உயிர்ச் சிற்பங்கள்

Dance

© Ranjit, multiple medium

 

‘திருஷ்டி நடனத் திருவிழா’ என்ற நிகழ்வு கடந்த 7 வருடங்களாக பெங்களூரில் கமுக்கமாக நிகழ்ந்து வரும் கலைப் புரட்சி என்றே சொல்லலாம்.

நடனம் குறித்த விஷய ஞானம் கூட அற்ற நிலையில், நான் எழுதப் போவது என்ன? குறைந்தபட்சம் ஒரு கலையில் ஓரளவு தேர்ச்சி பெற்ற எவரும் இன்னொரு கலை வடிவத்தை எளிதில் உள்வாங்க முடியும் என்பது என் சொந்தக் கருத்து. வடிவங்கள் மீது தீராக் காதல் கொண்ட ஓவிய மனது, நடனத்தில் நிகழும் தொடர் வடிவ மாற்றங்களால் லயித்துப் போவதியல்பே. இந்த நிலையிலிருந்தே இதை எழுதுகிறேன்.

சிவகாமியின் சபதத்தில், சிவகாமியின் ஆட்டம் குறித்து வரும் மிக நீண்ட வருணனையை முதன்முதலாய் படித்த போது, கல்கி தன் பாணியில் பக்கத்தை நிரப்பியுள்ளார் என்றே தோன்றியது.
ஆனால் அதே வருணனைகளை இப்போது படிக்கும் போது போதாதென்றே தோன்றுகிறது. மரபான நிகழ்த்து கலைகளின் பலம் இது. அந்த மரபுக் கலை தாண்டி வந்த நூற்றாண்டுகளை ஒட்டு மொத்தமாக நம் கண் முன்னே ஒரு நொடியில் தரிசிக்கும் போது வரும் பிரமிப்பு சொல்லிப் புரிய வைக்க முடியாதது.

சிறந்த நவீன கலை வடிவங்களும் மரபின் போதாமைகளை நிரப்புவதாகவே இருக்குமேயன்றி, மரபை சுத்தமாக புறக்கணிப்பதாக இருப்பதில்லை.

ஒவ்வொரு மரபுக் கலைஞனும், ஆயிரமாயிரம் முன்னோர்களை தன் கருவில் என்றென்றைக்குமாய் சுமக்கிறான். அக்கலை நிகழ்த்தப்படும் போதெல்லாம் ஒரு சுகப்பிரசவம் நடந்து முடிகிறது.

‘ஷாமா க்ருஷ்ணா’வின் குச்சுப்புடியும்,  ‘மதுலிதா மொகபத்ரா’வின் ஒடிசியும் 7வது ‘திருஷ்டி நடனத் திருவிழா’வில் என்னைக் கவர்ந்த நடனங்கள். இசை, ஒளி என அரங்கக் கலையின் அத்தனை சாத்தியங்களும் நிறைவானதாக இருந்தது.

‘ஷாமா க்ருஷ்ணா’வின் குச்சுப்புடி – தன் கணவன் பெயர் கேட்ட தோழிக்கு பாமா கூறும் பதிலாக வரும் நகைச்சுவை கலந்த நடனத்தொகுப்பு.
பழைய புராணக் கருவாக இருந்தாலும், எக்கச்சக்கமான உணர்ச்சிகளைக் கொட்டி நிகழ்த்தப்பட்ட மிக அருமையான நிகழ்வு.

‘மதுலிதா மொகபத்ரா’வின் ஒடிசி – அர்த்தங்கள் கடந்த abstract வகையிலமைந்த ஒடிசியாட்டம்.
கணக்கற்ற நேர்த்தியான posture-கள் நிறைந்த ஆட்டம். ஒவ்வொன்றும் கோயில் சிற்பங்களை நினைவூட்டியது.

‘நாடகமகளிர்க்கு நன்கனம் வகுத்த
ஓவியச் செந்நூல் உரைநூற் கிடக்கையும்
கற்றுத் துறைபோகிய பொற்றொடி நங்கை’

சிலப்பதிகாரத்தில் வரும் இந்தக் குறிப்பு நடன மங்கையர்கள் ‘ஓவியச் செந்நூல்’ மூலமும் நடன நுட்பங்களை கற்றதாகச் சொல்கிறது. ஷாமாவும், மதுலிதாவும் ஓவியச் செந்நூல் கற்றிருப்பார்களோ என எண்ண வைத்தது அவர்களின் ஓவிய நேர்த்தியிலான நிகழ்த்து முறை.

நுட்பங்கள் நிறைந்த இது போன்ற கலைகளையும், நாட்டார் கலைகளையும் உதறிவிட்டு, எந்த வகைக்குள்ளும் அடங்காத சினிமா நடனக் கலைக்கு ஊடகங்களும், பெற்றோர்களும் அதன் தகுதிக்கு மீறிய முக்கியத்துவம் தருவது ரசனைக் கோளாரின் உச்சம்.

Advertisements

One thought on “உயிர்ச் சிற்பங்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s