காற்றின் நிறம்

DSC_2117_1

கருப்புப் பாறைகள். அதன் மேல் வெள்ளை அலை நுரை. அந்த நுரையின் ஈரத்தால் கல் மீது படிந்த பச்சைப் பாசி. பாறை மீது கிடைமட்டமாக, இடுக்குகளில் செங்குத்தாக என பல கோணங்களில் காட்சி தரும் செந்தூர நிற நண்டுகள். கண்ணுக்கு முடிந்த மட்டும் தெரியும் சாம்பல்-நீல நிறக் கடல். இந்த முறை புதுச்சேரி சென்ற போது பார்த்த காட்சியினை அக்ரிலிக் கொண்டு வரைந்த ஓவியமிது.

சிறு வயதிலிருந்தே வெளிச்சத்தோடு காற்றைத் தொடர்புபடுத்தி காற்றிற்கு வண்ணங்களை கற்பனை செய்து கொள்வதுண்டு. காலையில் வெள்ளை நிறக் காற்று. மதியம் காற்று வீசினால் அதன் நிறம் மஞ்சள். வெப்பம் தணிந்த மாலை நேரக் காற்று சாம்பல் நிறம். இரவின் குளிர்ந்த காற்று கருப்பு நிறம். இதன் காரணமாகவே நீல வண்ணத்தை விட சாம்பல் மற்றும் கருப்பு வண்ணங்கள் குளிர்ந்த வண்ணங்களாக எனக்குத் தோன்றுவதுண்டு. சொல்லப்போனால், நீலமும் ஒரு வகையில் கருப்புடன் தொடர்புடைய நிறம்தான்.

இந்தக் கடலோரம் நிரம்பிக் கிடக்கும் அடர் கருப்பு நிறப் பாறைகள் அப்படி ஒரு குளிர்ந்த உணர்வையே தந்தது. பெரும்பாலான நேரங்களில் கருப்பு வண்ணமே மனதுக்கு அமைதி தரும் வண்ணமாக எனக்கு இருந்துள்ளது. கருங்கல்லில் செதுக்கப்பட்ட சிற்பத்தின் புன்னகையில் கூடுதல் சாந்தமும் அழகும் இருக்கும் என்பது என் எண்ணம்.

சிங்க வேட்டையாடும் நாய்கள்

Acrylic on Paper

Acrylic on Paper

வெறி தலைக்கேறிய நாய்க் கூட்டம் அது. பகல் முழுக்க பசியை அடக்கிக் கொண்டு சாக்கடைச் சகதியில் முழுகித் திழைக்கும். பகலில் இந்தச் சகதியால் ஒவ்வொன்றும் தங்கள் அடையாளத்தை மறைத்துக் கொள்ளும். இரவில் ஆளரவம் அடங்கிய பின் மெல்ல ஒவ்வொன்றாய் சாக்கடை விட்டு வெளியே குதித்தெழும். சாக்கடையில் தோய்ந்த நாய்களின் கால்கள் பதித்த தடங்கள், இரவின் இருட்டில் சத்தமின்றி மறைந்து கொள்ளும். சில குருட்டு நாய்கள் மற்ற நாய்களின் வாசனையை காற்றில் தேடித் தடவி பின்தொடரும்.

ஒவ்வொரு இரவும் விதவிதமான இரைகளை வேட்டையாடி, ரத்தம் காயும் முன் தின்று தீர்த்து விடுவதே அந்த வெறி நாய்க் கூட்டத்தின் வழக்கம். இரவில் இரையின் ரத்தத்தால் ஒவ்வொன்றும் தங்கள் அடையாளத்தை மறைத்துக் கொள்ளும். இரை கிடைக்காத நாளில் ஒவ்வொன்றும் அதனதன் அழுகிய உடலை கடித்தும், புண்களின் ரத்தத்தை குடித்தும் பசியாற்றிக் கொள்ளும்.

அன்று இரவும் அந்த வெறி நாய்க் கூட்டத்தின் வேட்டை தொடங்கியது.

மாபெரும் கவிஞன் ஒருவனின் வீட்டிற்குள் பின் வாசல் வழியே நுழைந்தது ஒரு நாய். அவனது வார்த்தைகள் கொஞ்சத்தை வாயில் கவ்விக் கொண்டு வீதியின் இருட்டுக்குள் வந்தது. மொத்த வெறி நாய்க் கூட்டமும் அங்கு கூடி அந்த வார்த்தைகளை பிய்த்துக் குதறியது. சிதைந்த வார்த்தைகளிலிருந்து கொட்டும் ரத்தத்தை ருசித்துக் குடித்து விட்டு அதனதன் இருண்ட உலகத்திற்குள் சென்று அந்த நாய்கள் பதுங்கிக்கொண்டன.

நம் காலத்தின் மகத்தான கவிஞனது வார்த்தைகள் என்பதை அறியவில்லை அந்த நாய்கள். மரணத்தை விட கசப்பான வலியை எதிர்கொள்வதைத் தவிர அவைகளுக்கு இனி வேறு வலியில்லை.

விலங்குகளின் உடல்

DSC_2111

மாமல்லபுரத்தின் முக்கியமான சிற்பத் தொகுதியான ‘அர்ச்சுனன் தபசு’ என அழைக்கப்படும் சிற்பத் தொகுப்பில் உள்ள ஒரு பகுதியின் ஓவியம். அக்ரிலிக்கும், பேஸ்டலும் கொண்டு வரைந்தேன்.

பள்ளி நாட்களில் படித்தவற்றுள் மிச்ச சொச்சமென்று உருப்படியாக ஞாபகத்தில் ஏதாவது இருக்குமென்றால் அது ஒன்றே ஒன்றுதான். ஜான் கீட்ஸின் ‘Ode on a Grecian Urn’. பாடப்புத்தகத்திலிருந்து அதுவும் ஆங்கிலப் பாடத்திலிருந்து ஒரு விஷயம் பிடித்ததென்றால் அது அந்தக் கவிதைதான். பழைய கிரேக்கத் தாழி ஒன்றின் மீது பாடப்படும் பாடலாக வரும் அக்கவிதை. அத்தாழியின் மீது சில உருவங்களும், சில காட்சிகளும் பொறிக்கப்பட்டிருக்கும். இசைக் கருவியொன்றை மீட்டிக் கொண்டிருக்கும் ஒரு கலைஞனின் உருவத்தைப் பார்த்து அந்தக் கேளாத இசையின் மகத்துவத்தை செவியால் கேட்டு உணரக் கூடிய இசையை விட மேலானதாய் கருதுவார் கவிஞர். மிக அருகாமையில் இருந்தும் தழுவிக் கொள்ள முடியாமல், முத்தமிட்டுக் கொள்ள முடியாமல் நெருங்கிய நிலையில் காட்சிதரும் காதலர் உருவம் நித்திய காதலையும் அப்பெண்ணின் நித்திய வனப்பையும் பிரமிப்பதாய் வரும். அந்த உருவங்கள் தாழியில் காட்சியாய் உறைந்த அந்த கணம் என்றைக்குமாய் நிலைத்து காலங்கள் பல கடந்து வாழும் மகத்துவத்தைப் பேசும் அக்கவிதை.

அர்ச்சுனன் தபசு தொகுதியும் அப்படி உறைந்த பல கணங்களின் தொகுப்புதான். குறிப்பாக விலங்குகளின் சித்தரிப்பும் அவற்றின் உடல் மொழிகளும் வியக்கவைப்பவை. படத்திலுள்ள மானின் இயல்பான ஒரு சின்ன அசைவு இங்கு என்றைக்குமாய் கல்லில் உறைய வைக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர் பாலுசாமி இந்த மானை பன்றி மான்(hog deer) வகையென அடையாளம் காண்கிறார். black buck எனச் சொல்லப்படும் திருகலான கொம்பினையுடைய மான் இச்சிற்பத் தொகுதியில் கிடையாதெனவும் அவர் சொல்கிறார். ஆனால் வதரியாசிரமம் என அவர் சொல்லும் திருமால் கோயிலின் இடப்புறம் ஒரு மான் திருகலான கொம்புடனேயே காணப்படுகிறது. எனவே ஒன்றுக்கும் மேற்பட்ட வகை மானும் இத்தொகுதியில் உள்ளதெனக் கொள்ளலாம்.

யானையின் மென்மையான நடை, பெரிய யானையின் கால்களுக்கிடையே குறும்பாய் சேட்டைகள் செய்யும் குட்டி யானைகள், பாயும், கர்ஜிக்கும், பதுங்கும் சிங்கங்கள், தாயிடம் எம்பிப் பால் குடிக்கும் சிங்கக் குட்டிகள், அழகாய் வளைந்த உடும்பு, நெளிந்து வளைந்து இரைந்து கிடக்கும் ஒரு எலிக் கும்பல், ஆமைகள், ஆடுகள், பல விதப் பறவைகள், மரங்கள் என இயற்கையின் நேர்த்தியான சித்தரிப்பை இச்சிற்பத் தொகுதியில் காணலாம். ஒவ்வொரு விலங்குகளின் உடலும் அவ்வளவு நேர்த்தியாய் கவனித்து உருவாக்கப்பட்டவை. அந்தந்த விலங்கின் முக்கியமான உடல் மொழி கல்லில் கைப்பற்றப்பட்டிருக்கும்.

பொதுவாகவே மரபான கோயில் சிற்பங்களுக்கும் ஓவியங்களுக்கும் தனித்த ஒரு உடற்கூறியல் உண்டு. அது நிஜ உடற்கூறிலிருந்து நிறைய வகையில் வேறுபட்டு இருக்கும். ஆனால் அதுவும் மிக அழகாக இருக்கும். ஆனால் மாமல்லபுரத்து சிற்பங்களில் யதார்த்த சிற்பங்கள் செய்வதற்கான முயற்சியை பார்க்கலாம். உடற்கூறியல் மட்டுமல்லாமல் யதார்த்த பாணியின் பல அம்சங்களையும் இங்கு பார்க்கலாம். மிகச் சிறந்த உதாரணம் மகிஷாசுரமர்த்தினி புடைப்புச்சிற்பத்தில் சக்கராயுதத்தின் பக்கவாட்டு நிலை, பஞ்சரதம் ஒன்றில் முன் பக்க தோற்றத்தில் காட்டப்பட்டிருக்கும் விலங்கு.

மழை ஓய்ந்த நாள்

DSC_2044_1

அக்ரிலிக் வண்ணம் கொண்டு நான் வரைந்த ஓவியமிது.

இந்த ஓவியத்தில் உள்ள நிகழ்வு மிகச் சிறு வயதில் நான் கழுகுமலையில் பார்த்த முதல் மரணச் சடங்கு. இறந்த உடல் ஒன்றை மிக அருகில் முதன்முதலாகப் பார்த்ததும் அப்போதுதான். உண்மையைச் சொன்னால், சடங்குகள் அற்ற சடங்காக அது நிகழ்ந்து முடிந்தது. அன்றைய தினத்தில் இருந்த மனநிலையும் இப்போது அதை நினைத்துப் பார்க்கும் போதான மனநிலையும் முற்றிலும் வேறானவை.

குளத்தில் மீன் பிடிப்பது என் நண்பனுக்கும் அதை வேடிக்கை பார்ப்பதில் எனக்கும் ஒருவகை போதை. அதற்கான சரியான பருவம் அப்போது – மீன்களுக்கும் எங்களுக்கும். அவன் தூண்டிலை தயார் செய்துவிட்டான். தக்கையும் மண்புழுக்களும் கிடைத்து விட்டால் போதும் தொடங்கிவிடலாம்.

கொஞ்சமாய் தூரல் போட்டு விட்டு ஓய்ந்திருந்தது மழை.

கண்மாய் ஓர சகதியில் ஆரம்பித்து வரப்புகளைத் தாண்டிய எங்கள் தேடலில் மண்புழுக்கள் நிறைய சிக்கின. மயிலிறகு மட்டும் கிடைக்கவில்லை. மயிலிறகுத் தண்டைத்தான் தக்கையாக பயன்படுத்த வேண்டும். மீன் முள் வாங்கிய கடையிலேயே மயிலிறகுத் தக்கையும் விற்பனைக்கு இருந்தது. எப்படியும் மண்புழுவுக்காக அலைய வேண்டும். அப்போது வயக்காட்டோரம் மயிலிறகையும் கண்டுபிடித்து விடலாம் என்றேன் நான் – காசை மிச்சப்படுத்த எண்ணி. ஆனால் சுத்தமாக எங்குமே தென்படவில்லை. திட்டுவதற்கான வார்த்தையைத் தேர்வு செய்வதில் அவனது திறமையை ஊரறியும். காது கொடுத்து கேட்க முடியாது. நல்ல வார்த்தைகள் எக்கச்சக்கமாய் இருக்கும். அன்று அவன் திறமை முழுவதையும் பயன்படுத்தினான்.

மதியம் தொடங்கிய எங்கள் பயணம் தொடர்ந்தபடியே இருந்தது. அன்றில்லையென்றாலும் மறுநாளாவது மீன்பிடிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டு தீவிரமாகத் தேடியலந்தோம். பலனில்லை.

மீண்டும் கொஞ்சம் தூரல். பின் ஓய்ந்தது. இருட்ட ஆரம்பித்தது. அலுத்துப் போய் கிளம்பினோம். தூரத்தில் கொஞ்சம் நெருப்பின் வெளிச்சமும் நாலைந்து பேரும் தென்பட்டனர். அருகில் சென்று பார்த்தோம். ஆழமாக குழி தோண்டப்பட்டிருந்தது. குழியின் ஒரு ஓரத்தில் நெருப்பு மூட்டப்பட்டிருந்தது. ஈரப்பதம் காரணமாய் அது முனங்கிக் கொண்டே எரிந்தது. குழிக்குள் ஓர் ஆள் நின்று கொண்டிருந்தார். குழிக்கு மேலிருந்து இறந்த அந்த மூதாட்டியின் சடலத்தை ஒருவர் கொடுக்க உள்ளிருந்தவர் அதை கையேந்தி வாங்கிக் குழிக்குள் வைத்தார் – இல்லை – போட்டார். ஒரே சிரிப்பும் கும்மாளமுமாய் வேலைகள் நடந்தன.

தூரத்து மரத்தினடியில் இருந்தவர்களையும் சேர்த்து ஒரு பத்து பேர்தான் இருந்தனர். அதில் இரண்டு பெண்களும் இருந்தனர். இடுகாட்டில் பெண்களுக்கு நோ என்ட்ரி என்ற பழக்கமெல்லாம் அவர்களிடம் இருந்ததாகத் தெரியவில்லை. இறந்தவர்களுக்கான சப்பரம் இல்லை. மாலை இல்லை. சங்கு சப்தமில்லை. இந்த அம்சங்கள்தான் ஒரு வித பயத்தை உண்டாக்கிவிடுவதாக இப்போது தோன்றுகிறது. எங்கள் தெருக்களில் வழக்கமாக துஷ்டி வீடுகளில் சங்கு ஊதிக்கொண்டே சப்பரத்தில் ஊர்வலம் எடுத்துச் செல்வார்கள். அந்த சங்கு சப்தம் எழுந்த உடனேயே வீட்டிற்குள் ஒழிந்து கொள்வோம். சங்கு சப்தம் கேட்கும் போது திறந்த உடலுடன் இருந்தால் தொப்புளை கையால் மூடிக்கொள்ள வேண்டும் எனச் சொல்வார்கள். உள்ளே ஓர் மூலையில் அப்படிக் கிடப்பதுண்டு. இந்த மாதிரியான பயமுறுத்தும் அம்சங்கள், சடங்குகள்  எதுவுமே அந்தக் கிழவியின் மரணத்தில் நிகழவில்லை. எந்த பயமுமின்றி குழியின் நுனியில் நின்று கொண்டு பார்த்துக் கொண்டிருந்தேன். அங்கிருந்தவர்கள் எங்களை கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.

கிழவியின் பாசமான விசாரிப்பை சிலாகித்தாள் அந்தப் பெண். ‘கிழவிக்கு யாருமில்ல. நம்ம எடுத்துப் போடுறோம். நமக்கு நல்லது செய்யாமலாப் போயிடும்’ அப்டின்னாரு ஒருத்தர். கிழவியின் குமரிப் பருவத்து காலம் பற்றியெல்லாம் கிண்டலாக நிறைய பேச்சு நடந்தது.

நானும் என் நண்பனும் தொடர்ந்து வீடு நோக்கி நடந்தோம். ஒரு இருட்டான பகுதியில் என் நண்பன் திடீரென கத்தினான்.

‘எலேய் பாட்டி பின்னால வருதுடோய்’ எனக் கத்திக் கொண்டே முன்னால் ஓடினான். நானும் அலறியபடி அவனைத் தொடர்ந்து ஓடினேன். தேங்கிய மழை நீரில் கால் அழுத்தமாக தடம் பதித்து தண்ணீர் தெரித்துச் சிதற ஓடினேன். கொஞ்ச தூரம் ஓடிய பிறகு என் நண்பன் நின்று திரும்பி என்னைப் பார்த்துச் சிரித்தான். நானும் சிரித்துக் கொண்டே கையிலிருந்த கவரைப் பிரித்து மண்புழு இருந்த சகதியை எடுத்து அவன் மேல் எறிந்தேன்.

மெதுஸா

DSC_2041டிவைன் காமெடியின்(இன்ஃபர்னோ) ஒன்பதாவது காண்ட்டோவில் வரும் மெதுஸா(medusa) என்ற நரக தேவதையின் உருவத்தை எனது கற்பனையில் அக்ரிலிக் வண்ணம் கொண்டு வரைந்து பார்த்த ஓவியமிது.

டிவைன் காமெடியின் பல மாந்தர்களைப் போலவே மெதுஸாவும் கிரேக்கத் தொன்மக் கதை மாந்தர்களின் நீட்சியாக வருவதே. மினர்வாவினுடைய ஆலயத்தின் புனிதத்தை நெப்டியூனுடன் சேர்ந்து கொண்டு மெதுஸா கலங்கப்படுத்தி விடுகிறாள். நம்ம ஊராய் இருந்தால் அகில பிரபஞ்ச கரகாட்ட புகழ் சேந்தப்பட்டி முத்தையாவும், காமாட்சியும் செய்தது போல தீமிதிக்கச் சொல்லியிருக்கலாம்! ஆனால் அங்கு மெதுஸா நேரடியாக மினர்வாவின் சாபத்திற்குள்ளாகிறாள். அந்த சாபம் இதுதான்:

‘இந்த பாவத்தின் ஊற்றுக்கண்ணான உனது அழகிய ஜடாமுடி முழுதும் பாம்புகளாக மாறக்கடவது’

அப்படியே நிகழ்கிறது. அதுமட்டுமின்றி, மெதுஸாவை உற்று நோக்கும் எவரும் உடனே கல்லாக மாறி விடும் வினோதமும் நிகழ ஆரம்பிக்கின்றது. பின்னாளில் பெர்ஸியஸ் என்பவன் போரில் ஆயுதமாக மெதுஸாவின் தலையை கொய்து பயன்படுத்துவதாகச் செல்லும் கிரேக்கத் தொன்மக் கதை.

தாந்தேயும் வெர்ஜிலும் நரகத்தின் மேல் பகுதிகளளான ஐந்து வட்டங்களைக் கடந்து ஆழ் நரகமான ‘திஸ்’ (Dis) என்ற நரக நகரத்தின் கோட்டை மதிலுக்கு வெளியே காத்திருக்கின்றனர். நரகப் பிரதேசத்தில் உயிருள்ள உடலுடன் தாந்தே வருவதால் அவர்களுக்கு அங்கு நுழைவதற்கான அனுமதி மறுக்கப்படுகின்றது. வெர்ஜிலும் வாதாடிப் பார்க்கிறார். அதுவரை தாந்தேவிற்கு தைரியம் சொல்லிக் கொண்டு வந்த வெர்ஜிலின் முகத்தில் முதன் முறையாக சந்தேகமும் பயமும் குடிகொள்கிறது. அதைப் பார்த்து தாந்தேவும் பயம் கொண்டு நம்பிக்கை இழக்கிறார். வெர்ஜிலின் உதவியால் ஆபத்தின்றி ஐந்து வட்டங்களைத் தாண்டி வந்தாகிவிட்டது. இனி இந்தப் பாதையில் மீண்டும் தனிமையில் திரும்பிச் செல்வதை எண்ணிப் பார்த்து கலங்குகிறார்.

வான தூதன் வந்து கண்டிப்பாக நமக்கு இவ்வழியைத் திறப்பார் என வெர்ஜில் மீண்டும் நம்பிக்கையூட்டுகிறார். அப்போது மஜீரா, டிஸிஃபோனி, அலெக்டோ என்ற நரக தேவதைகள் கோபத்துடன் கத்திக் கொண்டே நெருங்குகின்றனர்.

அப்படி அவர்கள் கத்தும் போதுதான் மெதுஸாவை அழைக்கின்றார்கள்.

‘மெதுஸா வா. இவனை கல்லாக மாற்றுவோம்’

இந்த சப்தத்தைக் கேட்டு கொஞ்சமும் தாமதிக்காமல், தாந்தே கல்லாக மாறிவிடக் கூடாதென்று வெர்ஜில் தாந்தேவை திருப்பி அவரது கண்களை தன் கைகளால் மூடிக் கொள்கிறார்.

அப்போது ஸ்டிக்ஸ் என்ற ஆற்றின் மீது வான தூதன் நடந்து வருகிறான். பாம்பினைக் கண்ட தவளைகள் துள்ளிக் குதித்து நீராழத்தில் புதைவது போல அத்தனை துர்தேவதைகளும் ஓடி ஒழிகின்றன. திஸ் நகர வாசலை தூதன் திறந்ததும் வெர்ஜிலும் தாந்தேவும் நரகத்தின் ஆறாவது வட்டத்துள் நுழைகின்றனர்.

காரண காரியத்தை பகுத்தாயும் அறிவு(வெர்ஜில்)ஒரு எல்லை வரைதான் உதவும். அதற்கு மேல் தொடர இறையருளின் உதவி(தூதன்) அவசியம் என்பது இந்த ஒன்பதாவது காண்ட்டோ உணர்த்தும் உள்ளர்த்தங்களுள் ஒன்று. கிறித்தவத்தின் திருவருகை என்ற கருத்தையும் குறிப்பாய் உணர்த்துவதாகவும் சொல்லப்படுவதுண்டு.