இதயத்தை ஊடுருவிய வாள்

cross

அன்னைமா மரிதன் திருமடியின் மீதிருத்தி
ஆவலுடன்றாவியெடுத்தன்புடனே கூவிமிக
கதறியழுதவா மெய்க்காயமெலாமுத்தி செய்து
இதயங் கலங்கி மிகவேங்கியே யவிதமிக்க
கண்ணீரால் ரத்தக்கறை கழுவி மெய்துடைத்து
யெண்ணிமன துருகியே..
  -‘கல்லறை வாசகப்பா’வின் அப்போஸ்தலர் உலா என்ற பகுதியிலிருந்து.

காமநாயக்கன்பட்டி பரலோக மாதா கோவிலில் முற்காலத்தில் நிகழ்த்தப்பட்டு வந்த கூத்து நாடகத்தின் பெயர்தான் ‘கல்லறை வாசகப்பா’. வாசாப்பு நாடகம் என அழைக்கப்பட்ட இந்த கூத்து புனித வெள்ளிக்கு மறுநாள் நிகழ்த்தப்பட்டு வந்தது.
இந்த கூத்தின் பிரதி 2007-ல் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களால் பாளையங்கோட்டை நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையத்தின் உதவியுடன் பதிப்பிக்கப்பட்டு நூலாக வெளிவந்தது. இந்த நாடகத்தின் வரலாறு, வழக்கொழிந்ததற்கான காரணங்கள் போன்ற இன்னும் பல ஆய்வுக் குறிப்புகளுடன் வெளிவந்த சிறந்த நூல் அது.

இரை

perse

முறையாக சுடுமண் சிற்பக் கலையை கற்றுக் கொள்ளும் ஆர்வத்தில் அதற்கான ஆயத்த வகுப்புகளுக்குச் சென்று கொண்டிருக்கிறேன். பெங்களூரில் உள்ள ‘claystation’ என்ற நிறுவனம் மிகச் சிறப்பாக வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.

மேலுள்ள low-relief வகை சிற்பம் நான் சமீபத்தில் செய்தது. ‘பெர்ஸெபொலிஸ்’-ல் காணப்படும் பெர்ஸிய பாணி சிங்க வேட்டைச் சிற்பங்கள்தான் இதை நான் செய்வதற்கான உந்துதல். பெர்ஸெபொலிஸ் வேட்டைக் காட்சியில் வெளிப்படும் உருவங்களுக்கிடையேயான இணக்கத் தன்மை ஒட்டு மொத்தக் காட்சியை பிரமிப்பூட்டச் செய்வது. இரை மிருகத்தின் உடல் மொழி மிக முக்கியமானதாய் எனக்குப் பட்டது. வேட்டை என்ற நிகழ்வின் அதிகாரி வேட்டையாடும் மிருகம் மட்டுமல்ல, இலக்காகும் இரையும்தான். அதை எப்படி விளக்குவது எனத் தெரியவில்லை. மனுஷ்யபுத்திரனின் ‘அந்தரத்தில் ஒரு கணம்’ என்ற கவிதை மூலம் நான் சொல்ல வருவதை புரிந்து கொள்ளலாம்.

கற்றுக் கொள்ளும் தொடக்க நிலையில்  நான் இருப்பதால் அவ்வளவு நேர்த்தியாக என்னால் செய்யமுடியவில்லை. இன்னும் நிறைய செய்து கற்றுக் கொள்ள வேண்டும். தற்போது இச் சிற்பத்தை (சிற்பம் என்பது மிகப் பெரிய வார்த்தை. வேறு என்ன சொல் பயன்படுத்த எனத் தெரியவில்லை) உலர வைத்துள்ளேன். எரியூட்டிய பிறகு இதன் இறுதி வடிவத்தை இங்கு இணைக்கிறேன்.