உயிர்ச் சிற்பங்கள்

Dance

© Ranjit, multiple medium

 

‘திருஷ்டி நடனத் திருவிழா’ என்ற நிகழ்வு கடந்த 7 வருடங்களாக பெங்களூரில் கமுக்கமாக நிகழ்ந்து வரும் கலைப் புரட்சி என்றே சொல்லலாம்.

நடனம் குறித்த விஷய ஞானம் கூட அற்ற நிலையில், நான் எழுதப் போவது என்ன? குறைந்தபட்சம் ஒரு கலையில் ஓரளவு தேர்ச்சி பெற்ற எவரும் இன்னொரு கலை வடிவத்தை எளிதில் உள்வாங்க முடியும் என்பது என் சொந்தக் கருத்து. வடிவங்கள் மீது தீராக் காதல் கொண்ட ஓவிய மனது, நடனத்தில் நிகழும் தொடர் வடிவ மாற்றங்களால் லயித்துப் போவதியல்பே. இந்த நிலையிலிருந்தே இதை எழுதுகிறேன்.

சிவகாமியின் சபதத்தில், சிவகாமியின் ஆட்டம் குறித்து வரும் மிக நீண்ட வருணனையை முதன்முதலாய் படித்த போது, கல்கி தன் பாணியில் பக்கத்தை நிரப்பியுள்ளார் என்றே தோன்றியது.
ஆனால் அதே வருணனைகளை இப்போது படிக்கும் போது போதாதென்றே தோன்றுகிறது. மரபான நிகழ்த்து கலைகளின் பலம் இது. அந்த மரபுக் கலை தாண்டி வந்த நூற்றாண்டுகளை ஒட்டு மொத்தமாக நம் கண் முன்னே ஒரு நொடியில் தரிசிக்கும் போது வரும் பிரமிப்பு சொல்லிப் புரிய வைக்க முடியாதது.

சிறந்த நவீன கலை வடிவங்களும் மரபின் போதாமைகளை நிரப்புவதாகவே இருக்குமேயன்றி, மரபை சுத்தமாக புறக்கணிப்பதாக இருப்பதில்லை.

ஒவ்வொரு மரபுக் கலைஞனும், ஆயிரமாயிரம் முன்னோர்களை தன் கருவில் என்றென்றைக்குமாய் சுமக்கிறான். அக்கலை நிகழ்த்தப்படும் போதெல்லாம் ஒரு சுகப்பிரசவம் நடந்து முடிகிறது.

‘ஷாமா க்ருஷ்ணா’வின் குச்சுப்புடியும்,  ‘மதுலிதா மொகபத்ரா’வின் ஒடிசியும் 7வது ‘திருஷ்டி நடனத் திருவிழா’வில் என்னைக் கவர்ந்த நடனங்கள். இசை, ஒளி என அரங்கக் கலையின் அத்தனை சாத்தியங்களும் நிறைவானதாக இருந்தது.

‘ஷாமா க்ருஷ்ணா’வின் குச்சுப்புடி – தன் கணவன் பெயர் கேட்ட தோழிக்கு பாமா கூறும் பதிலாக வரும் நகைச்சுவை கலந்த நடனத்தொகுப்பு.
பழைய புராணக் கருவாக இருந்தாலும், எக்கச்சக்கமான உணர்ச்சிகளைக் கொட்டி நிகழ்த்தப்பட்ட மிக அருமையான நிகழ்வு.

‘மதுலிதா மொகபத்ரா’வின் ஒடிசி – அர்த்தங்கள் கடந்த abstract வகையிலமைந்த ஒடிசியாட்டம்.
கணக்கற்ற நேர்த்தியான posture-கள் நிறைந்த ஆட்டம். ஒவ்வொன்றும் கோயில் சிற்பங்களை நினைவூட்டியது.

‘நாடகமகளிர்க்கு நன்கனம் வகுத்த
ஓவியச் செந்நூல் உரைநூற் கிடக்கையும்
கற்றுத் துறைபோகிய பொற்றொடி நங்கை’

சிலப்பதிகாரத்தில் வரும் இந்தக் குறிப்பு நடன மங்கையர்கள் ‘ஓவியச் செந்நூல்’ மூலமும் நடன நுட்பங்களை கற்றதாகச் சொல்கிறது. ஷாமாவும், மதுலிதாவும் ஓவியச் செந்நூல் கற்றிருப்பார்களோ என எண்ண வைத்தது அவர்களின் ஓவிய நேர்த்தியிலான நிகழ்த்து முறை.

நுட்பங்கள் நிறைந்த இது போன்ற கலைகளையும், நாட்டார் கலைகளையும் உதறிவிட்டு, எந்த வகைக்குள்ளும் அடங்காத சினிமா நடனக் கலைக்கு ஊடகங்களும், பெற்றோர்களும் அதன் தகுதிக்கு மீறிய முக்கியத்துவம் தருவது ரசனைக் கோளாரின் உச்சம்.

நினைவின் நிறம் பச்சை

Green

© Ranjit, Soft pastel on Paper

ஞ்சை மாவட்டத்தில் பயணித்த போது, வாகன ஜன்னல் வழியே பார்த்து ரசித்த பசுமைப் பரப்பை வரைந்து பார்த்த படமிது.

காவேரியைப் பற்றி ஒரு பயண நூலில் இவ்வாறு குறிப்பு வருகின்றது:”நூற்றுக்கணக்கான தலைமுறைகளையும், பண்பாடுகளையும் மறைய மறையப் பார்த்துக் கொண்டு, தான் மட்டும் நிற்கும் ஒன்றைப் பார்த்தால் நமக்கு மலைக்கத்தான் செய்கிறது”. அற்புதமான நீர்வளம், தன்னைச் சார்ந்த மனிதனை இயற்கையோடு கட்டிப் போட்டு வைத்துள்ளதாகவே தோன்றுகிறது. அதீத நாகரீகம் இந்த மனிதர்களை காயப்படுத்திவிடாமல், காவேரி இன்றும் இவர்களை காத்துக் கொண்டுதான் இருக்கிறாள். இதற்கு நேர்மாறாக நீர்வளம் குறைந்த வளமற்ற பிரதேசங்கள், தனது மனிதர்களை தன்னோடு தக்கவைக்கமுடியாமல் நகரங்களுக்கு கொடுத்துவிட்டு தனிமைப்படுவதாகத் தோன்றுகிறது.

எங்கள் ஊரும் வறண்ட கரிசல் பிரதேசமே. என்றாலும், சில season-கள் பசுமையை போர்த்திக் கொள்ளும். அப்படி பசுமையான தருணங்களில், வயல் வெளி கடந்து பொன்வண்டு பிடிக்க சிறு வயதில் செல்வதுண்டு. இந்த mission- ல் பூச்சிக் கடி இன்றியோ முள் குத்தல் இன்றியோ திரும்ப முடியாது. பசுமையை ரசித்துக்கொண்டே வருவதால் இந்த வலிகள் தெரிவதில்லை. இன்னொரு வகை ரசித்தலும் உண்டு. ஊரின் மையத்திலுள்ள மலையின் மீதேறி, ஒரே canvas-ல் மொத்த பசுமையையும் ரசிப்பது ஒரு சுகானுபவம். சிறு வயதில் அடிக்கடி இந்த அனுபவத்திற்காய் மலையேறுவதுண்டு.

மலையில் ஒரு ஐயனார் கோயிலும் உண்டு, பழமை ஊறிய, மற்ற கிராமத்து ஐயனார் சிலை போன்றது அல்ல எங்கள் ஊர் ஐயனாரின் சிலை. காமெடி நடிகர் செந்திலுக்கு கையில் ஆயுதத்தை கொடுத்தது போன்ற சாயல் அந்த ஐயனார் சிலையில் தெரியும். நண்பனோடு மலையேறிய ஒரு நாள், ஐயனாரின் குதிரை மேல் அமர்ந்து கொண்டு, அந்த செந்தில் ஐயனாரை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தேன். கோபமடைந்த என் நண்பன் சொன்ன விஷயம் என்னை இன்றும் பயமுறுத்துவது.

‘ஐயனார் குதிரைல யாராச்சும் உக்காந்தா, அந்த ஆளை ராத்திரியில ஐயனார் வேட்டைக்கு போறப்ப, கொடூரமா.. துரத்தித் துரத்தி அருவாளால வெட்டிக் கொன்னுடுவாரு. நீ வேற கிறிஸ்டியனா போய்ட்டே.. சொல்லவே வேண்டாம்’ என்றான் என் நண்பன். பயத்தைக் காட்டிக்கொள்ளாமல் மெதுவாக குதிரையை விட்டு இறங்கிக்கொண்டேன். கொஞ்சம் உடம்பு நடுக்கம் கொடுத்தது. பசுமையை ரசிப்பதாவது மண்ணாவது என்று உடனே மலையிறங்கினேன்.

அன்று இரவு – நான் கண்ட கனவில், நடிகர் செந்தில் என்னை துரத்தித் துரத்தி அரிவாளால் வெட்டிக் கொன்றார்!!

உண்மையிலேயே பச்சைப்பசுமையான நினைவுகள்தான்.