்கும். அதற்கு அவர் கையாளும் உத்தி அவருக்கே உரிய பாணியாக மாறிய ஒன்று. உடலைத் தவிர சிற்பத்தின் மற்ற பாகங்களனைத்தும் சொறசொறப்பானவையாகச் செய்யப்பட்டிருக்கும். யூகோவின் இச்சிற்பத்தில் அவர் அமர்ந்திருக்கும் இடமும் மேலாடைத் துணியும் இத்தன்மையில் செய்யப்பட்டிருக்கும்.

DSC_1603 - Version 4

The thinker: இதுவும் ஹோடான் வடிவமைத்த உலகப் புகழ்மிக்க சிலை. ஹோடான் மியூசியத் தோட்டத்தில் அமர்ந்து வரைந்தது. the gates of hell என்ற சிற்பத் தொகுப்பின் ஒரு பகுதியாக செய்யப்பட்ட சிலை இது. inferno-வின் அடிப்படையில் உருவான இச்சிற்பத் தொகுப்பில் மைய உருவமாக இச்சிலை உள்ளதால் இந்த உருவத்தை ‘தாந்தே’ எனவும் சில கலை விமர்சகர்கள் கூறுவர்.

DSC_2028_1

நுபியன் இனத்தைச் சேர்ந்தவன் முதலையிடம் புரியும் சண்டை: எர்ன
ஸ்ட் பரியாஸ் வடிவமைத்த சிற்பமிது. ஓர்ஸே மியூசியத்தில் அமைந்துள்ளது இச்சிற்பம். இதை வரையும் போது ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு காதல் ஜோடி அருகே வந்து அமர்ந்து கொண்டனர். அவர்களோடு அரட்டையடித்துக் கொண்டே வரைந்த படமிது.

DSC_1415

ஆங்கிலப் புத்தகக் கடை: ‘ஷேக்ஸ்பியர் அண்ட் கம்பெனி’ என்ற இந்த ஆங்கிலப் புத்தகக் கடை பாரீஸில் மிகப் பிரசித்தம். மிகச் சின்னக் கடை. இரண்டு முக்கியமான புத்தகங்களை இங்கு வாங்கினேன். ஒன்று- இயேசு பேசிய மொழியான அரமேயம் பற்றியது. மற்றொன்று – பால் ககான் மற்றும் வான் கா இருவரும் ஒன்றாகத் தங்கியிருந்த நாட்களைப் பற்றி சொல்லும் ‘yellow house’ என்ற புத்தகம்.

DSC_1417_1

பாரீஸின் சுற்றுலா அடையாளம்: கூட்டத்தின் காரணமாய் மிக வேகமாக வரைந்த ஈஃபிள் கோபுரம்.

கவிதைகள்

colorஅக்ரிலிக் வண்ணம் கொண்டு பேப்பரில் வரைந்த ஓவியமிது.

இதுதான் முடிவான அர்த்தம் என்று ஒரு எல்லையை வகுத்துக் கொள்ளாமல் ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் புது அர்த்தங்களையும் புது அனுபவங்களையும் வாரி வழங்கிக் கொண்டே இருக்கிறது – கவிதை என்ற இந்த விநோதம்.

மற்றுமொரு முறை மனுஷ்ய புத்திரனின் கவிதைத் தொகுப்புகளை(பசித்த பொழுது, நீராலானது) வாசிக்கும் போது இரண்டு விஷயங்கள் திரும்பத் திரும்ப தென்பட்டன:

1. சின்னஞ் சிறியவைகளின் உலகம்.
2. நினைவுகள் சார்ந்து தனித்தன்மை கொள்ளும் நிகழ்வு, இடம், பொருள், மனிதர்கள்.

பயமற்ற வாழ்வு, கடைசியாக, ஒரு நிமிடம் பெய்த மழை என பல கவிதைகளை முதல் வகைக்கு உதாரணமாகச் சொல்லலாம்.

கவிதை வரிகளை தனியே எடுத்து மேற்கோள் காண்பிப்பது, கவிதையின் உறுப்புகளை தனியே அறுத்தெடுப்பது போன்றது. ஆனால் சில நேரங்களில் இந்தக் குற்றத்தை செய்வதைத் தவிர வேறு வழியில்லை.

‘கைகளில் நில்லாதது’ என்ற கவிதையில் வரும் வரிகள் இவை:

‘இன்று
ஓர் இலை உதிர்ந்தபோது
ஒரு மரம் அதிர்ந்ததைப் பார்த்தேன்’

இந்த வரிகள் ஒரு கணத்தில் கண்கள் கலங்கச் செய்தன. இந்த வரிகளை தனியே எடுத்ததால் அந்தக் கவிதையும் ஒரு பெரும் அதிர்வைச் சந்தித்திருக்கலாம்.

இரண்டாம் வகை கவிதைகள் எக்கச்சக்கம். அவற்றுள் சில – ஒரு மரத்தைப் பற்றிய குறிப்பு, கடலிலிருந்து வந்தவை, கொலை நடந்த இடம், தடயம், வேறொரு நாள்

‘வேறொரு நாள்’ என்ற கவிதை நீராலானது தொகுப்பில் எனக்கு மிகப் பிடித்த ஒன்று.

மேலுள்ள ஓவியத்தை வரையத் தூண்டிய ‘அந்த இடம்’ என்ற கவிதை:

‘போகும்போது
உன்னுடன் கொண்டுவந்த
எல்லாவற்றையும்
எடுத்துக் கொள்கிறாய்

ஆனால்
அந்த இடம் மட்டும்
அப்படியே எஞ்சிவிடுகிறது

நீயும் கொண்டுவராத
ஏற்கனவே இருந்துமிராத
அந்த இடம்’

சின்னதொரு செயல்

DSC_2156

ரொம்ப நாளுக்கு அப்புறம் கேன்வாஸ் கொண்டு பெரிய அளவில்(24 X 36 inches) அதிக முயற்சியின்றி வரைந்த படமிது. பயன்படுத்திய வண்ணம் அக்ரிலிக்.

பெங்களூரில் உள்ள சாங்கி டேங்க் எனப்படும் செயற்கை ஏரியின் ஒரு பகுதியில் தெப்பம் போன்ற ஒரு அமைப்பு உண்டு. புறாக்களின் உறைவிடம் அது. நடை பயிற்சி செய்வோர் அளிக்கும் தானியங்களை கும்பலாகச் சேர்ந்து உண்டு பசி தீர்த்துக் கொண்டிருந்தன புறாக்கள்.

எல்லா புறாக்களும் மும்முரமாக தானியங்களைக் கொத்திக் கொண்டிருக்க, பசியாறி முடித்த ஒரு புறா மட்டும் படியிறங்கி – பறந்தல்ல – தத்தித் தத்தி இறங்கி நீரருந்த கடைசிப் படியை அடைந்தது. தண்ணீருக்குள் இன்னும் சில படிகளும் இருக்கலாம்.

இயக்கமற்று அமைதியாகத்தான் இருந்தது மொத்த நீரும். தாகம் தணிக்கும் சாக்கில் தன் சின்ன அலகால் ஒரு பெரும் அலையை கிளப்பிவிட்டு பறந்து சென்று தன் கூட்டத்தோடு இணைந்து கொண்டு தன் அடையாளம் மொத்தத்தையும் மறைத்துக் கொண்டு விட்டது.

சின்னதொரு செயல். பெரியதொரு சலனம். இச்சிறு நிகழ்வை எதனோடு வேண்டுமானாலும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். கேன்வாஸிற்குள் இந்த நிகழ்வையும் சலனத்தையும் கொண்டு வரவே காமிக்ஸ் போல இரு காட்சிகளாய் சட்டம் பிரித்துக் கொண்டேன். கடின உழைப்பிலெல்லாம் இப்போது நம்பிக்கையில்லை. செய்ய வேண்டியதெல்லாம் எளிமையான விஷயங்களைத்தான் – ஆனால் சரியான இடத்தில், சரியான நேரத்தில்.