ஐ விவி

© Ranjit

 

ஐ விவி (Ai WeiWei) என்பது இவர் பெயர்.  harmony tool கொண்டு வரைந்தது இப்படம்.

வழக்கம் போல நமக்கு விநோதமாய்த் தெரியும் சீனப் பெயர்தான்.

அதிகாரத்திற்கு எதிராய் தன் கலையை ஆயுதமாய் ஏந்திப் போராடும் கலைஞன்.

‘பறவைக் கூடு’ என்ற அந்த புகழ் பெற்ற ஒலிம்பிக் மைதானத்தை நினைவிருக்கலாம். போன பெய்ஜிங்க் ஒலிம்பிக்கின் போது அந்த மைதானத்தை வடிவமைத்தவர் இவர்தான்.

ஓவியர், சிற்பி, கட்டிடக் கலை நிபுணர், புகைப்படக் கலைஞர், கவிஞர், இணையப் பதிவுலகில் தீவிரமாக இயங்கியவர் என இவருக்கு பல முகங்கள் உண்டு. ‘பதிவுலகில் தீவிரமாக இயங்கியவர்’ என இறந்த காலத்தில் குறிப்பிட காரணம் இருக்கிறது. இவரது வலைத்தளத்தை 2009-ல் சீன அரசாங்கம் தடை செய்தது.

தொடர்ந்து சீனக் கம்யூனிச அரசாங்கத்தை எதிர்த்து தனக்கே உரிய பாணியில் தன் கலையை வைத்தே போராடி சீன அரசால் கைது செய்யப்பட்டவர். எனது லண்டன் வாசம் துவங்கிய போது, பிரிட்டன் முழுவதிலும் அவரை விடுவிக்கக் கோரி பெரும் கோஷங்கள் முழங்கிய வண்ணம் இருந்தன. டேட் நவீனக் கலைக் கூடச் சுவர்களில் ‘Release Ai WeiWei’ எனப் பெரிதாய் எழுதியிருந்தது. ‘சீனத்தில் உள்ள ஒரு கலைஞனுக்காக ஏன் இங்கிலாந்தினர் குரலெழுப்ப வேண்டும்’ என நினைத்தேன். லண்டன் ஊடகங்கள் அவ்வப்போது அவரைப் பற்றிய கட்டுரைகளையும், செய்தித் தொகுப்புகளையும் வெளியிட்டுக் கொண்டிருந்ததன. இன்னும் கொஞ்சம் அவரைப் பற்றி அறிய எண்ணி தேட ஆரம்பித்தேன்.

foyles புத்தகக் கடையில் அவரின் நேர்காணல் புத்தகமொன்றை(Ai WeiWei speaks:penguin publications) வாங்கினேன். யாரையும் அவரின் உரையாடல்கள் வழியே அறிந்து கொள்ள முடியும். அப்படித்தான் அந்த நேர்காணல்கள் மூலம் அவரை அறிந்து கொண்டேன்.

‘சுதந்திரம்’ என்ற ஒற்றை மந்திரம்தான் அவரது கலைகளின் அடிப்படை. ஒலிம்பிக் மைதானத்தை வடிவமைக்கும் வரை கூட அவருக்கும், அரசாங்கத்துக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. அதன் பின் அவர் ஒலிம்பிக்கை புறக்கணித்தார். ஒலிம்பிக்கை காரணம் காட்டி நிகழ்ந்த சீன அரசாங்கத்தின் பல நடவடிக்கைகள் அவருக்குப் பிடிக்கவில்லை. பழைமையான சீன வீடுகளின் தொன்மையை கெடுக்கும் வகையில் அவற்றிற்கு பெயின்ட் அடிப்பதில் தொடங்கி பல அத்துமீறல்கள். அவரது வீடும் இப்படி சீர்குலைக்கப்பட்டது. சிறு வயது முதலே கம்யூனிச அரசாங்கம் மீதான வெறுப்பு அவருக்கு இருந்துள்ளது. அவரது தந்தை புகழ்பெற்ற சீனக் கவிஞர். அவரும் அரசாங்க ஒடுக்கு முறைகளுக்கு ஆளானவர்.

ஐவிவியின் வலைத்தளம் ரொம்பப் புகழ் பெற்றது. அதன்வழியே வந்த அவரது எழுத்துக்கள், புகைப்படங்கள் சீன அரசாங்கத்தை எரிச்சலூட்டியது. 2009-ல் தடையும் செய்தது. அந்த இணைய எழுத்துக்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இப்போது புத்தகமாய்க் கிடைக்கின்றது.

அவரைக் கண்காணிக்க அவரது வீட்டைச் சுற்றி கேமராக்கள் பொருத்தப்பட்டன. அதையும் கருவாக வைத்து ‘மார்பிள்’ கல்லில் அந்த சிசிடிவி கேமரா போன்றே பல சிற்பங்கள் செய்தார்.

அவரது படைப்புகள் பற்றி புத்தகங்கள் வழியாக அறிந்த எனக்கு, அவரது இரண்டு installation- கள் லண்டனில் காட்சிக்கு வைக்கப்படுவதை அறிந்து பயங்கர சந்தோஷம். முதல் கண்காட்சியை பல காரணங்களால் தவற விட்டேன். ‘sunflower seeds’ என்பதுதான் அந்த installation-ன் பெயர். கிட்டத்தட்ட 1600 கலைஞர்களை வைத்து அவர் உருவாக்கிய 100 மில்லியன் சூரிய காந்தி விதைகள்தான் அந்தப் படைப்பு. அத்தனை விதைச் சிற்பமும் ஒரு பெரிய கூடத்தில் கொட்டப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. அந்தப் படைப்பு மற்றவற்றைப் போலல்ல. அதன் மீது நடக்க முடியும் அதை எடுத்து விளையாடலாம். பார்வையாளனுக்கு முழுச் சுதந்திரம் கொடுக்கும் படைப்பது. மறு நாள் ‘டேட்’ கூடத்திற்கு போகும் போது அதை எடுத்து ஒதுங்க வைத்துக் கொண்டிருந்தார்கள். அடுத்த கண்காட்சியை எப்படியும் தவற விடக் கூடாதென நினைத்துக் கொண்டேன்.

அடுத்த படைப்பு ‘zodiac heads’ என்பது. சீனப் பாரம்பரியத்தில் ஜாதக ராசிகள் பன்னிரண்டிற்கு குறியீடாக விளங்கும் பன்னிரண்டு விலங்கின் தலைகளும் சிற்பமாகச் செய்யப்பட்டு வட்டமாக ஒழுங்குபடுத்தப்பட்ட installation இது.

‘சோமர்செட் ஹவுஸில்’ இந்த  ‘zodiac heads’ கண்காட்சியைப் பார்த்தேன். ஒவ்வொரு விலங்குச் சிற்பமும் அவ்வளவு நேர்த்தி. இந்தப் படைப்பால் உந்தப்பட்டுதான் நான் முதன்முதலாக ‘குரங்கு’ சிலையை செய்தேன். சீனக் கலைஞர்களை இணைத்து அவர்களை எழுதக் கட்டாயப் படுத்தி அவற்றை புத்தகமாக கொண்டு வந்தவர் ஐ விவி.

பல கலைஞர்களுக்கு உந்துதலாக இருந்து கொண்டு இன்றும் அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு நடுவில் வாழ்ந்து வருகிறார் ஐவிவி.

ஐ விவி பற்றி ஒரு ஆவணப் படம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s