கலைக்கு உண்மையான கலைஞனை மதிப்போம்

© Ranjit

© Ranjit

ஊரெல்லாம் சுத்தி பேரெடுத்த கூத்துக் கலைஞன் அவன்.

கூத்து ஆடுறதுல அவன அடிச்சுக்க ஆளில்ல.

அவன் கெட்ட காலம், அந்த ஊர்ல அண்ணைக்கு எக்குத்தப்பா மாட்டிக்கிட்டான்.

ஊரா அது!

அந்த ஊரு அவன் கூத்தப் பாக்க தயாராச்சு.

கூத்து ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே ஒருத்தன் சொன்னான்.

“இவன்லாம் என்னத்த கூத்தாடுவான்”

எதையும் கண்டுக்காம மொறயோட அவன் கூத்த ஆரம்பிச்சான்.

சாயங்காலம் ஆரம்பிச்ச கூத்து அது.

ராத்திரி ஆனது…

சுத்தி சுழண்டு கதைய நடிச்சுக் காம்பிச்சான்.
கால்வாசி ஊரு அருமை தெரியாம தூங்குச்சு.

நடு ராத்திரி ஆனது…

வேர்க்க விறுவிறுக்க கதைய நடிச்சான்.
அரைவாசி ஊரு பெருமை தெரியாம தூங்குச்சு.

சாமம் கடந்தது…

அலுப்பு காட்டிக்காம ஆடி வந்தான்.
முழு ஊரும் சத்தமில்லாமப் போச்சு

விடிஞ்சது.

தூங்குன ஊரு முழிச்சது.
அவன் ஆட்டம் மெல்ல மெல்ல முடிவுக்கு வந்தது.

மூச்சு வாங்க கூலிக்கு கை கெட்டி நின்னான் – ஊர் முன்னாடி

அவனவன் குறை சொன்னான்.

கூத்துல எங்க ஊர்ப் பெருமை இல்லன்னான் ஒருத்தன்.
எங்க குலப் பெருமை இல்லன்னான் ஒருத்தன்.
ஒன்னும் வெளங்கலன்னான் ஒருத்தன்.

‘எல்லாம் இருந்துச்சு. நீங்கதான் தூங்கிப் போனீங்க’ன்னு வாதாடிப் பாத்தான் நம்ம கூத்துக் கலைஞன்.

அவன ஊரே சேர்ந்து அடிச்சு வெரட்டீருச்சு. எங்கயும் இனி உன் கூத்து நடக்க விடமாட்டோம்னு வரிஞ்சு கட்டுனாங்க.

ஒரு செவிடன் ஓடி வந்தான். கூத்துக் கலைஞன பாத்து சொன்னான்:

“காது வெளங்காத எனக்கு உன் கூத்தும் வெளங்கல”
“நீ ஆடுன கூத்து நல்லதா கெட்டதான்னும் எனக்குத் தெரியாது”
“ஆனா.. சாயந்தரம் ஆரம்பிச்சு ஒரு வா தண்ணி கூட குடிக்காம வைராக்கியத்தோட அயத்துப் போகாம விடியக் காலம் வரைக்கு நீ ஆடீருக்க”
“உன்னோட அந்த வெறித்தனமான உழைப்ப பாத்து மலைச்சுப் போனேன். இந்தா வச்சுக்கோ”

முடிஞ்சு வச்சிருந்த கொஞ்சம் பணத்தையும், பானை அரிசியையும் கொடுத்தான் செவிடன்.

ஓர் அனுபவம்

© Ranjit

© Ranjit

பெங்களூர் imax-ல் life of Pi பார்த்து வந்து உடனே வரைந்த படமிது. ரொம்ப லேட்டாகத்தான் படத்தை பார்க்கிறேன்.

போன நவம்பரில்தான் imax பெங்களூருக்கு வந்தது. இந்திய அளவில் பெங்களூரோடு சேர்ந்து ஐந்து நகரங்களில் imax உள்ளது(இப்போதுவரையிலான நிலவரம்).

அந்த picture quality-யும்(horizontal-ஆக project செய்வார்கள்) சப்தமும் தரும் அனுபவம் மிக அலாதியானது.

இப்படிப்பட்ட திரையரங்க அனுபவத்தை DTH எப்படி முறியடிக்கும். இருப்பைக் குறித்த பயம்தான் அவர்களின் போராட்டத்திற்குக் காரணம்.

இந்தப் படம் பேசும் விஷயமும் கிட்டத்தட்ட அதுதான். இருத்தல் பற்றிய பயம், அதன் நோக்கம், அதற்கான பயணம். இந்தப் பயணம் கடலின் வழியானது மட்டுமல்ல – தத்துவங்கள் வழியாகவும் கூட.

life of Pi ஒரு visual treat-தான். சந்தேகமில்லை. ஆனால் இதே genre-ல் வந்த ‘cast away’ எனக்களித்த பாதிப்பு இதை விட பல மடங்கு என்றுதான் சொல்வேன். இது மிகச் சாதாரண ஒரு ரசிகனின் தனிப்பட்ட எண்ணம்தான். யாரும் இக்கருத்தை பொருட்படுத்த வேண்டாம்.

life of Pi ஒரு அனுபவம்தான்.

ஓராண்டு நிறைவு!

© Ranjit

© Ranjit

இந்த விதானம் வலைப்பக்கம் தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது.

எழுத்தை சாக்காகக் கொண்டு வரையவும், வரைவதைச் சாக்காகக் கொண்டு எழுதவும் வாய்ப்பளித்தது இத்தளம்.

பின்னூட்டம் மூலம் ஊக்கமளித்த நண்பர்களுக்கு நன்றி.

கடந்த ஆண்டில் எனது விதானத்தில் எனக்குப் பிடித்தவை:

ஓவியம்: புரிந்தவன் ஆட புவனங்கள் ஆடும்

பதிவு: அணு சக்தி பாதுகாப்பானது!

தலைப்பு: கரிசல் பனை

மேலுள்ள படம் microsoft paint-ல் வரைந்தது. அவசரத்தில் வேறு tool-ல் வரைய நேரமில்லை. பரவாயில்லை, ஆரம்ப காலத்தில் வரைவதற்கு paint-ஐ பயன்படுத்தியதெல்லாம் நினைவில் வந்து போகிறது.

வாடிவாசல்

© Ranjit

© Ranjit

© Ranjit

© Ranjit

© Ranjit

© Ranjit

சி.சு.செல்லப்பாவின் குறுநாவல் ‘வாடிவாசல்’. ஜல்லிக்கட்டுக் களத்தில் தொடங்கி அங்கேயே முடியும் கதை.

வழக்கமாக, சிலாகித்த நாவல்கள் பற்றி நிறைய பேசத் தோன்றும். ஆனால் இந்நாவல் என்னை வரையத் தூண்டியது. மேலுள்ள மூன்று ஓவியங்களும் அதன் விளைவு.

சம்பவங்களின் மிகச் சாதாரண விவரிப்புகள்தான் மொத்த நாவலுமே. ஆனால் அது வரைந்து காண்பிக்கும் சித்திரம் ரொம்ப நுட்பமானது. சுருக்கிச் சொன்னால், மனிதன்-மனிதன், மனிதன்-மிருகம் பற்றிய கதை இது. இது காண்பிக்கும் வீர உணர்ச்சி சாயம் பூசப்பட்ட மிகை உணர்ச்சி அல்ல. ரொம்ப இயல்பானது.

பிச்சி, மருதன் உதவியுடன் காரிக் காளையை அணையும் காட்சி விவரிப்பு ரொம்பச் சுவாரஸ்யமாக இருக்கும்.

இந்த வருடத்தில் வரைந்த முதல் ஓவியங்கள் இவை. பொங்கல் சமயத்தில் ஜல்லிக்கட்டை மற்றொரு பரிமாணத்தில் புரிந்து கொள்ள உதவிய நாவலிது. ஞாபகத்தில் நிற்கும் பொங்கல் திருநாள்.

அண்ணார்ந்து பார்த்தல்

நமது அன்றாடச் செயல்களில் நாம் மேல்நோக்கிப் பார்க்கும் தருணம் என்பது மிகக் குறைவு. நமது தலைக்கு மேல் உள்ள பெரும் உலகை அவ்வளவாக நாம் கவனிப்பதேயில்லை என்றே சொல்லலாம். நாம் பார்க்கும் உலகம் நம் காலடியில் ஆரம்பித்து கண் மட்டத்தில் நாம் காணும் எல்லையோடு முடிந்து விடுகிறது. நமது அத்தனை சிந்தனைகளும் இந்தச் சின்ன எல்லைக்குள்தான். கலைக்கான ஊற்றுக்கண் அத்தனையும் இந்த எல்லையைத் தாண்டிதான் கொட்டிக் கிடக்கிறதென எண்ணிக் கொள்வதுண்டு.

சுற்றியுள்ளவற்றைத் திரும்பத் திரும்ப புகைப்படம் எடுத்துச் சலித்த போது மேல் நோக்கிய கோணத்தில் நான் எடுத்த சில புகைப்படங்கள் கீழே.

ஒவ்வொரு படத்திற்கும் கீழே உள்ள தமிழ் வரிகள் பாரதியினுடையது.

முதல் படம், ஆறு மாடிக் கட்டிடத்தின் தரைத் தளத்திலிருந்து எடுத்தது. அந்தச் சுருள்கள் மாடிப் படிகள்.

இரண்டாவது படம், கப்பன் பார்க்கின் ஒரு மரத்தடியிலிருந்து எடுத்தது.

மூன்றாவது, கழுகுமலை வெட்டுவான் கோயிலின் கடவு போன்ற பாதையில் நின்று மேல்நோக்கி எடுத்தது.

நான்காவது, ஒரு சித்திரை பெளர்ணமி நாளன்று எடுத்தது.

 

படம் 1
camera: Sony Ericsson mobile camera
“வடிவத்தைக் காத்தால், சக்தியைக் காக்கலாம்
————————————————————————————
படம் 2
camera: nikon D60, FL: 26mm
“ஞாயிறே,இருளை என்ன செய்துவிட்டாய்? ஓட்டினாயா?கொன்றாயா? விழுங்கிவிட்டாயா?
ஞாயிறே! நின்னிடத்து ஒளி எங்ஙனம் நிற்கின்றது? நீ அதனை உமிழ்கின்றாயா? அது நின்னைத் தின்னுகிறதா?அன்றி, ஒளி தவிர நீ வேறோன்றுமில்லையா?”
————————————————————————————
படம் 3
camera: nikon D60, FL: 90mm
“உங்களையெல்லாம் படைத்தவள் வித்தைக்காரி.அவள் மோஹினி.மாயக்காரி.அவளைத் தொழுகின்றோம்”
————————————————————————————
படம் 4
camera: nikon D60, FL: 300mm
“பொங்கிவரும் பெருநிலவு”
————————————————————————————