சுரங்க ரயில்

© Ranjit

 

கனவுகளில் துரத்தும் பாம்புகள் போல முதலில் மிரட்சி கொள்ளச் செய்த இந்த ரயில்கள், நாட்கள் செல்லச் செல்ல அந்நியோன்யமாய்ப் போனது.
லண்டனில் 19 ஆம் நூற்றாண்டிலிருந்து இருந்து வரும் சுரங்க ரயில் சேவை இது. ட்ரெயின் என்ற சொல்லை அவர்கள் உபயோகிப்பதில்லை. ட்யூப் என்றும் ட்யூப் ஸ்டேஷன் என்றும்தான் சொல்வார்கள்.

நரம்புகளில் பாயும் ரத்தம் போல, நகரின் பூமிக்கடியிலும், மேலேயும் விடாமல் ஓடிக் கொண்டு, நகரை உயிருடன் வைத்திருக்கும் ரயில்கள் இவை. லண்டனின் மிகப் பிரதானமான விஷயமாய் விளங்குவது ‘London Underground’ எனப்படும் இந்தச் சேவைதான்.

நான் வசித்த வீட்டிற்கு அருகிலுள்ள ஸ்டேஷனின்(chiswick park station) ஒரு சின்ன ஸ்கெட்ச்தான் மேலுள்ளது.

‘சார்லஸ் ஹோல்டன்’ வடிவமைத்த பல சுரங்க ரயில் ஸ்டேஷன்களில் இதுவும் முக்கியமான
ஒன்று. இந்தப் படத்தில் அதன் முழு கட்டிடத்தையும் நான் காட்டவில்லை. படத்தில் உள்ளது அந்த கட்டிடத்தில் உள்ள கோபுரம் போன்ற ஒரு அமைப்பு மட்டும்தான். இங்கிலாந்து பாணி செங்கலடுக்கு கட்டிடம்தான். பெரும் கூட்டம் கூடும் இடத்தை எப்படி வடிவமைத்தால் பயன்பாட்டிற்கு எளிதாய் இருக்கும் என்ற கோணத்தில் கட்டப்பட்ட கட்டிடம்.

‘சார்லஸ் ஹோல்டன்’ ஹிட்லருக்கு மிகப் பிடித்த கட்டிடக்கலைஞர் என்று ஒரு வதந்தி உண்டாம். ஜெர்மனியின் ஊடுருவலின் போது, சார்லஸ் ஹோல்டன் வடிவமைத்த செனட் ஹவுசில்தான் தன் தலைமையிடத்தை நிறுவவேண்டும் என்ற ஆசை ஹிட்லருக்கு இருந்ததாம். செனட் ஹவுஸ் இன்று
யுனிவர்சிட்டி ஆஃப் லண்டனுக்கு சொந்தமான கட்டிடம்.

ஊர் சுற்ற கிளம்பும் போது பெரும்பாலும் நான் ஆரம்பிக்கும் இடம் இந்த ஸ்டேஷன்தான். இதை விட்டால், சில நேரங்களில் ‘டர்னம் கிரீன்’ என்ற ஸ்டேஷனிலும் என் பயணத்தை தொடங்குவதுண்டு,
அதற்கு ஒரு காரணம் உண்டு. காலை உணவை முடிக்க கொஞ்ச தூரம் சிஸிக் ஸ்டேஷனிலிருந்து நடந்து செல்ல வேண்டும். ‘ப்ரெட் ஷாப்’ என்றொரு கடை. ப்ரெட் வகையில் அத்தனையும் இங்கு கிடைக்கும்.
முழங்கை அளவு கோதுமை ப்ரெட் ஒன்றை தேர்ந்தெடுத்து கடைக்காரரிடம் கொடுத்தால் நமக்குப் பிடித்த அசைவ வகைகளை அந்த ப்ரெட்டிற்குள் திணித்து சூடு செய்து தருவார். பெரும்பாலும் ‘க்ரே ஃபிஷ் டெயில்’ அல்லது ‘மீட் பால்ஸ்'(மாட்டிறைச்சி) இவைதான் என்னுடைய தேர்வாக இருக்கும். அந்த சுவையை இப்போது நினைத்தாலும் இன்னொரு ட்ரிப் அடித்து விட்டு வர ஆசை வந்து விடுகிறது.

என் பயண அனுபவத்தில் உணவைப் பற்றி எழுதவே கூடாது என்றுதான் நினைத்தேன். ஆனால் முடியவில்லை. ஒரு இடத்தைப் பற்றி புரிந்து கொள்ள அங்குள்ள உணவு முறைகளைப் புரிந்து கொள்வதிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும் என நினைக்கிறேன். உணவு முறையை எப்படிப் புரிந்து கொள்வது? வேறெப்படி? சாப்பிட்டுத்தான்.

மேற்சொன்ன கடையில் உணவை வாங்கியதும், சில நேரங்களில் அப்படியே திரும்பி சிஸிக் ஸ்டேஷனுக்கு வந்து, ரயிலில் போகும் போதே சாப்பிடுவதுண்டு. அல்லது, ‘டர்னம் கிரீன்’ ஸ்டேஷனுக்கு பக்கத்தில் உள்ள பார்க் வரை சென்று, அந்த பார்க்கில் சாப்பிட்டுவிட்டு, அப்படியே டர்னம் கிரீனிலிருந்து ரயிலேறுவதும் உண்டு.

அந்த ‘டர்னம் கிரீன்’ பார்க்கில் நடப்பதாக ஒரு வித்தியாசமான உரையாடல் ‘The Man Who Was Thursday’ என்ற நாவலில் வரும். ஜி.கே.ஜெஸ்டெடன் எழுதிய நாவல்.
1908-ல் வெளியான நாவல். அந்த பார்க்கின் பெயர் ‘ஸஃப்ரான் பார்க்’ என அந்த நாவலில் வரும்.

அந்த உரையாடல் ரொம்பச் சுவாரசியமானது. கலையை வெவ்வேறு கோணத்தில் பார்க்கும் இருவருக்கு இடையிலான உரையாடல் அது.

அந்த உரையாடலில் லண்டனின் இந்த ரயில் பயணத்தைப் பற்றி வரும்.

முன் கணிப்பும், ஒழுங்கும் சுவாரசியமில்லாதது. லண்டன் சுரங்க ரயிலில் வேலை செய்பவர்களும், அதன் பயணிகளும் ஏன் ஒரு சோர்வு மனநிலையில் இருக்கிறார்கள்? அந்த ரயில் எங்கு போய்ச் சேரும் என்பது
அவர்களுக்கு தெரியும். அடுத்த நிறுத்தம் எது என்பதும் தெரியும். மிகக் கச்சிதமான ஒழுங்குடன் இந்த சுரங்க ரயில்களின் அத்தனை நடவடிக்கைகளும் இருக்கும். இந்த ஒழுங்கு சலிப்பை உண்டுபண்ணக் கூடியது. எதிர்பார்ப்பை தூண்டும் எதுவும் இதில் இல்லை. இப்படி ஒரு தரப்பை கிரகோரி என்ற பாத்திரம் சொல்வதாக வரும்.

இதற்கு மாறான தரப்பு சைம் என்ற பாத்திரத்தினுடையது. இந்த ரயில் பயணத்தை மனித சாதனையாக பார்க்கும் தரப்பு அது. நினைத்த இடத்திற்கு செலுத்த வைக்கும் மனிதனின் எந்திரத்தின் மீதான கட்டுப்பாட்டை
பெரும் சாதனையாகக் கூறுவதாய் வரும்.

இரு வெவ்வேறு தரப்புகளை உருவாக்காத சிறந்த கண்டுபிடிப்புகளும், கலைப் படைப்புகளும் உலகத்தில் இருக்கிறதா என்ன?

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s