செந்தூரம்

DSC_2040

கொஞ்ச நாட்களாக ஓவியங்களும், சிற்பங்களுமே எதை வாசிக்க வேண்டுமென்பதை தீர்மானிப்பதாக உள்ளது. விலகல் இன்றி எனக்குப் பிடித்தவற்றின் மீது முழு கவனம் செலுத்த வாய்ப்பாக அமைவதால், இனி இத்திசையிலேயே வாசிப்பை அமைத்துக்கொள்ளத் திட்டம்.

சிற்பி ஹோடானின் ‘நரக வாயில்’ சிற்பமும், குஸ்டவ் டோரேவின் ஓவியங்களும் எப்படி டிவைன் காமெடியை படிக்கத் தூண்டியதோ, அதேபோல சில மரபான ராமாயண கதை சொல்லும் ஓவியங்கள் முறையாக ராமாயணத்தைப் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. உதிரிக் கதைகளாக மட்டுமே தெரிந்து வைத்துள்ளதால், முழுமையாகப் படிக்க வேண்டும் எனத் தோன்றியது. சட்டநாதன் போன்ற நண்பர்களும் சில நல்ல நூல்களை பரிந்துரைத்துள்ளனர்.

மேலுள்ள ஓவியம்  ஆந்திர(காளகத்தி) ஓவியம் ஒன்றைப் பார்த்து வரைந்தது. ரொம்பப் பழைய ஓவியமல்ல. 1955-ஐ சேர்ந்தது. ஆனால் காலங்காலமாக பயன்படுத்திவந்த வடிவத்திலும் வண்ணக் கலவையிலும் வரையப்பட்டதெனச் சொல்லலாம். மொத்த ராமாயணக் கதையின் முக்கிய காட்சிகள் அனைத்தும்  ஒரு பெரிய துணியில் வரையப்பட்டிருக்கும். துணியின் நடுவில் ராம பட்டாபிஷேக காட்சி பெரியதாக வரையப்பட்டிருக்கும். கதை முழுதும் மேலிருந்து குறுக்காக 10 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு வரையப்பட்டிருக்கும். ஒவ்வொரு படத்திற்கும் கீழே தெலுங்கில் குறிப்பு இருக்கும்.

இதே முறையில் பெங்களூர் மியூசியத்திலும் ஒரு பெரிய ராமாயணக் கதை சொல்லும் ஓவியம் உண்டு. அது மரத்தால் சட்டம் கட்டப்பட்டது. அதிலும்  நடுவில் பட்டாபிஷேக காட்சி உண்டு. 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு கதை சொல்லப்பட்டிருக்கும். கன்னட குறிப்புகள் ஒவ்வொரு காட்சிக்கும் கீழ் இருக்கும். உருவங்களை வரையும் பாணியிலும் வண்ணத் தேர்விலும் இரு ஓவியங்களும் வெவ்வேறானவை என்றாலும் அடிப்படை அமைப்புகளில் இரண்டும் ஒத்துப் போகின்றன.

இந்த அனுமன் ஓவியத்தில் எரியும் கனல் போன்ற தோற்றத்தை உருவாக்க சிவப்பிற்குப் பதில் வெர்மிலியன் வண்ணத்தை பின்புலமாகப் பயன்படுத்தினேன். இது கிட்டத்தட்ட நமது செந்தூர வண்ணம் போலத்தான். அனுமனோடு தொடர்புபடுத்திச் சொல்லப்படும் வண்ணமும் கூட. அந்தக் காலத்தில் ஓவியர்களே வண்ணங்களை தயாரிப்பவர்களாக இருந்துள்ளார்கள். இப்போதெல்லாம் அப்படியல்ல. வண்ணத் தயாரிப்பு நிறுவனங்கள் முடிவு செய்யும் வண்ணங்களைத்தான் நாம் பயன்படுத்த முடியும். நமது மரபில் எவ்வாறெல்லாம் வண்ணங்களைத் தயாரித்தார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். நானே தயாரித்த வண்ணம் கொண்டு ஒரு படத்தை வரைந்து விட வேண்டும் என்பது எனது நீண்ட கால ஆசை.

இந்த வெர்மிலியன் வண்ணத்தில் கூட சுத்த வெர்மிலியன் வண்ணம் இன்று நமக்குக் கிடைப்பதில்லை. வெர்மிலியன் ஹ்யூ என்ற ஒரு வகை வண்ணம்தான் நமக்கு கிடைக்கின்றது. நச்சுத்தன்மை அதிகம் கொண்ட அதன் தயாரிப்பு முறையும் அதற்குக் காரணமாக இருக்கலாம்.  spike bucklow என்பவர் எழுதிய The Alchemy of paint என்ற நூலில் வெர்மிலியன் தயாரிப்பது பற்றிய ஒரு பழைய செய்முறை கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

“கந்தகத்தை உலர்ந்த கல்லினால் பொடித்துக் கொள்ள வேண்டும். அதனோடு இரண்டு பங்கு பாதரசத்தை கலக்கவும். இக்கலவையை கண்ணாடிக் குடுவையில் வைத்து புகை வெளிவராவண்ணம் களிமண்ணால் மொத்தமாக மூடி விடவும். இதனை நெருப்புக்கு அருகில் வைத்து ஓரளவு உலரவிட்டு பின் கொதிக்கும் உலைக்குள் புதைத்து வைக்க வேண்டும். கந்தகமும் பாதரசமும் வெப்பத்தால் வினையாற்றி ஒன்று சேரும் போது வெடிப்புச் சத்தத்தை கேட்கலாம். இச்சப்தம் நின்றவுடன் குடுவையை வெளியில் எடுத்து வண்ணப் படிகத்தை தனியாக எடுத்து விடலாம்”

மேற்கண்ட முறையில் வெளிப்படும் புகையானது மிக நச்சுத்தன்மையுடையது. இந்த முறையை ‘முரணானவைகளின் ஒத்திசைவு’ என்ற தத்துவத்தோடு ஒப்பிடுகிறார் இந்த நூலாசிரியர்.
வெம்மையும்(கந்தகம்), குழுமையும்(பாதரசம்) சரியான விகிதத்தில் கலக்கும் ஒருவகை படைப்புச் செயல்பாடு இந்த வெர்மிலியன் செய்முறை.

அறிவியல், கலை, புராணங்கள் போன்றவற்றின் அடிப்படையில் வண்ணங்களைப் புரிந்து  கொள்ளவேண்டும். அதுவும், நம் மரபில் வண்ணங்களின் இடம் மிக முக்கியமானது. குங்குமத்தையும் வெண்ணையையும் கலப்பதே எவ்வளவு சுவாரசியமான புராண பின்னணி உடையது!