மழை ஓய்ந்த நாள்

DSC_2044_1

அக்ரிலிக் வண்ணம் கொண்டு நான் வரைந்த ஓவியமிது.

இந்த ஓவியத்தில் உள்ள நிகழ்வு மிகச் சிறு வயதில் நான் கழுகுமலையில் பார்த்த முதல் மரணச் சடங்கு. இறந்த உடல் ஒன்றை மிக அருகில் முதன்முதலாகப் பார்த்ததும் அப்போதுதான். உண்மையைச் சொன்னால், சடங்குகள் அற்ற சடங்காக அது நிகழ்ந்து முடிந்தது. அன்றைய தினத்தில் இருந்த மனநிலையும் இப்போது அதை நினைத்துப் பார்க்கும் போதான மனநிலையும் முற்றிலும் வேறானவை.

குளத்தில் மீன் பிடிப்பது என் நண்பனுக்கும் அதை வேடிக்கை பார்ப்பதில் எனக்கும் ஒருவகை போதை. அதற்கான சரியான பருவம் அப்போது – மீன்களுக்கும் எங்களுக்கும். அவன் தூண்டிலை தயார் செய்துவிட்டான். தக்கையும் மண்புழுக்களும் கிடைத்து விட்டால் போதும் தொடங்கிவிடலாம்.

கொஞ்சமாய் தூரல் போட்டு விட்டு ஓய்ந்திருந்தது மழை.

கண்மாய் ஓர சகதியில் ஆரம்பித்து வரப்புகளைத் தாண்டிய எங்கள் தேடலில் மண்புழுக்கள் நிறைய சிக்கின. மயிலிறகு மட்டும் கிடைக்கவில்லை. மயிலிறகுத் தண்டைத்தான் தக்கையாக பயன்படுத்த வேண்டும். மீன் முள் வாங்கிய கடையிலேயே மயிலிறகுத் தக்கையும் விற்பனைக்கு இருந்தது. எப்படியும் மண்புழுவுக்காக அலைய வேண்டும். அப்போது வயக்காட்டோரம் மயிலிறகையும் கண்டுபிடித்து விடலாம் என்றேன் நான் – காசை மிச்சப்படுத்த எண்ணி. ஆனால் சுத்தமாக எங்குமே தென்படவில்லை. திட்டுவதற்கான வார்த்தையைத் தேர்வு செய்வதில் அவனது திறமையை ஊரறியும். காது கொடுத்து கேட்க முடியாது. நல்ல வார்த்தைகள் எக்கச்சக்கமாய் இருக்கும். அன்று அவன் திறமை முழுவதையும் பயன்படுத்தினான்.

மதியம் தொடங்கிய எங்கள் பயணம் தொடர்ந்தபடியே இருந்தது. அன்றில்லையென்றாலும் மறுநாளாவது மீன்பிடிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டு தீவிரமாகத் தேடியலந்தோம். பலனில்லை.

மீண்டும் கொஞ்சம் தூரல். பின் ஓய்ந்தது. இருட்ட ஆரம்பித்தது. அலுத்துப் போய் கிளம்பினோம். தூரத்தில் கொஞ்சம் நெருப்பின் வெளிச்சமும் நாலைந்து பேரும் தென்பட்டனர். அருகில் சென்று பார்த்தோம். ஆழமாக குழி தோண்டப்பட்டிருந்தது. குழியின் ஒரு ஓரத்தில் நெருப்பு மூட்டப்பட்டிருந்தது. ஈரப்பதம் காரணமாய் அது முனங்கிக் கொண்டே எரிந்தது. குழிக்குள் ஓர் ஆள் நின்று கொண்டிருந்தார். குழிக்கு மேலிருந்து இறந்த அந்த மூதாட்டியின் சடலத்தை ஒருவர் கொடுக்க உள்ளிருந்தவர் அதை கையேந்தி வாங்கிக் குழிக்குள் வைத்தார் – இல்லை – போட்டார். ஒரே சிரிப்பும் கும்மாளமுமாய் வேலைகள் நடந்தன.

தூரத்து மரத்தினடியில் இருந்தவர்களையும் சேர்த்து ஒரு பத்து பேர்தான் இருந்தனர். அதில் இரண்டு பெண்களும் இருந்தனர். இடுகாட்டில் பெண்களுக்கு நோ என்ட்ரி என்ற பழக்கமெல்லாம் அவர்களிடம் இருந்ததாகத் தெரியவில்லை. இறந்தவர்களுக்கான சப்பரம் இல்லை. மாலை இல்லை. சங்கு சப்தமில்லை. இந்த அம்சங்கள்தான் ஒரு வித பயத்தை உண்டாக்கிவிடுவதாக இப்போது தோன்றுகிறது. எங்கள் தெருக்களில் வழக்கமாக துஷ்டி வீடுகளில் சங்கு ஊதிக்கொண்டே சப்பரத்தில் ஊர்வலம் எடுத்துச் செல்வார்கள். அந்த சங்கு சப்தம் எழுந்த உடனேயே வீட்டிற்குள் ஒழிந்து கொள்வோம். சங்கு சப்தம் கேட்கும் போது திறந்த உடலுடன் இருந்தால் தொப்புளை கையால் மூடிக்கொள்ள வேண்டும் எனச் சொல்வார்கள். உள்ளே ஓர் மூலையில் அப்படிக் கிடப்பதுண்டு. இந்த மாதிரியான பயமுறுத்தும் அம்சங்கள், சடங்குகள்  எதுவுமே அந்தக் கிழவியின் மரணத்தில் நிகழவில்லை. எந்த பயமுமின்றி குழியின் நுனியில் நின்று கொண்டு பார்த்துக் கொண்டிருந்தேன். அங்கிருந்தவர்கள் எங்களை கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.

கிழவியின் பாசமான விசாரிப்பை சிலாகித்தாள் அந்தப் பெண். ‘கிழவிக்கு யாருமில்ல. நம்ம எடுத்துப் போடுறோம். நமக்கு நல்லது செய்யாமலாப் போயிடும்’ அப்டின்னாரு ஒருத்தர். கிழவியின் குமரிப் பருவத்து காலம் பற்றியெல்லாம் கிண்டலாக நிறைய பேச்சு நடந்தது.

நானும் என் நண்பனும் தொடர்ந்து வீடு நோக்கி நடந்தோம். ஒரு இருட்டான பகுதியில் என் நண்பன் திடீரென கத்தினான்.

‘எலேய் பாட்டி பின்னால வருதுடோய்’ எனக் கத்திக் கொண்டே முன்னால் ஓடினான். நானும் அலறியபடி அவனைத் தொடர்ந்து ஓடினேன். தேங்கிய மழை நீரில் கால் அழுத்தமாக தடம் பதித்து தண்ணீர் தெரித்துச் சிதற ஓடினேன். கொஞ்ச தூரம் ஓடிய பிறகு என் நண்பன் நின்று திரும்பி என்னைப் பார்த்துச் சிரித்தான். நானும் சிரித்துக் கொண்டே கையிலிருந்த கவரைப் பிரித்து மண்புழு இருந்த சகதியை எடுத்து அவன் மேல் எறிந்தேன்.

Advertisements

2 thoughts on “மழை ஓய்ந்த நாள்

 1. நம் ஊரை பற்றிய உங்கள் பதிவுகள் அருமை! அருமை!

  நீங்கள் எப்படி ஓவியம் வரைய ஆரம்பித்தீர்கள். எப்படி கற்றுக்கொண்டீர்கள் என்று ஒரு பதிவு கொடுத்தால் நன்றாக இருக்கும்

  • நன்றி.
   ‘சில ஓவியங்கள்'(https://vidhaanam.wordpress.com/2013/08/) என்ற பதிவில் சொல்லியது போல இடங்களுக்குச் சென்று அங்கு அமர்ந்து அந்த இடங்களை வரைந்துதான் கற்றுக் கொண்டேன்.

   கற்பனையில் அதிகமாக கேலிச் சித்திரங்கள் வரைந்தும் கற்றுக் கொண்டேன். அது பற்றி ஒரு பதிவில் எழுதுகிறேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s