கதை சொல்லி

paramartha guru

© Ranjit, Water colour and ink on Paper

ஒரு நல்ல Graphic novel செய்து பார்க்க வேண்டுமென்ற ஆசையால் அரையலுற்று ஆண்டுகள் ரெண்டு ஓடியும், எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இது போன்ற பெரிய வேலைகள் முறையான பயிற்சி இன்றி சாத்தியமில்லை என்பதால், ஒன்றிரண்டு எண்ணிக்கையில் குட்டியாக comics வடிவில் எதையாவது முதலில் செய்து பார்க்க வேண்டுமென எண்ணியிருந்தேன். சொந்தமாக content பற்றி யோசித்து நேரத்தை சாப்பிட விருப்பமில்லை. பரமார்த்த குரு கதையை பயிற்சி செய்ய முடிவானது. இந்த முயற்சிகள் எப்படிப் போகுமெனத் தெரியாது. new year resolution – கள் போல ஆகாமல் இருந்தால் சரி.

பரமார்த்த குரு கதைக்காக செய்து பார்த்த character design பக்கங்களில் ஒன்றுதான் மேலுள்ளது.

வாய்மொழிக் கதைகளும், கற்பனையும் நேர்த்தியாக கலந்து கோர்வையாக்கப்பட்டது பரமார்த்த குரு கதை. வீரமாமுனிவரின்(1680-1746) வெற்றிகரமான முன்னோடி முயற்சி. பல வாய்மொழிக் கதைகள் போலவே, இந்தக் கதைகளும், நாடு, மொழி தாண்டி பயணித்தவை. ப.கு.க – ல் உள்ள ‘ஆற்றைக் கடந்த கதை’ மட்டும், பெஙகாளி, ஹிந்தி, கோந்தி, காஷ்மீரி, பஞ்சாபி, தென்னிந்திய மொழிகள் மற்றும் டச்சு, ஆங்கிலம், ஃபின்னிஷ், ஃப்ரென்ச், ஐரீஸ், ஜெர்மன், ரஷ்யன் போன்ற அத்தனை மொழிகளிலும் வழங்கப்பட்ட வாய்மொழிக் கதை.

ஒரே கதை பல கதை சொல்லிகளைத் தாண்டி வரும்போது பல கதைகளாய் பிறக்கிறது. வாய்மொழிக் கதைகள் யுகந்தோறும் மனிதர்களால் சுமந்துவரப்பட்டுள்ளது. இந்தச் சுமைகள் கொஞ்சம் கொஞ்சமாக இறக்கி வைக்கப்படுவதால், இன்று அவற்றை பதிப்பிக்கும் கட்டாயம் வந்துள்ளது. ‘ஒரு புளியமரத்தின் கதை’யில் வரும் தாமோதர ஆசானைப் போன்ற கதைசொல்லிகள் அந்தக் கதையில் வருவதைப் போலவே, என்ன ஆனார்கள் எனத் தெரியாமலேயே காணாமல் போய்விட்டார்கள்.

பதிப்பிக்கப்ப்ட்டுள்ளவற்றுள் மிகச் சிறந்ததாக நான் கருதும் இரண்டு:

1. Folk Tales from India – A K Ramanujan: Penguin Books (இந்தியா முழுவதிலும் இருந்து தொகுக்கப்பட்ட 100- க்கும் மேற்பட்ட வாய்மொழிக்கதைகள் அடங்கிய நூல்)
2. மறைவாய் சொன்ன கதைகள் – கி.ராஜநாராயணன், கழனியூரன் – உயிர்மை பதிப்பகம்.(நம்மோடு வாழ்ந்து வரும் பாலியல் வாய்மொழிக்கதைகளுள் தொகுக்கப்பட்ட 100 கதைகள் அடங்கிய நூல். சமூகத்தில் அடக்கி ஒடுக்கப்பட்டுள்ள பாலுணர்வுகள் கதைகளின் வழியே உடைத்துக் கொண்டு வெளி வருவதை இக்கதைகளில் காணலாம். பாலியல் கல்வி செயல்படுத்தப்பட்டால் இந்நூலை துணைப்பாடமாக வைக்கலாம் என்கிறார் கி. ரா. )

“consider me the latest teller and yourself the latest listener, who in turn will retell the tale” – ஏ கே ராமானுஜன், மேற்சொன்ன நூலின் முன்னுரையில்.

 

நிழல் சுகம் காணும் நாய்கள்

Street Dog

© Ranjit, charcoal on Paper

பெங்களூரில், எங்கள் தெருவில் சுற்றித் திரியும் தெரு நாயிது.

எது தெரு நாய் என்று அழைக்கப்பட தகுதியுள்ள நாய்? வாக்கிங்(காலைக் கடனுக்கு) அழைத்துச் செல்ல தனக்கென ஒரு எஜமானனும், ஒரு இடமும், ஒரு சோற்றுக் கிண்ணமும் இல்லாதது; கடவுகளில், புதர்களில் கணக்கின்றி குட்டிகளை பிரசவிப்பது; சுவரோர நிழலில் சுகமாய் தூங்குவது; குடல் சிதறி தார் சாலையில் ஜீவனிழந்து கிடப்பது; இவையெல்லாம் தெரு நாயின் சில லட்சணங்கள்.

இந்த நாயும், இந்த category-ல் வரும் நாய்தான். மற்ற தெரு நாய்களை விட வயதில் மூத்த மிகச் சாதுவான நாயிது. எல்லாக் கடமையிலிருந்தும் விடுபட்டு, சாவுக்கு காத்திருக்கும் பெரிசுகள் மௌனமாய் நடமாடித் திரியும் மனநிலையை, இந்த நாயிடம் காண முடியும். இந்த நாய்க்கு வேலை எதுவும் இல்லாவிட்டால்(!!), தூங்குவதற்கு எங்கள் வீட்டு மொட்டை மாடிக்கு வந்து விடும். syntax tank-ற்கும், சுவருக்கும் உள்ள இடைவெளியில், tank-ல் உள்ள தண்ணீரின் குளுமையை ரசித்தபடியே ரம்மியமாகத் தூங்கும். அருகில் யாராவது வந்தால், ஒற்றை கண்ணை லேசாகத் திறந்து பார்த்துவிட்டு மூடிக் கொள்ளும்.

தெருவில் சுற்றித் திரியும் போது, சண்டையிட்டுக் கொள்ளும் மற்ற நாய்கள் இந்த நாயை தொந்திரவு செய்வதில்லை. இதுவும் அதுகளை கண்டுகொள்வதில்லை – அன்றாட வாழ்விலிருந்து முழுமையான விடுபடல்.

“என்னத்தைச் சாதிக்க இவ்வளவு குரைத்தல்கள், இவ்வளவு சண்டைகள். செத்தால் குப்பை மேட்டிலோ, சாக்கடையிலோ தூக்கி வீசப் போகிறார்கள். அற்ப நாய்களே !” என்று அந்த நாய் மனதில் நினைத்துக் கொள்வதாய் எனக்குத் தோன்றும்.

எனக்குப் பிடித்த ‘நாய்’ என்ற ஞானக்கூத்தனின் கவிதையில் ஒரு வரி இது:

‘……

சங்கிலித் தொடராய்க் குரைத்திடும் நாய்களில்

கடைசி நாயை மறித்துக்

காரணம் கேட்டால் என்னத்தைக் கூறும்?’

மனித சமூகத்தையே திட்டி உமிழ்ந்து தள்ளும் charles bukowski-ன் ‘white dog’ என்ற கவிதையில், ஒரு நாயின் மேல் அவர் கொள்ளும் மெல்லிய கருணையில், உண்மையான மகாகவிஞனின் ஆத்மாவை தரிசிக்க முடியும்.

இந்தத் தெரு நாய்களோடு ஒப்பிடும் போது வளர்ப்பு நாய்களின் பாடுதான் பரிதாபமானது.

கி. ராஜநாராயணன் இப்படிச் சொல்கிறார்: “நாய்களின் வாழ்க்கையில் இப்படி இந்த மனுசப்பயல் ‘பூந்து’ விளையாடுவது நல்லா இல்லைதான்; என்ன செய்ய. மனுசனுக்கு இதெல்லாம் வேண்டியதிருக்கிறது”.

ஆதி ஓவியன்

“[when standing before the mouth of the cave, ] suddenly two things arose in me.. fear of the menacing darkness.. [and] desire to see if there was any marvelous thing within” – Leonardo Da Vinci (in his notebooks).

“None of us could paint like that” – Pablo Picasso (after visiting Altamira cave paintings)

Altamira Bison

© Ranjit, Water colour on Paper

 

மேலுள்ள ஓவியம், புத்தகத்திலிருந்து பார்த்து வரையப்பட்டது. இதன் அசல், ஸ்பெயின் தேசத்து அல்டாமிரா குகையிலுள்ளது. ஒரு முறையேனும், நேரில் பார்த்து விட வேண்டும் என்பது என் ஆசை.

ஏறக்குறைய 15,000 வருடப் பழமையான, வரலாற்றுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த இந்த ஓவியம் மிகத் தனித்துவமானது. வரலாற்றுப் புத்தகங்களிலும், தொல்பொருள் ஆராய்ச்சிக் கட்டுரைகளிலும் இதுவரை நாம் பார்த்துவந்துள்ள கோடுகளாலான, தட்டையான உருவங்களையே ஆதி ஓவிய பாணி என எண்ணியிருப்போம். அல்டாமிரா ஓவியத் தொகுப்பில் உள்ள ஓவியங்கள் இதற்கு விதிவிலக்கானவை. ஓவிய நுட்பத்தையும், சிற்பத்தின் முப்பரிமாண அம்சத்தையும் ஒருங்கே கொண்டுள்ள ஓவியங்கள் இவை. மகாபலிபுரத்து புடைப்புச் சிற்பத் தொகுப்பில் உள்ள யானையின் மீது கருப்பு வண்ணம் தீட்டினால் எப்படி இருக்குமோ அந்த மாதிரியான ஒவியஙள்தான் இந்த அல்டாமிராவில் உள்ளவை. ஒரே வித்தியாசம் – மகாபலிபுரத்து புடைப்பு உருவங்கள் சிற்பியால் உருவாக்கப்பட்டவை. அல்டாமிராவில் உள்ளவை இயற்கையான பாறை அமைப்புகள்(Natural reliefs). இந்த இயற்கையான பாறை அமைப்புகளில் எந்த உருவங்களை எந்த மாதிரியாக வரைந்தால் பொருத்தமாக இருக்கும் எனத் திட்டமிட்டு வரைந்ததில்தான் அந்த ஆதி ஓவியன் பிரமிக்க வைக்கிறான். அதிலும் குறிப்பாக, மேலுள்ள ஒவியத்தில் ஒரு படி மேலே சென்று, அந்த மிருகத்தின் மிக நுட்பமான உடல் பாவனையை வடிவிலும் வண்ணத்திலும் கொண்டு வருவதில் வெற்றி கண்டுள்ளான் அந்த ஆதி ஒவியன்.

Altamira line

© Ranjit, ink on Paper

அடிக்கடி நான் எனது sketch book- ல் அல்லது ஏதாவது துண்டுக் காகிதத்தில் தீட்டிப் பார்த்துக் கொள்ளும் ஓவியமிது. அப்படிச் செய்யும் போதெல்லாம், நிறைய விஷயங்கள் மனதில் அலைந்து கொண்டிருக்கும். இதை வரைவதில் எனக்கு ஒரு தேவை இருப்பது போல, இதன் original creator – க்கு இதை வரைவதில் என்ன தேவை இருந்திருக்கும்? அவன் வாழ்ந்த சூழலை அவனே அவனுக்காக தீட்டிக் கொண்டானா? அல்லது சடங்கு, பலி போன்ற சமூகத் தேவைகள் இருந்தனவா? தன்னைக் காட்டிலும் தன்னைச் சூழ்ந்துள்ள விலங்குகளுக்கு ஏன் முக்கியத்துவம் தர வேண்டும்? தான் வசிக்கும் இடத்திலுள்ள பொருட்கள் வழியாக, அறையில் மாட்டி வைத்துள்ள படங்களின் வழியாக, வலைத்தளங்கள், சமூக வலைத்தளங்கள் மூலமாக, தன்னை தனது நம்பிக்கைகளை வெளிப்படுத்திக்கொள்ளும் இன்றைய மனிதனின் குணம், அந்த ஆதி மனித குணங்களின் தொடர்ச்சிதானா? இவ்வாறு மனிதன் தன்னை ஏன் வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும்? இப்படி கேள்விகள் நீண்டு கொண்டே இருக்கும். ஒவ்வொரு முறையும், பதில்கள் மாறிக் கொண்டே இருந்தாலும், இந்தக் கேள்விகள் மட்டும் மாறுவதேயில்லை.

இந்த ஓவியத்திலுள்ள அழிந்து போன இனத்தைச் சேர்ந்த மிருகம், அல்டாமிராவில் மட்டும் இன்றும் உயிருடன் உள்ளது – அந்த ஆதி ஓவியனால்.

 

குகை ஓவியங்கள் பற்றியும், ஸ்பானிய குகை ஓவியங்கள் பற்றியும் அறிந்து கொள்ள உதவும் நூல்கள்:
1. The Mind in the Cave – David Lewis-Williams: Thames & Hudson publication (மனித அறிவையும், குகை ஓவியங்களையும் ஒப்பிட்டு ஆராயும் புத்தகமிது)
2. The Cave of Altamira – Pedro A. Saura Ramos: Harry n. Abrams inc. publication (அல்டாமிராவில் உள்ள அனைத்து வண்ண ஒவியங்களுடன், அல்டாமிராவின் கண்டுபிடிப்பு முதல் அதன் பாதுகாப்புச் சிக்கல்கள் வரை அலசும் விரிவான நூல்)

எனது ஓவியக் குறிப்புகள்!

© Ranjit

எனது ஓவியத்தையும் அதன் பின்னணியையும் பதிவு செய்யவே இத்தளம்.

பெரும்பாலான ஓவியங்கள் பயணங்களிலும், ஓய்விலும் உருவான ‘ஸ்கெட்ச் புக்’ வகை சார்ந்தவை.

சிற்பமும், புகைப்படக் கலையும் ஓவியத்தை அடிப்படையாகக் கொண்டதென்பதால் அவற்றின் மீதும் கொஞ்சம் ஈடுபாடு உண்டு. அவற்றையும் அவ்வப்போது பதிவிடும் எண்ணம் உள்ளது.

-ரஞ்சித் பரஞ்ஜோதி, பெங்களூர்.