ஓவியம் கற்றுக்கொள்வது எப்படி?

© Ranjit

என் மேற்கு வங்க நண்பர் ஒருவருக்கு நான் வரைந்து கொடுத்த குதிரை படம்.

ஒரு குழுவோ, தனி மனிதனோ அவர்களுக்கு பிடித்த ஒரு விலங்கோடு அவர்களை அடையாளப்படுத்திக் கொள்வதுண்டு. அதை ‘totem’ என்று சொல்வார்கள்
அப்படி தனக்கும் தன் குடும்பத்திற்கும் ராசியான விலங்கு என குதிரையைச் சொன்னார் அந்த ‘வங்க’ நண்பர்.

ஒருவித அதிவேக இயக்கத்தன்மை உடையதாய் குதிரையை வரையவே நான் விரும்பினேன். ஆனால் என் நண்பரின் மனதுக்குள் இருந்ததை என்னிடம் சொன்னார். ஒரு நார்மலான ‘காலண்டர்’ வகை ஓவியம்தான் அவர் எதிர்பார்ப்பது எனப் புரிந்து கொண்டு, அது போலவே வரைந்த படம்தான் இது. மத்தபடி இந்த படத்துல பெரிசா ஒன்னும் கிடையாது.

பிடிக்கவில்லை என்றாலும், இது போல நண்பர்கள் கேட்கும் படத்தை வரைந்து கொடுப்பது உண்டு.
நான் ஒன்றும் முறைப்படி ஓவியத்தில் பயிற்சி பெற்றவன் அல்ல. ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதுதான் வரையத் தொடங்கினேன். நான் வரைவதை ஏதோ ஓரளவு ‘நல்லா இருக்கு’ என்கிறார்கள். அதான் தொடர்ந்து வரைகிறேன். வேறொன்றுமில்லை.

வரையத் தெரிந்த எல்லோருக்குமே இக்கட்டான இது போன்ற சூழ்நிலை பல சமயம் வருவதுண்டு.

‘ஓ.. நீங்க வரைவீங்களா? என்னை மாதிரி அப்படியே ஒரு சின்ன ஸ்கெட்ச் போட்டு தாங்களேன்.’

‘என் லவ்வர ஒரு படம் வரைஞ்சு தர முடியுமா?’

இது போன்ற கடுப்பான கேள்விகளை சந்திக்காத ஓவியர்கள் யாராவது இருந்தால் அவர் கண்டிப்பாக போன பிறவியில் நிறைய புண்ணியம் செய்திருப்பார்.
எரிச்சலோடு அவர்கள் முகத்தை ஏதோ கிறுக்கிக் கொடுப்பேன். ‘நல்லா வரலையே.. ஒரு மாதிரி இருக்கு.’ என்பார்கள்.
‘சட்டியில இருந்தாதான் அகப்பையில வரும்’ என மீண்டும் கடுப்பாவேன்.

பெரும்பாலும் இது போன்ற சூழ்நிலைகளில் தப்பிப்பதற்கான அத்தனை அஸ்திரங்களையும் பயன்படுத்துவேன். பதிலுக்கு ‘பாசம்’ எனும் பிரம்மாஸ்திரத்தால் என்னை வீழ்த்தி விடுவார்கள்.

‘என் தலைவரு ‘ *** ‘யோட  படம் வரைஞ்சு தாங்க. உங்க நினைவா வச்சுக்குறேன்’னு ஒரு நண்பர் கேட்டார். ‘என் நினைவாக எவன் படத்தையோ எதுக்கு வரையனும். என்னோட படத்தை வரைஞ்சு தரேன்’னு நான் சொல்ல அவர் சமாளிக்க ஆரம்பித்தார்.

கல்லூரியில் படித்த போது இது போன்ற அனுபவங்கள் கணக்கற்றது. அம்பு குத்திய ‘இதயத்தை’ பலவிதங்களில் வரைவதில் நான் அப்போதுதான் ‘மாஸ்டர்’ ஆனேன்!!
ஹாஸ்டலில் ஒரு நண்பன்(பெயர் போட முடியாத இடத்தில் வேறு வழியில்லாமல் நண்பன் எனத்தான் போட வேண்டியிருக்கிறது).
அவன் தன் காதலிக்கு கடிதம் எழுதி முடித்ததும் லெட்டரின் முடிவில் ஒரு படம் வரைய என்னிடம் கொண்டு வருவான். ‘ஜோடிப்புறா’, ‘ஜோடிப் பூக்கள்’, ‘ovelap’ஆன இதயம் என எந்த கருமத்தையாவது வரைந்து கொடுப்பேன். இப்படி பல கடித பரிமாற்றங்கள் நடந்தது.

ஒரு நாள் அவன் காதலியிடமிருந்து ஒரு கடிதம் வந்தது.

‘நம் காதல் நிறைவேறாது. நண்பர்களாய்ப் பிரிவோம். கண்ணீருடன்: ‘*****’ ‘ என அந்தக் கடிதம் சொல்லியது.
அக்கடிதத்தின் முடிவில் இரண்டு புறாக்கள் எதிரெதிர் திசையில் பறப்பதாக ஒரு படம் வரைந்திருந்தது.(அந்தப் பக்கமும் என்னைப் போல ஏதோ ஒரு ஜீவன் கஷ்டப்பட்டிருக்கும் போல).

அக்கடிதத்துக்கு நாலு பக்கத்தில் ஒரு பதில் கடிதம் எழுதி, படம் வரைய என்னிடம் கொண்டு வந்தான் என் நண்பன்.
அந்த லெட்டரில் ரத்தத்தால் அவன் பெயரையும் அவள் பெயரையும் எழுதியிருந்தான்.
என்னையும் ரத்தத்தால் படம் வரையச் சொல்லிவிடுவானோ எனப் பயந்தேன். நல்ல வேளை! பேனாவைக் கொடுத்தான்.
தூக்குக் கயிற்றுக்கு கீழே ஒரு புறா நிற்பதாக வரையச் சொன்னான்.
‘என்னடா இது வம்பா போச்சு’ என நினைத்து மற்ற நண்பர்களிடம் சொல்ல. எல்லோரும் ஆறுதலாக கோபமாக அட்வைஸ் கொடுத்தார்கள்.
எனக்கு அவன் எண்ணத்தின் மீது இருந்த கோபத்தை விட அவனது கற்பனை மீதுதான் அநியாயத்துக்கு கோபம் வந்தது.

இப்படித்தான் பல ‘அபா[ய]ர கற்பனை’ சக்தியுள்ளவர்களிடமிருந்து ஓவியத்தை கற்றேன்!!

மேசைக் குதிரை

என் அலுவலக மேசை – நான் வரைய பயன்படுத்தும் பல ‘medium’களில் இதுவும் ஒன்று.

வேலை பாடாய் படுத்தும் சமயங்களில் என் மேஜையில் குறிப்பெழுத வைத்திருக்கும் போர்டில் மார்க்கர் வைத்து வரையத் தொடங்கிவிடுவேன். அதற்கு பின் மனம் கொஞ்சம் அமைதியாகிவிடும். பின் வேலையை தொடர்ந்தால், சுலபமாக வேலை முடிந்துவிடும்.

அப்படி ஒரு நாள் வரைந்த படம்தான் இந்த குதிரை.

ஒரே வருத்தம் என்னவென்றால். மற்ற படங்களைப் போல இதன் ஒரிஜினலை பத்திரமாக என் ஃபைலுக்குள் சுருட்டி வைத்துக் கொள்ள முடியாது.

தொகுப்பு

© Ranjit

© Ranjit

© Ranjit

© Ranjit

© Ranjit

© Ranjit

© Ranjit

 

வேல்ஸின் காட்டிற்குள் அலைந்த அனுபவங்கள், ‘ஐல் ஆஃப் வைட்’ என்ற அழகான தீவில் அலைந்த நாட்கள் என எழுத எழுத வந்து கொண்டே இருக்கின்றன. குறைந்தது 12 பதிவுகள் அளவுக்கு இருக்கும். ஒரே இடத்தைப் பற்றி எவ்வளவு நாட்கள்தான் பேசிக்கொண்டிருப்பது. அதனால் இங்கிலாந்து பயணக் குறிப்புகளை இத்தோடு நிறைவு செய்யலாம் என நினைக்கிறேன்.

இந்தப் பயணத்தில் பெற்ற பெரும் அறிவாக நான் நினைப்பது ‘பைசாந்திய’க் கலைகளைத்தான்.
துருக்கியில் தோன்றி பின் உலகெங்கும் பரவிய கிறித்தவ ஓவியங்கள்(icon paintings), தனித்துவமான அன்றைய துருக்கி(கான்ஸ்டாண்டிநோபிள்) பாணி கட்டிடக் கலை ஆகிய இரண்டையும் முக்கியமான பைசாந்தியக் கலைகளாகச் சொல்வார்கள். அவற்றைப் பற்றி விரிவாக கிறித்தவம் வலைத்தளத்தில் எழுதலாம் என நினைக்கிறேன்.(உத்திரவாதம் தரமுடியாது 🙂 ).

முக்கியமான ‘பிரிட்டீஷ் மியூசியம்’ பற்றியும் இங்கு எதுவும் எழுதவில்லை. அங்கு பார்த்த ‘நெபமுன் கல்லறை ஓவியங்களை’ப் பற்றி நிறைய எழுத ஆசை. பதிவு நீளமாகச் செல்லும் என்பதால், வாய்ப்பு கிடைக்கும் போது அதை ‘சொல் புதிது’ தளத்தில் எழுதுகிறேன்.(இதற்கு உத்திரவாதம் தரமுடியும்).

இதுவரை இங்கிலாந்து பயணம் சம்பந்தமாக எழுதிய பதிவுகளை கீழே கொடுத்துள்ளேன்.
இந்தப் பதிவுகள் மூலம் அந்த இடங்களைப் பற்றி பெரிதாக ஒன்றும் தெரிந்து கொள்ளமுடியாது. விக்கிபீடியாவில் விலாவாரியாகத் தெரிந்து கொள்ள முடியும் எனும் போது அதை ஏன் நான் எழுத வேண்டும்.
பயணத்தில் அனுபவம்தான் பிரதானம். தகவல்கள் என்பது ரெண்டாம் பட்சம்தான். அந்த அனுபவங்களின் சின்னச் சின்ன குறிப்புகள்தான் இந்தப் பதிவுகள். அவ்வளவுதான்.

————————————————————-

வெள்ளை நிறமே, வெள்ளை நிறமே!

யதார்த்தம்

பாண்ட் ஸ்ட்ரீட் பஜனை

வீடு

அட வரைங்கப்பா!

‘பொருள்’ உள்ள வாழ்க்கை

ரசனை

ஐ விவி

மனிதர்கள் விசித்திரமானவர்கள்

சுரங்க ரயில்

————————————————————-

சுரங்க ரயில்

© Ranjit

 

கனவுகளில் துரத்தும் பாம்புகள் போல முதலில் மிரட்சி கொள்ளச் செய்த இந்த ரயில்கள், நாட்கள் செல்லச் செல்ல அந்நியோன்யமாய்ப் போனது.
லண்டனில் 19 ஆம் நூற்றாண்டிலிருந்து இருந்து வரும் சுரங்க ரயில் சேவை இது. ட்ரெயின் என்ற சொல்லை அவர்கள் உபயோகிப்பதில்லை. ட்யூப் என்றும் ட்யூப் ஸ்டேஷன் என்றும்தான் சொல்வார்கள்.

நரம்புகளில் பாயும் ரத்தம் போல, நகரின் பூமிக்கடியிலும், மேலேயும் விடாமல் ஓடிக் கொண்டு, நகரை உயிருடன் வைத்திருக்கும் ரயில்கள் இவை. லண்டனின் மிகப் பிரதானமான விஷயமாய் விளங்குவது ‘London Underground’ எனப்படும் இந்தச் சேவைதான்.

நான் வசித்த வீட்டிற்கு அருகிலுள்ள ஸ்டேஷனின்(chiswick park station) ஒரு சின்ன ஸ்கெட்ச்தான் மேலுள்ளது.

‘சார்லஸ் ஹோல்டன்’ வடிவமைத்த பல சுரங்க ரயில் ஸ்டேஷன்களில் இதுவும் முக்கியமான
ஒன்று. இந்தப் படத்தில் அதன் முழு கட்டிடத்தையும் நான் காட்டவில்லை. படத்தில் உள்ளது அந்த கட்டிடத்தில் உள்ள கோபுரம் போன்ற ஒரு அமைப்பு மட்டும்தான். இங்கிலாந்து பாணி செங்கலடுக்கு கட்டிடம்தான். பெரும் கூட்டம் கூடும் இடத்தை எப்படி வடிவமைத்தால் பயன்பாட்டிற்கு எளிதாய் இருக்கும் என்ற கோணத்தில் கட்டப்பட்ட கட்டிடம்.

‘சார்லஸ் ஹோல்டன்’ ஹிட்லருக்கு மிகப் பிடித்த கட்டிடக்கலைஞர் என்று ஒரு வதந்தி உண்டாம். ஜெர்மனியின் ஊடுருவலின் போது, சார்லஸ் ஹோல்டன் வடிவமைத்த செனட் ஹவுசில்தான் தன் தலைமையிடத்தை நிறுவவேண்டும் என்ற ஆசை ஹிட்லருக்கு இருந்ததாம். செனட் ஹவுஸ் இன்று
யுனிவர்சிட்டி ஆஃப் லண்டனுக்கு சொந்தமான கட்டிடம்.

ஊர் சுற்ற கிளம்பும் போது பெரும்பாலும் நான் ஆரம்பிக்கும் இடம் இந்த ஸ்டேஷன்தான். இதை விட்டால், சில நேரங்களில் ‘டர்னம் கிரீன்’ என்ற ஸ்டேஷனிலும் என் பயணத்தை தொடங்குவதுண்டு,
அதற்கு ஒரு காரணம் உண்டு. காலை உணவை முடிக்க கொஞ்ச தூரம் சிஸிக் ஸ்டேஷனிலிருந்து நடந்து செல்ல வேண்டும். ‘ப்ரெட் ஷாப்’ என்றொரு கடை. ப்ரெட் வகையில் அத்தனையும் இங்கு கிடைக்கும்.
முழங்கை அளவு கோதுமை ப்ரெட் ஒன்றை தேர்ந்தெடுத்து கடைக்காரரிடம் கொடுத்தால் நமக்குப் பிடித்த அசைவ வகைகளை அந்த ப்ரெட்டிற்குள் திணித்து சூடு செய்து தருவார். பெரும்பாலும் ‘க்ரே ஃபிஷ் டெயில்’ அல்லது ‘மீட் பால்ஸ்'(மாட்டிறைச்சி) இவைதான் என்னுடைய தேர்வாக இருக்கும். அந்த சுவையை இப்போது நினைத்தாலும் இன்னொரு ட்ரிப் அடித்து விட்டு வர ஆசை வந்து விடுகிறது.

என் பயண அனுபவத்தில் உணவைப் பற்றி எழுதவே கூடாது என்றுதான் நினைத்தேன். ஆனால் முடியவில்லை. ஒரு இடத்தைப் பற்றி புரிந்து கொள்ள அங்குள்ள உணவு முறைகளைப் புரிந்து கொள்வதிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும் என நினைக்கிறேன். உணவு முறையை எப்படிப் புரிந்து கொள்வது? வேறெப்படி? சாப்பிட்டுத்தான்.

மேற்சொன்ன கடையில் உணவை வாங்கியதும், சில நேரங்களில் அப்படியே திரும்பி சிஸிக் ஸ்டேஷனுக்கு வந்து, ரயிலில் போகும் போதே சாப்பிடுவதுண்டு. அல்லது, ‘டர்னம் கிரீன்’ ஸ்டேஷனுக்கு பக்கத்தில் உள்ள பார்க் வரை சென்று, அந்த பார்க்கில் சாப்பிட்டுவிட்டு, அப்படியே டர்னம் கிரீனிலிருந்து ரயிலேறுவதும் உண்டு.

அந்த ‘டர்னம் கிரீன்’ பார்க்கில் நடப்பதாக ஒரு வித்தியாசமான உரையாடல் ‘The Man Who Was Thursday’ என்ற நாவலில் வரும். ஜி.கே.ஜெஸ்டெடன் எழுதிய நாவல்.
1908-ல் வெளியான நாவல். அந்த பார்க்கின் பெயர் ‘ஸஃப்ரான் பார்க்’ என அந்த நாவலில் வரும்.

அந்த உரையாடல் ரொம்பச் சுவாரசியமானது. கலையை வெவ்வேறு கோணத்தில் பார்க்கும் இருவருக்கு இடையிலான உரையாடல் அது.

அந்த உரையாடலில் லண்டனின் இந்த ரயில் பயணத்தைப் பற்றி வரும்.

முன் கணிப்பும், ஒழுங்கும் சுவாரசியமில்லாதது. லண்டன் சுரங்க ரயிலில் வேலை செய்பவர்களும், அதன் பயணிகளும் ஏன் ஒரு சோர்வு மனநிலையில் இருக்கிறார்கள்? அந்த ரயில் எங்கு போய்ச் சேரும் என்பது
அவர்களுக்கு தெரியும். அடுத்த நிறுத்தம் எது என்பதும் தெரியும். மிகக் கச்சிதமான ஒழுங்குடன் இந்த சுரங்க ரயில்களின் அத்தனை நடவடிக்கைகளும் இருக்கும். இந்த ஒழுங்கு சலிப்பை உண்டுபண்ணக் கூடியது. எதிர்பார்ப்பை தூண்டும் எதுவும் இதில் இல்லை. இப்படி ஒரு தரப்பை கிரகோரி என்ற பாத்திரம் சொல்வதாக வரும்.

இதற்கு மாறான தரப்பு சைம் என்ற பாத்திரத்தினுடையது. இந்த ரயில் பயணத்தை மனித சாதனையாக பார்க்கும் தரப்பு அது. நினைத்த இடத்திற்கு செலுத்த வைக்கும் மனிதனின் எந்திரத்தின் மீதான கட்டுப்பாட்டை
பெரும் சாதனையாகக் கூறுவதாய் வரும்.

இரு வெவ்வேறு தரப்புகளை உருவாக்காத சிறந்த கண்டுபிடிப்புகளும், கலைப் படைப்புகளும் உலகத்தில் இருக்கிறதா என்ன?

மனிதர்கள் விசித்திரமானவர்கள்

© Ranjit

 

போன வருடம் இதே நாளில் தெற்கு லண்டன் முழுதும் பெரும் கலவரம் பரவிக் கொண்டிருந்தது.
ஆகஸ்ட் 4-ல் ஆரம்பித்தது அந்தக் கலவரம். ‘மார்க் டகண்’ என்ற இளைஞரை சந்தேகத்தின் பேரில் போலிசார் சுட்டுக் கொல்ல, தெற்கு லண்டன் முழுதும் பற்றி எரிய ஆரம்பித்தது.

காலையில் தூங்கி எழும் போதே ‘உங்க ஏரியாவில் ஏதும் பிரச்சினையா?’ என வீட்டிலிருந்து ஃபோன் வந்தது.
எனக்குச் செய்தி தெரியும் முன்பே இந்திய ஊடகங்கள் மூலம் கலவரச் செய்தி வீட்டிற்கு தெரிந்திருந்தது. ஊடகத்தின் வேகத்தை சில நேரங்களில் புரிந்து கொள்ளவே முடிவதில்லை.
ஒளியோடு போட்டி போடுகிறார்களோ என்னமோ? தெரியல.

கலவரத்தை காரணமாகக் கொண்டு பல கடைகள் சூறையாடப்பட்டன. ஆகஸ்ட் முழுக்க ஊடகமெங்கும் முகமூடி அணிந்து பொருட்களைச் சூறையாடும் இந்த நபர்களின் உருவங்களே நிரம்பியிருந்தன.

மிக நாகரிகமான நடத்தையுள்ளவர்கள்தான் இங்கிலாந்தினர். அதில் சந்தேகமில்லை. ஆனால் இதற்கு அப்படியே நேர்மாறான குணத்தையும் அங்கு நிறைய பார்க்க முடிந்தது. முக்கியமாக இளவயதுக்காரர்களிடம்.
தனிப்பட்ட முறையில் எனக்குக் கூட மிகக் கசப்பான அனுபவம் உண்டு. லண்டனிலிருந்து வேல்ஸிற்கு சென்ற போது இரவு நேரத்தில், என் வயதுள்ள ஒரு பெரும் இளைஞர் கூட்டம் என்னைத் தாக்க முயற்சித்தது.
அனைவரும் முழுப் போதையில் இருந்தனர். மிகக் கஷ்டப்பட்டு தப்பித்து ஹோட்டல் அறையை வந்ததடைந்தேன். ஹோட்டல் உரிமையாளர் ஒரு பஞ்சாபி. தனியாக வெளியே இரவில் செல்ல வேண்டாம் என அறிவுரைத்தார். அறைக்குத் திரும்பியதும், அறைச் ஜன்னலைத் திறந்து பார்த்த போது மீண்டும் அதிர்ச்சி. ஒரு பெண்ணை ஒரு ஆள் கீழே தள்ளி அடித்து உதைத்துக் கொண்டிருந்தான். அவள் முகத்தில் ரத்தக் காயங்கள். சிலர் வந்து அவனைத் தடுத்து நிறுத்திக் கொண்டிருந்தனர்.

வடிவேலு ஒரு படத்தில் ஆறு மணிக்கு மேல் குடித்து விட்டால் அப்படியே தலைகீழாய் அவர் குணம் மாறி விடுமே. அதுபோலத்தான் இருக்கும்.

‘பிக்காடல்லி சர்க்கஸ்’ பகுதியில், சூதாட்ட விடுதிகள் நிறைந்த அந்த வீதிகளில் அடிக்கடி அடிதடிச் சண்டைகள் நடக்கும். போலிசார் ரோந்து வந்த வண்ணமே இருப்பார்கள்.
ரத்தம் சொட்ட நடந்த சண்டைகள் சிலவற்றை நானே பார்த்திருக்கிறேன். எல்லா பெரும் நகரங்கள் போலவே இரவு வாழ்க்கை இங்கும் திகில் நிறைந்ததுதான். பகல் வந்தால் அப்படியே மாறிவிடுவார்கள்.
உள்ளிருக்கும் கோர முகம் வெளித் தெரிய இருட்டு தேவை போல.

பகல் மனிதர்கள் அவ்வளவு அன்பானவர்கள்.

வழக்கம்போல ரயிலில் பயணம் செய்த ஒரு நாள், ஒரு ஸ்டேஷனில் பத்து பதினைந்து பள்ளிச் சிறுவர்/சிறுமியர்கள் ஏறினார்கள். ஒரு சிறுமியின் பையில் ‘F_ _K SCHOOL’ என்ற பேட்ஜ் குத்தியிருந்தது.
வயதுக்கு மீறிய வார்த்தை என்றாலும், அதை மிக ரசித்தேன்.

ரயில் கூட்டமாக இருந்தது. அந்தச் சிறுமி அந்தப் பையை என்னிடம் கொடுத்து, வைத்திருக்கச் சொல்லிவிட்டு நின்று கொண்டிருந்தாள். அவள் இறங்க வேண்டிய இடம் வந்ததும் பையை வாங்கிக் கொண்டு ‘தேங்க்ஸ் இந்தியன் யங் மேன்’ எனச் சொல்லிவிட்டு சென்றாள்.

என் நெற்றியில் ‘இந்தியன்’ என எழுதி ஒட்டியிருந்திருக்குமோ? எப்படிக் கண்டுபிடித்தாள் எனத் தெரியவில்லை. முதன்முறையாக, ஏதோ ஒரு அடையாளத்தை நான் சுமந்து கொண்டிருக்கிறேன் என உணர்ந்தேன்.
இன்னும் பல மனிதர்கள், பல விதங்களில். மேலுள்ளது வெவ்வேறு சமயங்களில் ரயில் பயணத்தின் போது வரையப்பட்ட வெவ்வேறு மனிதர்களின் படங்கள்.

 

ஐ விவி

© Ranjit

 

ஐ விவி (Ai WeiWei) என்பது இவர் பெயர்.  harmony tool கொண்டு வரைந்தது இப்படம்.

வழக்கம் போல நமக்கு விநோதமாய்த் தெரியும் சீனப் பெயர்தான்.

அதிகாரத்திற்கு எதிராய் தன் கலையை ஆயுதமாய் ஏந்திப் போராடும் கலைஞன்.

‘பறவைக் கூடு’ என்ற அந்த புகழ் பெற்ற ஒலிம்பிக் மைதானத்தை நினைவிருக்கலாம். போன பெய்ஜிங்க் ஒலிம்பிக்கின் போது அந்த மைதானத்தை வடிவமைத்தவர் இவர்தான்.

ஓவியர், சிற்பி, கட்டிடக் கலை நிபுணர், புகைப்படக் கலைஞர், கவிஞர், இணையப் பதிவுலகில் தீவிரமாக இயங்கியவர் என இவருக்கு பல முகங்கள் உண்டு. ‘பதிவுலகில் தீவிரமாக இயங்கியவர்’ என இறந்த காலத்தில் குறிப்பிட காரணம் இருக்கிறது. இவரது வலைத்தளத்தை 2009-ல் சீன அரசாங்கம் தடை செய்தது.

தொடர்ந்து சீனக் கம்யூனிச அரசாங்கத்தை எதிர்த்து தனக்கே உரிய பாணியில் தன் கலையை வைத்தே போராடி சீன அரசால் கைது செய்யப்பட்டவர். எனது லண்டன் வாசம் துவங்கிய போது, பிரிட்டன் முழுவதிலும் அவரை விடுவிக்கக் கோரி பெரும் கோஷங்கள் முழங்கிய வண்ணம் இருந்தன. டேட் நவீனக் கலைக் கூடச் சுவர்களில் ‘Release Ai WeiWei’ எனப் பெரிதாய் எழுதியிருந்தது. ‘சீனத்தில் உள்ள ஒரு கலைஞனுக்காக ஏன் இங்கிலாந்தினர் குரலெழுப்ப வேண்டும்’ என நினைத்தேன். லண்டன் ஊடகங்கள் அவ்வப்போது அவரைப் பற்றிய கட்டுரைகளையும், செய்தித் தொகுப்புகளையும் வெளியிட்டுக் கொண்டிருந்ததன. இன்னும் கொஞ்சம் அவரைப் பற்றி அறிய எண்ணி தேட ஆரம்பித்தேன்.

foyles புத்தகக் கடையில் அவரின் நேர்காணல் புத்தகமொன்றை(Ai WeiWei speaks:penguin publications) வாங்கினேன். யாரையும் அவரின் உரையாடல்கள் வழியே அறிந்து கொள்ள முடியும். அப்படித்தான் அந்த நேர்காணல்கள் மூலம் அவரை அறிந்து கொண்டேன்.

‘சுதந்திரம்’ என்ற ஒற்றை மந்திரம்தான் அவரது கலைகளின் அடிப்படை. ஒலிம்பிக் மைதானத்தை வடிவமைக்கும் வரை கூட அவருக்கும், அரசாங்கத்துக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. அதன் பின் அவர் ஒலிம்பிக்கை புறக்கணித்தார். ஒலிம்பிக்கை காரணம் காட்டி நிகழ்ந்த சீன அரசாங்கத்தின் பல நடவடிக்கைகள் அவருக்குப் பிடிக்கவில்லை. பழைமையான சீன வீடுகளின் தொன்மையை கெடுக்கும் வகையில் அவற்றிற்கு பெயின்ட் அடிப்பதில் தொடங்கி பல அத்துமீறல்கள். அவரது வீடும் இப்படி சீர்குலைக்கப்பட்டது. சிறு வயது முதலே கம்யூனிச அரசாங்கம் மீதான வெறுப்பு அவருக்கு இருந்துள்ளது. அவரது தந்தை புகழ்பெற்ற சீனக் கவிஞர். அவரும் அரசாங்க ஒடுக்கு முறைகளுக்கு ஆளானவர்.

ஐவிவியின் வலைத்தளம் ரொம்பப் புகழ் பெற்றது. அதன்வழியே வந்த அவரது எழுத்துக்கள், புகைப்படங்கள் சீன அரசாங்கத்தை எரிச்சலூட்டியது. 2009-ல் தடையும் செய்தது. அந்த இணைய எழுத்துக்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இப்போது புத்தகமாய்க் கிடைக்கின்றது.

அவரைக் கண்காணிக்க அவரது வீட்டைச் சுற்றி கேமராக்கள் பொருத்தப்பட்டன. அதையும் கருவாக வைத்து ‘மார்பிள்’ கல்லில் அந்த சிசிடிவி கேமரா போன்றே பல சிற்பங்கள் செய்தார்.

அவரது படைப்புகள் பற்றி புத்தகங்கள் வழியாக அறிந்த எனக்கு, அவரது இரண்டு installation- கள் லண்டனில் காட்சிக்கு வைக்கப்படுவதை அறிந்து பயங்கர சந்தோஷம். முதல் கண்காட்சியை பல காரணங்களால் தவற விட்டேன். ‘sunflower seeds’ என்பதுதான் அந்த installation-ன் பெயர். கிட்டத்தட்ட 1600 கலைஞர்களை வைத்து அவர் உருவாக்கிய 100 மில்லியன் சூரிய காந்தி விதைகள்தான் அந்தப் படைப்பு. அத்தனை விதைச் சிற்பமும் ஒரு பெரிய கூடத்தில் கொட்டப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. அந்தப் படைப்பு மற்றவற்றைப் போலல்ல. அதன் மீது நடக்க முடியும் அதை எடுத்து விளையாடலாம். பார்வையாளனுக்கு முழுச் சுதந்திரம் கொடுக்கும் படைப்பது. மறு நாள் ‘டேட்’ கூடத்திற்கு போகும் போது அதை எடுத்து ஒதுங்க வைத்துக் கொண்டிருந்தார்கள். அடுத்த கண்காட்சியை எப்படியும் தவற விடக் கூடாதென நினைத்துக் கொண்டேன்.

அடுத்த படைப்பு ‘zodiac heads’ என்பது. சீனப் பாரம்பரியத்தில் ஜாதக ராசிகள் பன்னிரண்டிற்கு குறியீடாக விளங்கும் பன்னிரண்டு விலங்கின் தலைகளும் சிற்பமாகச் செய்யப்பட்டு வட்டமாக ஒழுங்குபடுத்தப்பட்ட installation இது.

‘சோமர்செட் ஹவுஸில்’ இந்த  ‘zodiac heads’ கண்காட்சியைப் பார்த்தேன். ஒவ்வொரு விலங்குச் சிற்பமும் அவ்வளவு நேர்த்தி. இந்தப் படைப்பால் உந்தப்பட்டுதான் நான் முதன்முதலாக ‘குரங்கு’ சிலையை செய்தேன். சீனக் கலைஞர்களை இணைத்து அவர்களை எழுதக் கட்டாயப் படுத்தி அவற்றை புத்தகமாக கொண்டு வந்தவர் ஐ விவி.

பல கலைஞர்களுக்கு உந்துதலாக இருந்து கொண்டு இன்றும் அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு நடுவில் வாழ்ந்து வருகிறார் ஐவிவி.

ஐ விவி பற்றி ஒரு ஆவணப் படம்

ரசனை

© Ranjit

 

முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்த ‘டேட்(Tate) நவீன கலைக்கூடம்’ இதுதான். கூடவே தேம்ஸ் நதியும் ‘மில்லேனியம் ப்ரிட்ஜும்’.

படத்தில் ஒரு ‘ரைஸ் மில்’ போன்ற தோற்றம் தந்தாலும், நேரில் பார்க்க மிக அழகாக இருக்கும் இந்த கட்டிடம். இங்கிலாந்து பாணியிலான செங்கல் அடுக்குகளால் எழுப்பப்பட்ட, மிக எளிய வடிவத்தில் அமைந்த, பிரமாண்டமான கலைக்கூடமிது. உலகிலேயே அதிக பார்வையாளர்கள் வருடந்தோறும் வந்து செல்லும் நவீன கலைக் கூடமும் கூட.

ஏறக்குறைய, நவீன ஓவியத்தின் அத்தனை ‘இசங்கள்’ சார்ந்த ஓவியங்களையும் இங்கு பார்க்க முடியும். அது போக, பல நவீனச் சிற்பங்களும், புகைப்படங்களும், எண்ணற்ற ‘installation’-களும் இங்கு காட்சிக்கு உண்டு. installation பற்றி ஏற்கனவே இந்த பதிவில் சொல்லியிருக்கிறேன்.

பிக்காஸோ முதல் பல முக்கிய நவீன ஓவியர்களின் ஓவியங்கள் இங்கு உண்டு. அவற்றைப் பற்றி நான் விளக்கப்  போவதில்லை. இசை போல அவையும் அனுபவத்திற்கானது. அர்த்தங்களுக்கானதல்ல. ஒரு வயலின் இசையை கேட்டால், அதற்கு என்ன அர்த்தம் என நாம் கேட்பதில்லை. ஓவியத்தில் மட்டும் ஏன் அர்த்ததை எதிர்பார்க்கிறோம் எனப் புரியவில்லை. உண்மையைச் சொன்னால், இசையைக் கூட நாம் சரியாக ரசிப்பதில்லை என்றே தோன்றுகிறது. பிடித்த இசை பற்றி நம்மில் பலரிடம் கேட்டால் ஏதோ ஒரு சினிமாப் பாடல் வரிகளைச் சொல்லி அதுதான் பிடித்தது என்போம். இசையையும் அர்த்தங்களோடு இணைத்துத்தான் ரசிக்கிறோம். தனி இசைத் தொகுப்புகளை கேட்பவர்கள் மிகக் குறைவு.

இந்த ரசனைக் கோளாறு மேற்கு/கிழக்கு பிரச்சினையே அல்ல. சிலர் இப்படிச் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்: “மேற்கு, பொருளாதார ரீதியில் தன்னிறைவு பெற்றதால், அவர்களுக்கு கலையை ரசிக்க நேரமிருக்கிறது. நன்றாக ரசிக்கிறார்கள். நமக்கு சோத்துக்கு சம்பாதிக்கவே நேரமில்லை. கலையை எங்க ரசிக்கிறது”.

நான் பார்த்த வரையில் பொருளாதாரத் தன்னிறைவு பெற்றவர்கள் பலர் இங்கே ரசனையற்ற ஜென்மங்களாகவே இருக்கிறார்கள். நம்மிடம் எல்லாமே சரியாகத்தான் இருந்தது என்பதே என் எண்ணம். நம் மரபில் இருந்த அத்தனைக் கலைகளையும் எடுத்துப் பாருங்கள். எந்த அளவுக்கு ரசனை உள்ளவர்களாக இருந்திருந்தால் அப்படிப்பட்ட கலைகளை படைத்திருப்பார்கள். அதில் இம்மி கூட இன்றைய பலருக்கு இல்லையே. பொருளாதார தன்னிறைவுன்றது எல்லாம் சும்மா ஒப்பேத்துற வேலை. பாரதியையே எடுத்துக் கொள்ளுங்கள், வறுமையில் கிடந்து சீரழிந்தவன்தான். எப்பேர்பட்ட மகா ரசிகன் அவன். ரசிக்கிற தன்மை இப்போ மழுங்கிப் போச்சு அவ்வளவுதான். நம்மில் பலர் அடிக்கடி சொல்லும் மிகப் பெரிய பொய் ‘நேரமில்லை’ என்பது. ரசனையையும் ‘நேரம் ஒதுக்கிச் செய்ய வேண்டிய வேலை’ என்று நினைப்பது  இன்னும் அபாயமானது.

இன்னொரு மிகப் பெரிய பொய் ‘படித்தவர்கள் ரசிப்பார்கள்’ என்பது. ஒரு நாள் பார்த்து முடிக்கக் கூடிய இடமில்லை இந்த டேட் கலைக்கூடம். அதனால் அடிக்கடி நான் இங்கு செல்வதுண்டு. என்னோடு அன்று என் நண்பர்களும் வந்தனர். படித்தவர்கள்தான். அங்கு வந்தபின், அன்றைய தினம் வீணானது என்றே வருந்தினார்கள். அதிலும் ஒரு நண்பர் ‘இவ்வளவு பெரிய பில்டிங்குல ஒரு ஷாப்பிங் மால் வச்சிருந்தா எவ்வளவு வருமானம் வந்திருக்கும்?’ என்றார்.

ஒன்னும் சொல்றதுக்கில்ல.