வெள்ளை நிறமே, வெள்ளை நிறமே!

© Ranjit

 

இங்கிலாந்து சென்ற போது பார்த்த நீர்வீழ்ச்சி – வேல்ஸில் உள்ளது.

இதன் பெயர் ‘Sgwd y Pannwr'(சத்தியமாக எனக்கும் இதை உச்சரிக்க தெரியாது)

மிகப்பெரிய காட்டை கடந்து இந்த நீர்வீழ்ச்சியை அடைந்தோம். மறக்க முடியாத ஒரு த்ரில்லிங் அனுபவம்.
காட்டிற்குள் செல்லும் அனுபவம், கோயிலுக்குள் செல்வதைப் போல –
உள்ளே செல்லும் போது இல்லாத ஏதோ ஒரு விஷயம் வெளியில் வரும்போது நம்மோடு ஒட்டிக்கொண்டதாய் தோன்றும்.
இந்த விளக்க முடியாத அனுபவத்தைத்தான் கடவுள் என்கிறோமோ?

மொத்த பச்சைக்கு நடுவில் தன்னை திமிராகக் காட்டிக் கொண்டிருந்த இந்த வெண்மையை எப்படியாவது வரைந்துவிட எண்ணி போட்ட படமிது.

‘வெண்மையை வரைய போதுமான அளவு வெளியை அதைச் சுற்றி வரைய வேண்டும்’* என்பது டாவின்சியின் அறிவுரை.

வெண்மையை ஓவியத்தின் பிரதானமாக கொண்டுவருவது சவாலான விஷயம். சீன, ஜப்பானிய ஓவியர்கள் இதில் வல்லவர்கள்.

ஏதோ நம்மால் முடிந்த அளவு முயற்சிக்கலாம் என நினைத்து ‘subtraction’ என்ற நீர் வண்ண ஓவிய முறையை முயற்சி செய்தேன்.

என்ன இருந்தாலும் பிம்பம் பிம்பம்தான். அசலின் அனுபவத்தை எப்போதும் அது கொடுப்பதில்லை.

*Leonardo Da Vinci’s notebooks, oxford world’s classics.

 

காதலர் கூடம்

© Ranjit

இது பெங்களூர்ல உள்ள library – சேஷாத்ரி ஐயர் மெமோரியல் ஹால் – கப்பன் பார்க்கில் உள்ளது.

கப்பன் பார்க் என்ற உடனே, காதலர்கள் மொய்க்கும் வனம்தான் எல்லோருக்கும் ஞாபகத்தில் வரும்.
இந்த building உள்ளே இருப்பவர்களும் ஒரு வகையில் காதலர்கள்தான். என்ன ஒரே வித்யாசம் என்றால், இவர்கள் மடியில் கிடப்பது புத்தகம்.

இங்கு, யாரும் புத்தகங்களை எடுத்து படித்து விடுவார்களோ என பயந்து பெரும்பாலான புத்தகங்களை எட்டாத, மிக உயர்ந்த அடுக்குகளிலேதான் வைத்திருப்பார்கள். ஒரே ஒரு ஏணி இருக்கும். அதையும் பணியாளர் அனுமதி/உதவியுடன் எடுத்து பயன்படுத்துவதற்குள், மொத்த நூலகக் கண்களும் நம் மீதே இருக்கும். இந்த தர்மசங்கடமான நிலையை தவிர்க்கவே, யாரும் மேல்தட்டு புத்தகங்களை விரும்புவதில்லை.(இதுதான் மேல்தட்டு மனநிலையோ?!)

ஒரு முறை, வரலாற்று புத்தக பகுதியின் கீழ் அடுக்குகளை தேடி விட்டு, பிடித்த மாதிரி எதுவும் கிடைக்காமல், மேல் அடுக்கை தேட நினைத்தேன். பணியாளரை ஏணிக்காக அழைக்க, ‘மேல என்ன புதையலா இருக்குது? இதே பழைய புத்தகந்தான் இருக்கும்.'(கன்னடத்தில்) என முணுமுணுத்துக் கொண்டே உதவினார்.

ஏறிச்சென்று கையில் எடுத்த புத்தகம் கோஹிநூர் வைரம் பற்றிய அருமையான வரலாற்றுப் புத்தகம்.

சுந்தர ராமசாமி அவர்கள் சொன்னதாக ஜெயமோகன் தன் தளத்தில் குறிப்பிட்ட விஷயம் அற்புதமான ஓன்று:

‘புத்தகங்களை நாம் தேடும் போது, புத்தகங்களும் நம்மை தேட ஆரம்பிக்கும்.’

நித்யஜோதி

light

© Ranjit

கல்லூரியில் படிக்கும் போது, தமிழ்த்துறை வெளியிட்ட ‘சுடர்’ என்ற புத்தகத்தின் அட்டைப் படத்திற்காக நான் வரைந்த படமிது.

எந்த எண்ணத்தில் இதை வரைந்தேன் என்பதெல்லாம் இப்போது மறந்து போய்விட்டது. இப்படத்திற்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லை என்றாலும், எனது சிறு வயதில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன். இந்த சுடரைப் பார்க்கும் போது இப்பொது அச்சம்பவம்தான் ஞாபகத்தில் வருகின்றது.

பள்ளியில் படித்துக் கொண்டிருந்த சமயம் அது. எங்கள் ஊர் மலையில் ஒரு சமணக் குகை உள்ளது. அதற்குள் மற்றொரு சிறிய குகையும் உண்டு. அந்தச் சிறிய குகைக்குள் என்றுமே அணையாத நித்யஜோதி இருப்பதாக அந்த பெரிய குகையில் வசித்து வந்த சாமியார் ஒருவர் சொன்னார்.
அவர் பெயர் தெரியவில்லை. மலையில் குடியிருப்பதால் ஆகுபெயராய் அவரை மலை சாமி என அழைக்கலாம். அவர் தீவிர வள்ளலார் பக்தர். வடலூரில் உள்ளதைப் போல இங்கு அந்த நித்யஜோதியை ஏற்றி காத்துவருவதாக கூறினார்.
அந்த சமணக் குகை சைவக் குகையாய் மாறியிருந்தது.
நிறைய விஷயங்களை விவாதிக்கும் அளவு அவரோடு எனக்கு நல்ல பழக்கம் ஏற்பட்டது. நித்யஜோதியை பார்க்க வேண்டுமேன்ற என் ஆசையை சொன்னேன். நாளை வா பார்க்கலாம் என்றார்.

‘எலேய் பட்ட.. நான் நித்யஜோதிய பாக்கப் போறேன் வர்றியா’ என என் நண்பன் பட்டமுத்துவை கேட்டேன்.

‘ஆளு எப்டி இருக்கும்!!’ன்னு அப்பாவியா கேட்டான் அவன். முன்கதை அத்தனையும் விளக்க, ‘வர்றேன்’னான்.

சாயங்கால வேளையில், கிளம்பினோம். மலையேறினோம். குகையை அடைந்தோம். எங்களோடு பேசினார் மலை சாமி.

‘நித்யஜோதிய பாக்க உள்ளே போகணும்னா.. சுத்த சைவமா இருக்கணும்’. பட்டமுத்துவை பார்த்து ‘சைவமா? அசைவமா?’ எனக் கேட்டார்.

ஏதோ சாப்பாடு கொடுப்பார் போல என எண்ணி, ‘ எதுனாலும் பரவாயில்ல சாமி’ என்றான் பட்ட. நான் signal செய்ய, சுதாரித்துக் கொண்டு, ‘சுத்த சைவம்’ என்றான்.

‘நீ கிறிஸ்டியனாச்சே நீயுமா சைவம்?’ என என்னைப் பார்த்து கேட்டார்.

‘நாங்க கிறிஸ்டியனா இருந்தாலும், பரம்பரை பரம்பரையா எங்க குடும்பம் சைவம் சாப்பிடும் பழக்கம் உள்ள குடும்பம்’ என்றேன்.

வள்ளலார் பாடல் ஒன்றை பாடிவிட்டு எங்களை நித்யஜோதி குகைக்குள் செல்லுமாறு சைகை செய்தார். உள்ளே நுழையும் போது சத்தமாக தும்மினார் மலை சாமி.

பயந்தே போனோம். பட்ட முத்துவுக்கு வேர்த்து விறுவிறுத்தது.

குனிந்து தவழ்ந்து உள்ளே சென்றோம்.

வெளிச்சத்திலிருந்து இருளுக்குள் சென்றதால், அங்கு ஒரே இருட்டு. ‘வேண்டாம்ல.. போயிருவோம்’ என்றான் பட்டமுத்து.

கொஞ்சம் கொஞ்சமாக உள்ளிருந்த அந்த ஜோதி, குகைக்குள் ஒளி நிரப்பியது. அருகில் ஒரு சிவலிங்கம்.

‘கதைல வர்ற மந்திரவாதி மாதிரி, குகையை இந்த சாமியார் கல்லால மூடி நம்மள உள்ளேயே அடைக்கப் போறாரு. அப்புறம் நர பலிதான். செத்தோம்.’ பயமுறுத்தினான் பட்டமுத்து.

எனக்குள்ளும் கொஞ்சம் பயம் ஏறிக்கொண்டது.

மலை சாமி திரும்பவும் சத்தமாக தும்மினார். குகைக்குள் ஓங்கி எதிரொலித்தது அந்த சத்தம். பட்டமுத்து அலறிவிட்டான்.

உடனேயே குகையை விட்டு வெளியே வந்தோம்.

‘என்னப்பா.. ஏதோ அலர்றாப்ல சத்தம் கேட்டுதே? பயந்திட்டீங்களா? இந்தாங்க தண்ணிய குடிங்க’ என்று சொல்லிக்கொண்டே தண்ணீர் கொடுத்தார் மலை சாமி.

தண்ணீர் குடித்தவுடன் எனக்கு வந்த ஏப்பத்தில் மதியம் சாப்பிட்ட கோழிக்கறி வாசனை வந்தது.

தொல்லியல் துறை பின்பொரு நாள் அவரை அங்கிருந்து காலி செய்தது. இப்போது அந்த குகை மூடிக் கிடக்கிறது. குகை எங்கும் நித்ய இருள்!

புரிந்தவன் ஆட புவனங்கள் ஆடும்

shiva_koothu

© Ranjit

 

திருமந்திரத்தின் ஒன்பதாவது தந்திரத்தில் பேசப்படும் பல விஷயங்களில் முக்கியமானது திருக்கூத்து தரிசனம். சிவனின் ஐவகை நடனங்களையும் சிலாகித்துச் சொல்லும் 82 பாடல்கள் அடங்கிய பகுதியிது.

கீழுள்ள பாடல் மிகப் பெரிய காட்சியொன்றை சிவக் கூத்தின் அனுபவத்தோடு என் மனதுக்குள் விரித்துக் காட்டியது.

ஆதிபரன்ஆட அங்கைக் கனலாட
ஓதுஞ் சடையாட உன்மத்த முற்றாடப்
பாதி மதியாடப் பாரண்ட மீதாட
நாதமோ டாடினான் நாதாந்த நட்டமே.  2751 -திருமந்திரம், ஒன்பதாந் தந்திரம் – பொற்றில்லைக் கூத்து.

சிவன் தன் கையிலேந்திய நெருப்பாட, தன் தலையின் சடைப்பின்னலாட, ஒரு வகை மயக்க நிலையிலாடுகிறான். தலையில் குடிகொண்டுள்ள பிறை நிலா ஆட, இப்பேரண்டத்தின் மீது, நாதத்தோடு நடனம் புரிகிறான்.

இதைப் படித்த உடன் உருவான மனச்சித்திரத்தை, மேசையின் மேலிருந்த சில Reynolds refills – கொண்டு வரைந்தேன். நான்கு ஆண்டுகளுக்கு முன் வரைந்த இந்தப் படத்தை, தற்செயலாக என் கணினியில் உள்ளவற்றை backup செய்யும் போது பார்க்க நேர்ந்தது. இதன் hard copy என் வசம் இப்போது இல்லை. இந்தியர்களுக்கு கலையின் மீது இருக்கும் ஆர்வம், அதை பாதுகாப்பதில் இருப்பதில்லை. எனக்கும் அந்த பாரம்பரிய ரத்தம்தானே ஓடுகிறது.

இந்த ஓவியத்தில் platonic solids என அழைக்கப்படும் ஐந்து வடிவங்களுள், மூன்று வடிவ கணித உருவங்களை பயன்படுத்தியுள்ளேன்:
1. Tetrahedron (முதல் வலது கையில் உள்ள பிரமிடு வடிவம்)
2. Dodecahedron (சிவன் காலூன்றி நிற்கும் வடிவம்)
3. Cube/hexahedron (பாம்பு சுற்றியுள்ள கனசதுரம்)

ப்ளேட்டோ, முதல் வடிவத்தை நெருப்புக்கும், இரண்டாவதை பிரபஞ்சத்தை குறிக்கவும், மூன்றாவதை பூமிக்கு குறியீடாகவும் சொல்கிறார். வடிவ கணிதவியலில் அப்போது எனக்கிருந்த ஆர்வத்தால் இந்த மூன்று platonic solids – ஐ சிவக் கூத்தின் குறியீடுகளாக இந்த ஓவியத்தில் புகுத்திப் பார்த்தேன்.

இது போன்ற ஓவியங்களைச் செய்யும் போதும் உன்மத்த நிலையை அடைய முடியுமென உணர்ந்தேன்.