‘பொருள்’ உள்ள வாழ்க்கை

© Ranjit

 

அவை நம்மை சுற்றி எப்போதும் இருக்கின்றன. நம் நிழல் போல. அவை இருப்பதை நாம் அறிவதேயில்லை.
நாம் ஏதோ எண்ணங்களில், நிறைய வேலைகளில் எப்போதும் மூழ்கியபடி அவற்றின் இருப்பை கவனிப்பதேயில்லை.

பொருட்களின் கூட்டத்திற்கு நடுவில்தான் வாழ்க்கை ஒவ்வொரு கணமும் நகர்கின்றது,
உங்களை சுற்றி உள்ளவற்றில் ஏதாவது ஒரு பொருளை எடுத்துக்கொள்ளுங்கள். சில கேள்விகளை உள்ளுக்குள் கேட்டுப்பருங்கள்.

அது எப்படி நம்மை வந்தடைந்தது?

விவரம் தெரிவதற்கு முன்பிருந்தே அந்தப் பொருள் நம்மிடம் இருக்கிறதா? அல்லது இடையில் நம்மோடு சேர்ந்து கொண்டதா?

அது தொடர்ந்து நம்மிடம் ஏன் இருக்கின்றது? பயன் கருதியா?

பயனற்றது என்றால் அதை ஏன் நாம் தூக்கி எறியவில்லை?

90% பொருட்களின் விவரங்கள் நமக்கு தெரிவதேயில்லை. அவை நம்மோடு இருக்கின்றன. அவ்வளவுதான்.

நம்மை சுற்றி நாம் வைத்துக் கொள்ளும் பொருட்கள், நம் சுயத்தின் நீட்சிதான். நிச்சயமாக அந்தப் பொருட்கள் நம்மைப் பற்றி ஏதாவது சொல்லிக் கொண்டேதான் இருக்கின்றன.

மெளனமாக நம்மோடு இருந்து நமக்கு பயன்பட்டு, தேய்ந்து, உருக்குலைந்து ஒரு நாள் நம்மை விட்டு நமக்கே தெரியாமல் மறைந்தும் போகிறது.

எதற்கு இப்படிப்பட்ட எண்ணங்கள்? இப்படி ஒரு ஓவியம்?

installation என்ற ஒரு கலை வடிவம் பற்றி பேசத்தான்.

இது மென்பொருள் துறையிலும், பொறியியலிலும் பயன்படுத்தப்படும் சொல் கிடையாது. நுண்கலையில் பயன்படுத்தப்படும் சொல். தமிழில் இதற்கிணையான கலைச்சொல் தெரியவில்லை. சிற்பத்தையோ அல்லது ஏதொ ஒரு பொருளையோ/பொருட்களையோ குறிப்பிட்ட இடத்திற்குள் ஒழுங்குபடுத்தி அல்லது சிதைத்து அடுக்குவது. இது சும்மா என்னால் முடிந்த அளவிலான ஒரு குட்டி விளக்கம்தான். installation என்பதை அதைப் பார்க்காமல் விளங்கிக் கொள்ளவே முடியாது. அதுவரை installations பற்றி புத்தகங்களிலும், இணையத்திலும் மட்டுமே படித்த/பார்த்த அனுபவம் இருந்தது. லண்டன் டேட் நவீன கலைக்கூடத்தில்தான் முதல்முறையாக பல installations-களை நேரில் பார்க்க வாய்ப்பு அமைந்தது.

அங்கு பார்த்தவற்றை இரண்டு வகையாகச் சொல்லலாம்:
1. முழுதும் கற்பனையிலமைந்த வடிவங்களின் வகை.
அழகியல் தன்மையை பிரதானமாய் கொண்டமையும் வடிவங்களின் தொகுப்பாக இவை இருக்கும். அதை படைத்தவனின் எல்லையில்லா கற்பனை மனது நமக்கு பெரு வியப்பைத் தரும். அர்த்தங்களற்ற வடிவ நேர்த்தி கிரங்கடிக்கும். சில உதாரணங்கள் இங்கே.
2. நிஜ வாழ்க்கையில் நாம் புழங்கும் வடிவங்களை மற்றொரு பரிமாணத்தில் வழங்கும் வகை
இந்த ரெண்டாம் வகை நேரடியாக நம் வாழ்க்கை பற்றி ரொம்ப நாசூக்காக நம்மோடு உரையாடும். சில சமயத்தில், இவையெல்லாம் கலைதானா எனக் கூட சந்தேகிக்க வைக்கும். அருமையான கலைவடிவம் இது. டேட் நவீன கலைக்கூடத்தில் பார்த்த இந்த வகையிலான சில படைப்புகள் மறக்க முடியாதவை.

சுருள் சுருளாக ஆலவிழுது போல மேலிருந்து விழும் அலுமினியச் சுருள்கள், சுவரோடு அம்பு குத்திய நிலையில் இறந்து போன காக்கைகள், காய்ந்த மரம் போலவே மரத்தில் செதுக்கப்பட்ட கிளை பரப்பி நிற்பதான சிற்பம் என சொல்லிக் கொண்டே போகலாம்.

எனக்கு அங்கு குறிப்பாக மிகப் பிடித்தது, DO HO SUH என்ற கொரியக் கலைஞரின் ‘staircase III’ என்ற அந்தப் படைப்புதான். ஒரு வீட்டின் மேற்கூரையையும் அதற்குச் செல்லும் படிகளையும் முழுக்க முழுக்க பாலியெஸ்டர் துணியால் வடிவமைத்திருப்பார். மேற்கூரையிலிருந்து படிகள் தொங்கிக் கொண்டிருப்பது போலத் தோற்றம் தரும். மரத்தில் செய்யப்பட்டால் எவ்வளவு நேர்த்தியாக இருக்குமோ அவ்வளவு நேர்த்தி. கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் அந்த அறைக்குள் நின்று வெறுமனே அதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். என்னைச் சுற்றியுள்ள பொருட்களின் மீது பேரன்பை உருவாக்கியது இந்த அனுபவம்.

இன்னும் அது போன்ற நிறைய படைப்புகளை அங்கு பார்க்க முடிந்தது. பொருட்களின் வடிவமைப்பில் எத்தனை ஜாலங்கள். அன்றிலிருந்து என் அறை, அலுவலக மேஜை, தெரு, ஊர் என எங்கும் இரைந்து கிடக்கும் பொருட்களின் இருப்பு ஒரு வகை மன நிறைவைக் கொடுத்தது.

இந்த உலகத்தில் நாம் தனித்து எப்போதும் விடப்படுவதில்லை என்ற உணர்வைத் தந்தது.

வீடு கொள்ளுமா எனத் தெரியாமலேயே ஏன் பொருட்களை அடுக்கிக் கொண்டே போகிறோம்? அந்தப் பொருட்களின் வழியாக எப்படியாவது நம்மை கண்டுகொள்ள முடியாதா என்ற ஏக்கம்தான் போல.

இதைப் படித்து முடித்ததும் ஒரு கணம் உங்களைச் சுற்றி கவனித்துப் பாருங்கள். இதுவரை கவனிக்காத எவ்வளவு விஷயங்கள் நமைச் சுற்றி என வியப்பீர்கள். எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் மிக அமைதியாக உங்களை அந்தப் பொருட்கள் பார்த்துக் கொண்டிருக்கும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s