ஆப்பிரிக்க யானை

© Ranjit

‘கான்வாஸ்’ மீது ‘சார்க்கோலால்’  வரையப்பட்ட படம்.

ஆப்பிரிக்க யானையின் தனித்தன்மை அதன் சொளவுக் காதுகள் மட்டுமல்ல. அதன் ஒட்டுமொத்த உடல் அமைப்பும்தான். அழகான நெளிவு சுளிவுள்ள உடலமைப்பு கொண்டது இந்த யானையினம். அதன் மேற்பகுதியை மட்டும் கவனித்தால் தெரியும். உச்சந்தலையில் உயர்ந்து பின் முதுகில் வளைந்து பின் மேலெழும் அழகான ‘sine’ வளைவு போன்ற வடிவம் , அழகான பெண்களின் உடல் வளைவுகளுக்கு நிகரான வசீகரம் கொண்டது. இந்திய யானையின் முதுகுப்பகுதி இதற்கு நேர்மாறாக மேடாக வில் போன்று இருக்கும்.

‘உடல் மெலிந்து நோஞ்சானாய் இருப்பதால் இந்த வடிவத்தில் உள்ளது’ என நினைப்பவர்களுக்கு ஒரு தகவல். உலகிலேயே நிலத்தில் வாழும் உயிர்களிலேயே மிகப் பெரிய விலங்கு இந்த ஆப்பிரிக்க யானைகள்தான். இந்திய, ஆசிய யானைகள் ஆப்பிரிக்க யானைகளோடு ஒப்பிடும் போது அளவிலும் எடையிலும் மிகச் சிறியன.

நல்ல – கரிய – தரமான ‘சார்க்கோல்’ துண்டை வாங்கியதும், எனக்கு முதலில் வரையத் தோன்றிய படம் இந்த யானைதான். யானைத் தோலின் முரட்டுத் தன்மையை மேலும் மெருகூட்டும் என்றுதான் ‘கான்வாஸ்’ மீது வரைந்து பார்த்தேன். பேப்பரில் வரைந்தால் அந்த முரட்டுத் தன்மையை  கொண்டு வர இன்னும் கூடுதலாக பிரயத்தனப்பட வேண்டி வரும்.  கான்வாஸ் என்றால் கொஞ்சம் எளிது.

வீடு

© Ranjit

‘சிஸிக்'(chiswick) என்ற மேற்கு லண்டன் பகுதியில் நண்பர்களோடு நான் தங்கியிருந்த வீடு.

கிட்டத்தட்ட 160 நாட்கள் இந்த வீட்டில்தான் சமைத்து, விளையாடி, படங்கள் வரைந்து, சிற்பங்கள் செய்து, பிறந்த நாட்கள் கொண்டாடி, தோட்டத்தில் பார்ட்டிகள் நடத்தி என பொழுதுகள் ஜெட் வேகத்தில் பறந்தன.

சமையல் ஒரு ஜாலியான அவஸ்தை. இந்திய ஸ்டைல் உணவுகளை புகை கிளப்பாமல் சமைக்க முடியாது. இந்தப் புகை அடிக்கடி சமையலறையில் உள்ள ‘தீ’ எச்சரிக்கைக்கான அலார்மை ஒலிக்கச் செய்து பக்கத்து வீட்டார்களை டென்ஷனாக்கி விடும்.
அந்த அலார்மை அணைத்து வைப்பதும் சட்டப்படி குற்றம். வேறு வழியில்லாமல் இங்லீஸ் உணவுகளை சமைக்க கற்றோம்.

‘Too many cooks spoil the broth’. எங்கள் விஷயத்தில் அது உணவை மட்டும் கெடுக்கவில்லை, பக்கத்து வீட்டாரின் நிம்மதியையும் கெடுத்தது. இங்கிலாந்து தேசத்தார் கொஞ்சம் சென்ஸிடிவானவர்கள். கொஞ்சம் சத்தம் வந்தாலே எரிச்சலடைவார்கள். ‘அதை எடு’, ‘இதைப் போடு’ என்று சமையலறையில் நாங்கள் செய்த ஆர்ப்பாட்டம் பக்கத்து வீட்டு பெண்மணியை எரிச்சலூட்டியது. நாகரீகமான நடத்தைக்கு பேர் போனவர்களாயிற்றே பிரிட்டீஷார். எங்களோடு நேரடியாக வந்து சண்டையிடாமல் அந்தப்பெண்மணி எங்களுக்கு அதை கடிதமாக எழுதி போஸ்ட் மூலமாக அனுப்பியிருந்தார். இத்தனைக்கும் நேரில் பார்க்கும் போதெல்லாம் எங்களை நலம் விசாரித்து புன்னகை செய்துவிட்டுத்தான் செல்வார். அந்த லெட்டர் அனுப்பிய பிறகும் கூட எங்களிடம் அப்படித்தான் நடந்து கொண்டார். முகத்தை திருப்பிக் கொண்டெல்லாம் செல்லவில்லை.

எங்களுக்கு தர்மசங்கடமானது. அன்று முதல், வலுக்கட்டாயமாக அமைதியாக இருக்க முயற்சித்தோம்.
தவறுதலாக ஒரு நாள், முணுமுணுத்துக்கொண்டே ஒரு ஜோக் சொல்லி விட்டேன். என் நான்கு நண்பர்களும் சமையலறையை விட்டு உடனே வெளியேறி ஹாலுக்கு சென்று நன்றாக சிரித்து விட்டு, பின் சமையலறைக்கு வந்து வேலையை
தொடர்ந்தார்கள்.

அந்த ஏரியாவில் ஒரு குட்டி காடு உண்டு. அங்கு அதிகமாக நரிகளும் உண்டு. நிறைய செலவு செய்து அந்த வனத்தையும் அந்த நரிகளையும் பாதுகாத்து வருகிறது அரசாங்கம். நடுநிசிகளில் அந்த நரிகள் ஊருக்குள் வந்து உலவித் திரியும். எங்கள் தோட்டத்திற்குள் நரிகள் புகுந்து குப்பைத்தொட்டிகளை இழுத்துப்போட்டு அட்டகாசம் செய்துவிட்டு செல்லும்.
வீட்டு நிர்வாகியிடம் நாங்கள் முறையிட்டோம். அந்தப் பெண்மணி பல யோசனைகள் கொடுத்தும் பலனில்லை.

திடீரென ஒரு நாள் என் நண்பன் அந்த நிர்வாகியிடம், ‘எலிகளைக் கொல்வது போல ஏதாவது மருந்து வைத்து தோட்டத்திற்குள் வரும் நரிகளை கொன்றுவிடலாமா?’ என்றான். அந்த நிர்வாகி ஒரு நிமிஷத்தில் பேயறைந்தது போல் ஆனார். நாங்களும் அவனை ஒருமாதிரியாகப் பார்த்தோம். பின் அந்த நிர்வாகி வைல்டு லைஃப் பாதுகாப்பு பற்றி அவனுக்கு பல விஷயங்கள் சொன்னார்.

பின் அறைக்கு வந்து, ‘ஏண்டா பொசுக்குன்னு இப்டி சொல்லிட்ட?’ என்றோம்.

‘எலிக்கு ஒரு நியாயம் நரிக்கு ஒரு நியாயமா?’ என்று சமாளித்தான்.

இப்படி பல அனுபவங்கள் இந்த வீட்டில். கன்னடத்தில் ஒரு வாய்மொழிக்கதை உண்டு. தன் மகன், மருமகள்களின் கொடுமைகளை மனதுக்குள்ளேயே அடக்கிவைக்கும் வயதான தாய், ஒரு நாள் அடக்கிவைத்த அத்தனை கஷ்டங்களையும் சொல்ல ஆளில்லாமல், தன் அறைச் சுவர்களிடம் சொல்லி அழ, அந்தச் சுவர்கள் அதை தாங்கமுடியாமல் இடிந்து நொறுங்கிவிடும்.
நாம் வசிக்கும் வீடு என்பதும், நம்மோடு வாழும் ஒரு உயிர்தான் என்பதைச் சொல்வது இந்தக் கதை.

நாங்கள் தங்கியிருந்த இந்த வீடும் எனக்கு அப்படித்தான் தோன்றியது.
மொத்தத்தில், என்னோடு தங்கியிருந்த நான்கு நண்பர்களையும் சேர்த்து ஐந்தாவது நண்பனாய் இருந்தது இந்த வீடு.

பாண்ட் ஸ்ட்ரீட் பஜனை

© Ranjit

 

லண்டன் ‘பாண்ட்’ தெருவில் பார்த்த இங்கிலாந்தைச் சேர்ந்த வெள்ளைக்கார ‘இஸ்கான்’ பக்தர்கள்.
அறைக்குச் சென்ற பின் நினைவில் கொண்டு வந்து வரைந்த படம்.

பாண்ட் தெருவில் ஆரம்பித்து ஆக்ஸ்போர்ட் தெரு வரை எக்கச்சக்கமான கடைகள்.
டிஸ்னி ஷாப், பூட்ஸ், மேக்டோனால்ட்ஸ், ப்ரைமார்க்கில் ஆரம்பித்து திருப்பூர் துணிகளை விற்கும் பல கடைகள், அவற்றை லண்டன் துணிகள் என பெருமிதத்தோடு வாங்கிச் செல்லும் இந்தியர்கள்,
‘வீடற்றவன்’ என்ற போர்டுடன் KFC வாசலில் பிச்சை கேட்கும் பிரித்தானிய பிச்சைக்காரர்கள், பல இந்திய/பாகிஸ்தானிய எலக்ட்ரானிக்ஸ் கடைகள், பிரித்தானியர்கள், ருமேனியர்கள் என எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும் வீதி இது.

பொருட்களுக்கு மட்டுமல்ல, சமயங்களுக்கும் கூட்டம்தானே ஆதாரம். அதனால்தான் சில சமய பரப்பாளர்கள் இந்த வீதி கூட்டத்தை தேடி வருகிறார்கள்.
கருப்பின ஆண்கள், பெண்கள் சிலர் கத்தை நோட்டீசுகளை கையிலேந்தியபடி ‘ஏசு வரப்போகிறார்’ என முழங்கிக் கொண்டிருப்பார்கள். ‘இஸ்கான்’ பக்தர்கள் சிலர் பாடல்கள் பாடிக்கொண்டு, அவர்களின் தலைமை ஆச்சாரியாவின் புத்தகங்களை விற்றுக்கொண்டு அந்த வீதியை வலம் வருவார்கள்.

அவர்களுக்கு பொருந்தாத ஒன்றை அவர்கள் அணிந்திருப்பது போல எனக்குத் தோன்றியது. பாண்ட் தெருவின் பின்னணியில் ‘contrast’-ஆக தெரிந்தார்கள். வரைவதற்கு அருமையான விஷயமாய் பட்டது.

பெங்களூர் ‘இஸ்கான்’ கோயிலுக்கு, முன்பு அடிக்கடி சென்றதுண்டு. அங்குள்ள நூலகத்தை கொஞ்சம் பயன்படுத்தியுள்ளேன். அந்த இயக்கத்தின், அதன் கருத்துகளின் நிறுவனத் தன்மை ஒருவித சலிப்பை ஏற்படுத்தியது.
மிகப் பிரபலமான ஈஷா வாஸ்ய உபநிஷதத்தை அவர்களின் தலைமை ஆச்சார்யாவின் உரையில் படித்து விட்டு அலுப்புதான் ஏற்பட்டது. அதே உபநிஷதத்தின் ரஜனீஷ் உரையை பின்னர் படித்து அந்த உபநிஷதத்தின் மகத்துவத்தை புரிந்து கொண்டேன். அதன் பதினெட்டு சூத்திரங்களும் ‘abstract’ ஆன ஆன்மீக அனுபவத்தை முன்வைப்பவை. உபநிஷதங்கள் வேதங்களை முழுமை செய்பவை என்ற வழக்கமான பார்வையிலிருந்து மாறுபட்டு, வேதங்களுக்கு எதிராக புரட்சி செய்பவை என்றவர் ரஜனீஷ்.

எது எப்படியோ… உண்மை ஆன்மீகம் நம்மைத் தேடி வருவதில்லை. நாம்தான் தேடி அடைய வேண்டும்.

கி.ரா.

© Ranjit

 

கலையின் வழியே தன்னை வெளிப்படுத்தாமல், தன் வழியே கலையை வெளிப்படுத்தும் மாபெரும் கதை சொல்லி.

இன்னும் கொஞ்ச நாட்களில் 90 வயதை நெருங்கும் கி.ரா. அவர்களிடம் ‘இப்ப ஏதும் எழுதுறதில்லையா?’ என்ற கேள்வி கேட்கப்பட்டபோது அவரின் பதில் : “மரம் எல்லா காலமும் காய்க்கிறது இல்லையே” என்பதாக இருந்தது. கல்லூரி மாணவர்களின் கி.ரா வுடனான அந்த அற்புதமான சந்திப்பு சொல்புதிது தளத்தில்.

காய்க்கவில்லை என்றால் என்ன? இந்த மரம் அடுத்த தலைமுறை படைப்பாளிகளுக்கு அற்புதமாக நிழல் தருகின்றதே.

யதார்த்தம்

© Ranjit

 

லண்டன் ‘தேசிய ஓவியக் கூடத்தில்’ உள்ள டாவின்சியின் ‘The virgin of the rocks’ ஓவியத்தை அதன் முன் அமர்ந்து பார்த்து நான் வரைந்த படமிது.

ரசிக்க மட்டுமென்றால் ஓவியத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாலே போதும். அதன் நுணுக்கங்களை விளங்கிக்கொள்ள அதை வரையாமல் முடியாது.

டாவின்சியின் இந்த ஓவியமும் ‘வடிவ ஒழுங்குடன்’ கூடிய காட்சிப் படுத்துதலுக்கான சிறந்த உதாரணம். எனக்குப் பிடித்த அம்சமாக நான் நினைப்பது, ஒட்டுமொத்த ஓவியத்திலும் கலந்துள்ள வண்ணங்களின் இருண்ட தன்மை.
உடல் தசைகள் மட்டுமே ஒளியூட்டப்பட்டிருக்கும். இந்தத் தன்மையை கொண்டுவரவே இந்த ஓவியத்தைச் செய்தேன்.

6 மாத காலம் லண்டனில் இருந்த போது என் முக்கால்வாசி நேரம் இந்த ஓவியக் கூடத்தில்தான் செலவானது, அங்குள்ள பணியாளர்கள் பழக்கமாகும் அளவிற்கு. உலகின் மிகச் சிறந்த ஓவியங்களை பார்க்க/படிக்க வாய்ப்பு கிடைத்தது.

மரபு ஓவியக் கலையில் இந்தியா எந்த நாட்டிற்கும் குறைந்தது அல்ல. ஆனால் ‘யதார்த்தவாத’ ஓவியத்தின் எல்லைகளை தொடாமலேயே அடுத்த கட்டமான நவீன ஓவியத்திற்கு இந்தியா நகர்ந்து விட்டதென்பது என் கருத்து.
அதுவும் இந்தியா போன்ற பல-கலாச்சார சூழலில், யதார்த்த பாணி ஓவியங்களுக்கான சாத்தியங்கள் கொட்டிக்கிடக்கின்றன. அவை இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் தேங்கிய நிலையிலேயே உள்ளன. இந்த லண்டன் ஓவியக்கூடம்
எனக்கு உணர்த்தியது இதைத்தான்.

யதார்த்த பாணி ஓவியங்களைச் செய்ய ‘கவனித்தல்’ என்பது மிக அத்தியாவசியம். ஓவியர்களுக்கான முக்கிய அறிவுரைகள் நிரம்பியது டாவின்சியின் குறிப்பேடுகள். ஓவியர்களுக்கு மட்டுமானதல்ல. அது ஒரு பல்துறைக்
களஞ்சியம். சில வாய்மொழிக் கதைகளையும் அவர் குறித்து வைத்துள்ளார்.

அவற்றுள் எனக்குப் பிடித்த அழகான குட்டிக் கதை ஒன்று:

“எறும்பொன்று தானிய விதையொன்றை உணவுக்காக சுமந்து சென்றது.

அந்த விதை, எறும்பிடம் இப்படி மன்றாடியது ‘தயவு செய்து என்னை விட்டுவிடு. ஒற்றை விதையான என்னை விடுவித்தால், நான் மண்ணில் விழுந்து முளைத்து என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான விதைகளை
என்னிலிருந்து உருவாக்கி உனக்குத் தருவேன்’.

எறும்பும் இந்தக் கோரிக்கையை ஏற்றது. அந்த விதை சொன்னதும் பின் நிகழ்ந்தது.”

உண்மைதான். ஒரு மரத்தின் பழங்களை எண்ணிவிட முடியும். ஆனால் ஒரு பழத்திற்குள் மறைந்திருக்கும் மரங்களை எண்ண முடியாது.

மண் சிலை

நான் முதன்முதலாக செய்து பார்த்த களிமண் சிலைதான் மேலுள்ள king kong.

“முதல் முயற்சின்னு சொல்ற, எதுனா சாமி சிலைய செய்யலாம்ல?” என்று நீங்கள் சொல்வீர்களானால், உங்களுக்கு ‘சிற்பியின் நரகம்’ என்ற புதுமைப்பித்தனின் கதையை பரிந்துரைக்கிறேன்.

களிமண் சிலை செய்வதற்கான முயற்சி 10 வயதிலிருந்தே ஆரம்பித்த ஒன்று. செய்த எதுவுமே இதுவரை உருப்படியாக வந்ததில்லை. இந்த குரங்குதான் முதல் வெற்றி(அப்டினு நினைக்கிறேன்!).

குரங்கில் ஆரம்பித்த இந்த முயற்சி மனிதன் வரை வர ஒரு பெரிய பரிணாமம் நிகழ வேண்டும் – பார்க்கலாம்.

கழுகுமலை கீழ பஜாரிலுள்ள சுண்ணாம்பு காளவாசல் பக்கத்தில் அமர்ந்து மண் சிலைகள் செய்வார் ஒரு பெரியவர்.
20 வருஷத்துக்கு முன்னாலே அவரை சுற்றி அமர்ந்து வேடிக்கை பார்ப்போம். நிறைய புராணக் கதைகள் சொல்வார். கடவுள்கள் அவர் கை வழியாக மண்ணுக்குள் இறங்குவார்கள்.
அவரது எந்தச் சிலையும் கதையின்றி இருந்ததில்லை. நாயொன்று செய்தார். அதற்கும் ஒரு கதை வைத்திருந்தார்.

5 ரூபாய் சேர்த்து வைத்து அவரிடம் ஒரு பெண் தெய்வச்சிலையை – யாரென்று ஞாபகமில்லை – வாங்கினேன். ஒரு ஆர்வத்தில் வாங்கி விட்டேன்.
பிறகுதான் பயம் வந்தது. எங்களுடையது கிறித்தவக் குடும்பம். ‘வீட்ல தெரிஞ்சா செத்தேன்’னு தோணுச்சு. எங்க வீட்டு காலி இடத்துல குழி தோண்டி புதைச்சு வச்சேன்.
அதுக்கப்புறம் அது மறந்தே போனது. அந்த சிலை என்னாயிருக்கும்னு தெரியல.

‘கி.முத்து’ னு ஒரு ஓவியர். அவரும் திறமையான சிற்பிதான். ஆனாலும் அந்த சுண்ணாம்பு காளவாசல் பெரிசுதான் பெரிசா மனசுல நிக்கிறார். அவர் இன்னும் அங்கு இருப்பாரான்னு தெரியல. இந்த குரங்கை அவர் ஒருவேளை பார்த்தால்,  இதுக்கும் ஒரு கதை சொல்லியிருப்பாரு.

இந்த மாதிரியான பெரிசுகளின் காலம் இனிமே கிடையாதுன்னு நினைக்கும் போதே, ஒருவித பயம் வருது.

கரிசல் பனை

© Ranjit

 

கந்தர்வனின் சிறுகதை ஒன்று. பெயர் ஞாபகமில்லை. 10 வருடத்திற்கு முன் படித்தது.

பனை மரத்தை நெஞ்சால் மோதியே சாய்த்து விடும் பலசாலியின் கதை அது.

கதைகள் பற்றி பல மூட நம்பிக்கைகள் இருந்தன. மாபெரும் நம்பிக்கைகளை எளிய ஏதோ ஒரு விஷயம் வந்து தகர்த்தெரியும். கந்தர்வனின் இந்தக்கதை செய்ததும் அதுதான்.
ரொம்ப நேரடியாக, மேதாவித்தனம் இல்லாமல், எளிமையாய் நிகழ்ந்து விட்டு சென்றது அந்த கதை.

‘படிமங்கள்’, ‘பொருண்மை’,  ‘ஊடாடும் கருத்தாக்கம்’ என்று சிறுகதை பற்றி யாராவது ஏதாவது பயமுறுத்தினால் அந்தக் கதையை படிக்கும் risk-ஐ நான் எடுப்பதில்லை.

கந்தர்வனின் கதையில் வரும் அந்த பலசாலியின் எளிமையான கம்பீரத்தை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. கரிசல் பனை போன்ற கம்பீரமான உடல் மொழி.

water colour மேல இப்ப கொஞ்சம் மோகம். பாதி ஓவியத்தை அந்த medium முடித்துவிடும். நம் வேலை பாதிதான்.