பரவும் பெரு நோய்!

© Ranjit

அணு விபத்தில் ஏற்படும் அதிக அளவு கதிரியக்கம் மூளையின் செல்களை அழிக்கக் கூடியது.

ஆனால் அணு விபத்து நடக்காமலேயே இந்த மூளை பாதிப்பு இவருக்கு வந்து விட்டது.

நிபுணர்கள், ‘அணு சக்தி ஆதரவு’ என இந்த நோயை அழைக்கிறார்கள். மிகக் கொடியதாம்.

மூளை ஏற்கனவே கொஞ்சம் மந்தமாக உள்ளவர்களைத்தான் இந்த நோய் விரைவில் தாக்குகிறதாம். இருக்கும் கொஞ்ச நஞ்ச மூளையையும் கரைத்து விடுமாம்.

இந்த நோய்க்கு முக்கியமாக இலக்காகும் நபர்கள் அரசியல்வாதிகள்தான். கட்சி பேதமெல்லாம் கிடையாதாம்.

சில விஞ்ஞானிகளையும் இது பாதிப்பதோடு அவர்களின் உதவியாளர்கள், சமையல்காரர்கள் என கூண்டோடு பாதிக்கிறதாம்.

எனக்கு அருகில் பிதற்றிக் கொண்டிருப்பவர் என் நண்பர்தான்.

நேற்று கூட இப்படி ஒரு விஷயம் சொன்னார்:

“யார் சொன்னது அணுக் கதிர்வீச்சு சந்ததிகளைப் பாதிக்குமென்று? பச்சைப் பொய்.

அணுக் கதிர்வீச்சு மலட்டுத்தன்மையை உருவாக்க வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால் ஒருவனுக்கு சந்ததியே உருவாகாது.

சந்ததியே இருக்காது எனும் போது, இல்லாத சந்ததிக்கு நோய் வரும் என்பது மிகப் பெரிய பொய்தானே?”

நோயின் முற்றிய நிலையில் உள்ளார். பாவம்! மண்டை காலியாகி உள்ளே ‘எக்கோ’ அடிக்க ஆரம்பித்து விட்டது.

எல்லா தொற்று நோய்க்கும் சொல்லப்படும் விஷயத்தைதான் இதற்கும் சொல்கிறேன். இந்த நோய் வந்தவர்களிடமிருந்து கொஞ்சம் தள்ளியே இருங்கள்!

முட்டாள் மக்களே!

© Ranjit

“முட்டாள் மக்களே! அட முட்டாப் பய மக்களே!

ஒழுங்காக அணு உலையை ஆதரியுங்கள்.

மின்சாரத்தின் தேவை உங்களுக்குப் புரியவில்லை.

இந்த அறிவாளி சொல்கிறேன் கேளுங்கள்.

அணு விபத்தை நினைத்து அஞ்சும் மூடர்களே, அப்படி ஒரு விபத்து நடந்தால் எத்தனை ஆயிரம் பேர் மருத்துவமனைக்கு செல்ல நேரிடும்.

மருத்துவமனையில் தடையின்றி சிகிச்சை நடக்க மின்சாரம் அவசியமல்லவா!

கொத்துக் கொத்தாக நீங்கள் செத்தும் போகலாம்.

உங்கள் பிணத்தை மின்சாரச் சுடுகாட்டில் எரிக்க வேண்டியிருந்தால், தேவைப்படுவது என்ன? மின்சாரம் மக்களே மின்சாரம்!

மின்சாரத்தின் அவசியம் புரிந்ததல்லவா? ஒழுங்காக அணு உலையை ஆதரியுங்கள்.

இப்போதாவது எங்களை அதி புத்திசாலிகள் என ஒத்துக் கொள்ளுங்கள்! முட்டாள் மக்களே! அட முட்டாப் பய மக்களே!”

அணு சக்தி பாதுகாப்பானது!

© Ranjit

இந்த ராட்சஷன் கொடூரமானவன். மரணமில்லாதவன்.

பயம் வேண்டாம். இவன் காலிலே பூட்டு இருக்கு. இவன் பாதுகாப்பானவன்.

இவன் உங்கள தொட்டால் உங்க மூச்சு நின்னு போகும்.

பயம் வேண்டாம். இவன் காலிலே பூட்டு இருக்கு. இவன் பாதுகாப்பானவன்.

இவன விட்டா ஊரையே முழுங்கிடுவான்.

பயம் வேண்டாம். இவன் காலிலே பூட்டு இருக்கு. இவன் பாதுகாப்பானவன்.

இவன் உங்க நிலத்துல கால் வச்சா நிலம் விஷமாகும், அதன் விளைச்சல் விஷமாகும்.

இவன் உங்க ஏரியில் கால் வச்சா ஏரி விஷமாகும். அதன் மீன்கள் விஷமாகும்.

பயம் வேண்டாம். பயமே வேண்டாம். இவன் காலிலே பூட்டு இருக்கு. இவன் பாதுகாப்பானவன்.

இந்தப் பூட்டும் பாதுகாப்பானது.

உடைக்க முடியா பூட்டு.

பீரங்கியால் பிளக்க முடியா பூட்டு.

கள்ளச் சாவி போட முடியா பூட்டு.

இந்த பூட்டின் சாவியை யாரும் திருடவும் முடியாது.

திருடவே முடியாது.

அது பத்திரமா இந்த ராட்சஷன் கையில்தான் இருக்கு.

இவன் பாதுகாப்பானவன்! ரொம்பப் பாதுகாப்பானவன்!

என்ன கேட்டீங்க?

© Ranjit

“என்ன கேட்டீங்க? கொஞ்சம் சத்தமா கேளுங்க. எனக்கு காது கொஞ்சம் மந்தம். ஒரு கண்ணுதான் தெரியும். கொஞ்சம் இந்த பக்கம் வந்து கேளுங்க. உங்கள பாத்துக்கிட்டே பதில் சொல்றேன்”

“ஓ.. இந்த ஃபோட்டோவுல இருக்குறது யாருன்னு கேட்கிறீங்களா?”

“எங்க அப்பாதான் இவரு. இப்ப உயிரோட இல்ல”

“என்ன கேட்டீங்க? அவருக்கும் எனக்கும் சாயல் ஒத்து வரலன்னு கேட்கிறீங்களா?”

“சத்தியமா இது என் அப்பாதான். நம்புங்க ப்ளீஸ். இவருக்குதான் நான் பிறந்தேன்”

“என்ன கேட்டீங்க? எங்க அப்பாவ பத்தியா?”

“அவரு ரொம்பப் பெரிய ஆளுங்க. அவரு காலத்துல – அணு உலைக்கும், அணு சக்திக்கும் ஆதரவு கொடுத்து பிரச்சாரம் செஞ்சவரு. அதுக்காக கவர்மெண்டுக்கிட்ட அவார்டுல்லாம் வாங்கிருக்காரு”

“என்ன கேட்டீங்க? என்னோட குடும்பத்த பத்தியா?”

“பொண்டாட்டி செத்துப் போச்சுங்க. எதுக்குன்னு எல்லாம் தெரியாது. போய்ட்டா அவ்ளோதான்”

“என்ன கேட்டீங்க? புள்ள குட்டி பத்தியா?”

“ஒரு மகன் இருக்கான். அப்படியே என் சாயல்

அங்கிட்டும்.. இங்கிட்டும்

© Ranjit

இந்தப்பக்கம் சேரிப்பகுதி, அந்தப்பக்கம் அப்பார்ட்மெண்ட்கள்(காசுள்ளவர்களின் சேரி) இவை இரண்டையும் பிரிக்கும் மாபெரும் சாக்கடை.
பெங்களூரில் நான் வசிக்கும் வாடகை வீட்டின் மாடியிலிருந்து பார்த்து வரைந்த படமிது.

தோட்டங்களின் நகரமான பெங்களூர் இப்போது கட்டடங்களின் நகரமாக மாறி அழிந்து கொண்டிருக்கிறது. இதற்கு மற்றவர்களைக் குறை சொல்லப்போவதில்லை. என்னைப் போன்ற ‘பிழைக்க’ வந்தவர்கள்தான் இதற்கு முக்கிய காரணம். எனக்கும் இந்த அழிவில் பெரும் பங்கு உண்டு.

எங்கள் வீட்டு மாடியிலிருந்து பார்த்தால் ரெண்டு பக்கமும் நடக்கும் கூத்தை பார்த்து ரசிக்கலாம்(என்ன ஒரு அநாகரீகம் 🙂 )

இந்தப்பக்கம் திருவிழா, பண்டிகை, சாவு, கைது, சண்டை என வாழ்வின் அத்தனை சாத்தியமான சம்பவங்களையும் அப்பட்டமாக பார்க்கமுடியும்.
அந்தப்பக்கம் இதையெல்லாம் அப்பட்டமாக பார்க்கமுடியாது. எல்லாமே கமுக்கமாக இருக்கும். தீபாவளி மட்டுமே விதிவிலக்கு. அன்று அப்பார்ட்மெண்ட் மாடி முழுதும் நெருப்பால் ஜொலிக்கும். இந்தப்பக்கம் அன்று ரொம்ப ‘டல்’ அடிக்கும்.

இரவின் ஜன்னல் வெளிச்சங்கள் மூலம்தான் அந்தப்பக்கம் ஆட்கள் வசிக்கிறார்கள் என்பதையே தெரிந்து கொள்ள முடியும். இந்தப்பக்கம் மனிதர்கள் ஒவ்வொரு கணமும் தங்கள் இருப்பைத் தெரிவித்தபடியே இருப்பார்கள்.

நடுவில் உள்ள சாக்கடையாற்றில் ஒரு ஆள் நடந்து கொண்டிருந்தார். தோளில் சாக்குப்பையுடன் கையில் கம்பை வைத்து சாக்கடைக்குள் ஊன்றியபடி நடந்து கொண்டிருந்தார்.

காலின் மூட்டு அளவுக்கு கருப்புத் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. எது எதையோ எடுத்து பையில் போட்டுக்கொண்டு நடந்து கொண்டிருந்தார்.

ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நம்மாழ்வார் கூறிய ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது.
‘மேல்மட்டத்தின் கழிவு கீழ் மட்டத்தின் உணவு’
அவர் சொன்னது விவசாய ‘context’-ல். மனுஷனுக்கும் இது பொருந்தத்தான் செய்கிறது.

திடீரென நின்ற அந்த ஆள் ஒரு காலை சாக்கடைக்குள்ளிருந்து வெளியே தூக்கி பாதத்தைப் பார்த்தார். ஏதோ காலில் குத்தியிருக்கும் என நினைக்கிறேன். பாதத்தில் ரத்தம் வடிந்து கொண்டிருந்தது.
ஒற்றைக் காலில் நின்றபடியே அதை லுங்கியால் துடைத்துவிட்டு பின் மீண்டும் காலை சாக்கடையினுள் நுழைத்து நடக்க ஆரம்பித்தார்.

மரணம்தான் உலகில் கொடியது என யார் சொன்னது? கண்டிப்பாக இல்லை.